4.3 இதழ்களின்
நோக்கம்
இதழ்களின் நோக்கம் பற்றித்
தமது சுயசரிதையில்
காந்தியடிகள் பின்வருமாறு உரைக்கின்றார். ‘மக்களின்
உணர்வினை அறிந்து, அதனை வெளியிடுவது இதழ்களின்
நோக்கங்களில் ஒன்றாக இருக்க வேண்டும். மற்றொன்று
மக்களிடம் உணர்வுப் பூர்வமான எண்ணங்களை உருவாக்க
வேண்டும். மூன்றாவதாகப் பொதுமக்களிடம் இருக்கும்
குறைகளையும் துணிச்சலாக எடுத்துரைக்க வேண்டும்’.
அவ்வகையில் இதழ்களின் நோக்கங்களைப் பொது நோக்கங்கள்,
சிறப்பு நோக்கங்கள் என வகைப்படுத்தி அறியலாம்.
4.3.1
பொதுவான நோக்கங்கள்
நாடு,
மொழி, இனம் கடந்து
இதழ்கள் ஆற்றும்
பணிகளைப் பொதுவான பணிகள் எனலாம். அவற்றை,
(i)
|
தெரிவித்தல் |
(ii) |
நெறிப்படுத்தல் |
(iii) |
பொழுதுபோக்கு |
(iv)
|
வியாபாரம் |
(v)
|
சேவை |
எனப் பகுத்து உரைக்கலாம்.
அவற்றை ஒன்றன்பின் ஒன்றாகக்
காண்போம்.
(i) தெரிவித்தல்
இதழ்களின் பொதுவான நோக்கங்களில்
தலையாயதும்
இன்றியமையாததும் ஆகிய நோக்கம் தெரிவித்தல்
ஆகும்.
சமுதாயம், சமயம், அரசியல், பொருளாதாரம், கலை, பண்பாடு
முதலியவை தொடர்பாக வெளியாகும் அனைத்துச்
செய்திகளையும் விருப்பு-வெறுப்பின்றி முழுமையாகத்
தெரிவித்தல் வேண்டும். அன்றாடம் மக்கள் அறிந்து கொள்ள
விரும்புகின்ற விலைவாசி, அரசியல் செய்திகள், விளையாட்டு
முடிவுகள், நடைபெறும் நிகழ்வுகள் முதலியவற்றையும் இதழ்கள் தெரிவித்தல் வேண்டும்.
(ii) நெறிப்படுத்தல்
இதழ்கள்
செய்திகளை அறிவிப்பதோடு நெறிப்படுத்துதல்
என்ற நோக்கமும் கொண்டு இலங்க வேண்டும். நெறிப்படுத்துதல்
என்ற பணியை இதழ்களின் கல்விப்பணி என்பர் ஆய்வாளர்கள்.
பிற
நாடுகளுடன் வியாபார ஒப்பந்தங்களில் இந்தியா
கையெழுத்திடுவதைத் தெரிவிப்பது இதழ்களின் முதன்மை
நோக்கம். அவ்வொப்பந்தங்களினால் ஏற்படும்
சாதக
பாதகங்களையும், சூழல்களையும், எதிர்கால நிலைகளையும்
மக்களுக்கு எடுத்துக்காட்டி விளக்குதல் நெறிப்படுத்தலாம்.
மேலும்,
இதழ்கள் வாசகர்களின் அறிவுப் பசிக்குத் தீனி
போடுகின்றன. உலக நிகழ்வுகள், கண்டுபிடிப்புகள்
முதலிய
செய்திகள் வாசகர்களை அறிஞர்களாக மாற்ற
வல்லவை
என்பது நினைவிற்கு உரியதாகும்.
(iii) பொழுதுபோக்கு
இதழ்களின் மற்றுமொரு
நோக்கம் பொழுதுபோக்கு ஆகும். வாசகர்களை மகிழ்விக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள்
உடையனவாக இதழ்கள் விளங்க வேண்டும். கருத்துக்கு விருந்தளிக்கும் கதைகள், கவிதைகள், கட்டுரைகள்
முதலியவற்றோடு வண்ண ஓவியங்கள், சித்திரத் தொடர்கள், பேட்டிகள் ஆகியவையும்
செய்தித் துணுக்குகளும் இதழ்களில் இடம் பெறுகின்றன. திரைப்படம் தொடர்பான
செய்திகள், விளையாட்டு, கலை பற்றிய நிகழ்வுகள், வியப்பான செய்திகள் முதலியவைகளும்
வாசகர்களைக் கவர்கின்றன. இவ்விதமான பொழுதுபோக்கு அம்சங்கள்
பெரும்பான்மையும் பருவ இதழ்களில் இடம் பெறுகின்றன.
