1.5 தமிழ் இதழியல் வரலாறு

தமிழ் இதழியல் வரலாறு என்பது இந்தியாவிற்குள் மட்டும் முடிந்து விடுவது அன்று. தமிழர்கள் பரவியிருந்த இலங்கை, பர்மா, பிஜித் தீவுகள் முதலியனவும், கல்வி கற்கச் சென்ற இங்கிலாந்து முதலிய மேலைநாடுகளும் எல்லைகளாகும். இவ்வாறு தமிழ் கூறும் நல்லுலகம் முழுமையும் ஆய்வுக்கு உரியவை என்பார் இதழியலாளர் அ.மா.சாமி அவர்கள்.

1.5.1 முதல் தமிழ் இதழ்

இந்திய இதழாளர்கள் 1831ஆம் ஆண்டு வெளியான தமிழ்மேகசின் என்பதையே முதல் தமிழ் இதழாகக் கருதுகின்றனர். ஆயின், அ.மா.சாமி அரசாங்க வர்த்தமானி என்ற இதழை முதல் தமிழ் இதழாக நிறுவுகிறார்.

1802ஆம் ஆண்டு இலங்கை அரசின் சார்பில் ஆங்கிலம், தமிழ், சிங்களம் ஆகிய மும்மொழிகளில் ஓர் இதழ் வெளியிடப்பட்டது. அவ்விதழின் தமிழ்ப் பிரிவே அரசாங்க வர்த்தமானி ஆகும். இதனையே அ.மா.சாமி முதல் தமிழ் இதழாகக் கருதுகிறார்.

1.5.2 பிற இதழ்கள்

1812ஆம் ஆண்டில் மாச தினச்சரிதை என்ற தமிழ் இதழ் வெளிவந்ததைத் திருக்குறள் பதிப்பின் வழி அறிய முடிகிறது. தமிழ் நாட்டில் வெளிவந்த முதல் தமிழ் இதழாக இதனைக் குறிப்பிடலாம். மாசத் தினச் சரிதை என்றே புள்ளியின்றி அச்சான நிலையை அறிய முடிகிறது. (பார்க்க. படம்) இவ்விதழின் படி ஏதும் தற்போது கிடைக்கவில்லை.

1815ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கிறித்துவ திருச்சபையினரால் திருச்சபை இதழ் வெளியிடப்பட்டது.

1823ஆண்டு பிரெஞ்சு, தமிழ் ஆகிய இரு மொழிகளில் புதுவை அரசிதழ் வெளியானது. இவ்விதழ் முதலில் பிரெஞ்சு இந்திய அரசு நிர்வாக ஆவணம் என்ற பெயரில் வெளியானது. புதுவை அரசு இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பிறகே புதுவை அரசிதழ் எனப் பெயரிடப்பட்டது.

1829ஆம் ஆண்டு சுஜந ரஞ்சனி என்ற இதழ் பெங்களூரில் இருந்து வெளிவந்தது.

1831ஆம் ஆண்டு சென்னை கிறித்துவ சமயக் கல்விக் கழகம் தமிழ் மேகசின் என்ற இதழை வெளியிட்டது. இவ்விதழே தமிழின் முதல் இதழாக இதழியலாளர்களால் சுட்டப்படுகிறது.

1832ஆம் ஆண்டு புனித ஜார்ஜ் கெசட்டு என்ற சென்னை அரசின் இதழ் வெளியானது.

1833இல் இராசவிருத்தி போதினி என்ற இதழும், 1835இல் மெட்ராசு கிரானிகல் என்ற வார இதழும் வெளியாயின.

தொடக்கத்தில் தமிழ் இதழ்கள் கிறித்துவ மதச் சார்புடையனவாக வெளிவந்தன. இதற்கு மாற்றாக இந்துமதம், சித்தாந்தம், விரதம், புராணம், தர்க்கம் ஆகியவற்றின் அடிப்படையிலும் இதழ்கள் வெளிவந்தன. 1866ஆம் ஆண்டு வெளிவந்த கலாவர்த்தமானி குறிப்பிடத் தகுந்தது.

காலப்போக்கில் இந்திய விடுதலை இயக்கம், தமிழ் இலக்கியம் ஆகியவற்றிற்குத் தமிழ் இதழ்கள் இடமளித்தன எனலாம்.

  • இன்றைய நிலை
  • வெளிநாட்டினர் வருகையால் அச்சு உருவம் கொண்ட தமிழ்மொழியின் தற்போதைய நிலை உலகளாவியதாகும். 1997ஆம் ஆண்டு ஏக்நாத் என்பவர் வீடியோ இதழை வெளியிட்டார். இன்று தமிழ் மொழியின் நாள், மாத இதழ்கள் கணினி வலைப்பின்னலில் காட்சி அளிக்கின்றன.