4.1 இதழ்களின் சிறப்பு

இதழ்களுக்கு உரிய சிறப்பான பங்கினைச் சென்ற நூற்றாண்டில் அறிஞர்கள் சுட்டிக் காட்டினார்கள். புகழ் பெற்ற வரலாற்று அறிஞரான மெக்காலே இதழியலாளர்களை நான்காம் தூண் (Fourth Estate) எனக் கூறினார்.

எட்மண்ட் பர்க் என்பார் ‘நாடாளுமன்றத்தில் அரச குடும்பம் (Royalty), பிரபுக்கள் சபை (House of Lords), பொதுமக்கள் சபை (House of Commons) ஆகிய மூன்று தூண்கள் உள்ளன. ஆனால், அங்கே செய்தியாளர்கள் (Reporters) அமரும் இடத்தில்தான் இவை மூன்றையும் விட மிக இன்றியமையாததான நான்காம் தூண் உள்ளது’ என்று கூறினார்.

இந்தியாவில் நாடாளுமன்றம், நிர்வாகம், நீதி ஆகிய மூன்று அரசுத் துறைகளோடு இதழியலை நான்காவது தூணாகக் கருதலாம்.

4.1.1 மக்களாட்சியின் காவல்

மக்களாட்சியைக் காப்பதற்கு அரசியல் அமைப்பில் பல பிரிவுகள் உள்ளன. ஆனால், அவற்றையும் மேற்பார்வை இடும் கடமை இதழ்களுக்கு உண்டு. ஆகவேதான் இதழ்களைக் காவல் நாய் (Watch Dog) என்பர். உயர்ந்ததொரு நோக்கில், மக்களாட்சியின் காவல் தேவதையாக இதழ்கள் உள்ளன. (The Press is the guardian angel of democracy) எனக் கூறலாம். காவல் தேவதையாக இதழ்கள் சிறப்பாகச் செயல்படும் விதத்தைக் காணலாம்.

4.1.2 செய்திகளைப் பரப்புதல்

அன்றாடம் நடைபெறும் செய்திகளை மக்களுக்குப் பரப்புவது இதழ்களின் சிறப்பாகும். மக்களுக்குத் தேவையான செய்திகளையும் கருத்துகளையும் உடனுக்குடன் சரியான முறையில் வெளியிடுவது இதழ்களின் கடமையாகும். இதழ்கள் தாம் கொண்டிருக்கும் சார்பின் அடிப்படையில் தம்நலம் கருதிச் செய்திகளை இருட்டடிப்புச் செய்வது தவறானதாகும்.

4.1.3 செய்திகளை விளக்குதல்

இதழ்கள் செய்திகளைப் பல்வேறு முறைகளில் விளக்குகின்றன. விளக்கப்படங்கள், கேலிச்சித்திரங்கள், கேள்வி பதில்கள், சிறப்புக் கட்டுரைகள் ஆகிய பல முறைகளில் இதழ்கள் செய்திகளை விளக்குகின்றன. செய்திகளை விளக்குவதோடு அவை தொடர்பான கல்வியை வழங்குவதும், தேவையானால் அறிவுறுத்துவதும் இதழ்களின் சிறப்பாகும்.

செய்தியின் பின்னணி, மறைந்து கிடக்கின்ற விவரம் முதலியவற்றை வெளிக்கொணர்கின்ற புலனாய்வுப் பணியும் இதழ்களின் சிறப்பாகும். இந்த முறைமையில் தமிழில் புலனாய்வு இதழ்கள் தோன்றி வளர்கின்றன.

சான்று :

ஜூனியர் விகடன், தராசு, நக்கீரன்

4.1.4 விமர்சித்தல்

செய்திகளை வெளியிட்டு விளக்குவதோடு மட்டுமல்லாமல் அவை பற்றிய விமர்சனமும் விவாதமும் இதழ்களால் நடத்தப்பட வேண்டும். புதிய சட்டங்கள், அரசின் கொள்கைகள் பற்றிய மக்கள் கருத்துகளை அறிய முற்படலாம். இன்றைய காலகட்டத்தில் தமிழில் வெளிவரும் நாளிதழ்கள், வாரஇதழ்கள் போன்றவை இத்தகைய விமரிசனங்களை வெளியிட்டு, அவை பற்றிய மக்களது கருத்துக் கணிப்புகளைத் தொகுத்துத் தருகின்றன.

சான்று:

இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டித் தொடரின் வெற்றி - தோல்வி பற்றிய விமர்சனமும் மக்களது கருத்துக் கணிப்பும்.

4.1.5 கருத்தை உருவாக்குதல்

நாட்டு நடப்பு, சமுதாய நிகழ்வு, அரசியல் முதலியவை சார்ந்து பொதுக் கருத்துகளை உருவாக்குதலும் இதழ்களுக்கு உரிய சிறப்பாகும்.

இதழ்கள் தொடக்கத்தில் செய்தி அறிக்கைக் கோட்பாட்டினை (Bulletin Theory) நம்பின. அதாவது இதழ்களில் வெளியாகும் செய்திகளின் மூலம் வாசகர்களைத் தாம் ஆட்டிப்படைக்கக் கருதின. ஆனால், தற்போது இதழ்களைப் படிக்கும் வாசகர்கள் செய்திகளைச் சீர்தூக்கிப் பார்க்கின்றனர்; நல்லது கெட்டது உணர்ந்து நடக்கின்றனர். தமக்கெனத் தனித்த கொள்கைகளை, கருத்துகளை உருவாக்கிக் கொள்கின்றனர். அவற்றைக் குறிப்பிட்ட இதழ்களின் வழியாக வெளியிடுகின்றனர்.

சான்று :

நாளிதழ்களில் வெளியாகும் ஆசிரியருக்குக் கடிதங்கள் பகுதி.