செய்திகளை முதன்மையாகத்
தருகின்ற நாளிதழ்கள் இத்தகு பொழுதுபோக்கு அம்சங்களை நிறைவுபடுத்தும் விதமாகச்
சிறுவர், மகளிர் சிறப்பு மலர்களாக இணைப்புகளை வெளியிடுகின்றன.
சான்று: |
தினமணி நாளிதழ்
வெளியிடும் இளைஞர்மணி, வணிகமணி, வெள்ளிமணி, சிறுவர்மணி, தினமணி கதிர்
முதலிய இணைப்புகள். |
(iv) வியாபாரம்
இதழ்களின் மற்றுமொரு
நோக்கம் வியாபாரம் ஆகும். ஆதலால் இதழ்கள் வியாபார நோக்கத்தோடும் செயல்பட
வேண்டியுள்ளது. இதழ்களில் இடம்பெறும் விளம்பரங்கள் ஓரளவு வருவாயை ஈட்டுவதாக
உள்ளன. ஓரளவு வருமானம் உள்ள இதழ்கள் எவ்வித அரசியல் சார்புமின்றி, செய்திகளைத்
துணிச்சலாக வெளியிட முடியும்.
(v) சேவை
தெரிவித்தல், நெறிப்படுத்தல்,
பொழுதுபோக்கு, வியாபாரம் முதலிய பொதுவான நோக்கங்களைத் தாண்டி,
சேவை என்பதும் இதழ்களின் பொதுவான நோக்கமாக உள்ளது. நாட்டில்,
சமுதாயத்தில் ஏற்படும் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது இதழ்களின் சேவையாகும்.
தீண்டாமை, வரதட்சணைக் கொடுமை,
நீதி தவறுதல்
முதலியவற்றை இதழ்கள் சுட்டிக்காட்டித் தீர்வு காணுகின்றன.
தீராத நோய் உள்ள வறுமையாளருக்கு வாசகர்கள் மூலமாகப்
பொருள் திரட்டுவதும் சேவையே !
சான்றாகத் தமிழகத்தில்
பருவமழை இன்றித் தஞ்சை விவசாயிகள் பஞ்சத்தால் வாடியபோது விகடன் இதழ்க் குழுமம்
வாசகர்கள் மூலம் நிதி திரட்டி, பஞ்ச நிவாரணப் பணி ஆற்றியமையைக் குறிப்பிடலாம்.
4.3.2 இதழ்களின்
சிறப்பு நோக்கங்கள்
இதழ்களின் தனிப்பட்ட கொள்கை
மற்றும் அவற்றின் தோற்றத்திற்கான/வெளியீட்டுக்கான காரணங்களை இதழ்களின்
சிறப்பு நோக்கம் எனலாம். அதாவது இதழ்களின் பொருளடக்கம் என்பது அவ்வவ்விதழ்களின்
சிறப்பு நோக்கம் எனப்படுகிறது.
இந்திய இதழியல் வரலாற்றில்
தொடக்கக் கால இதழ்கள்
பெரும்பான்மையும் சமயப் பிரச்சாரத்துக்குத் தோன்றியவை என்ற
குறிப்பு ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வகையில், 1831ஆம் ஆண்டு சென்னை கிறித்துவ
சமயப் பரப்புக் கழகம் சார்பில் வெளியான தமிழ் மேகசீன்
என்ற இதழைக் குறிப்பிடலாம்.
தேச விடுதலையைப் பிரதானமாகக்
கொண்ட இதழ்களைப்
பற்றி இப்பாடத்தின் முதற்பகுதியில் பார்த்தோம்.
சமயம், தேச
விடுதலை முதலிய நோக்கங்கள் தாண்டியும் இதழ்கள் வெளியாயின. சில இதழ்கள்
தங்களது நோக்கங்களைச் சிறப்பாக முன் வைத்தன.
சான்று: |
ஞானபாநு
- இதழாசிரியர் : சுப்பிரமணிய
சிவா. இவ்விதழில், ‘உறங்கிக் கிடக்கும்
தமிழ்
ஜாதியினரை அறிவாகிய சாட்டையால் அடித்து
எழுப்பி, அவர்களுக்கு ஊக்கத்தையும் ஆக்கத்தையும்
உண்டுபண்ணி, அவர்களை முன்னிலையிற்
கொண்டுவர வேண்டுமென்பதே இவ்விதழின்
நோக்கம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. |
மற்றுமொரு சிறப்பு நோக்கம் கொண்ட இதழ் இராசாசியின்
விமோசனம் என்பதாகும்.
பூரண மதுவிலக்கு என்பதே இவ்விதழின் சிறப்பு நோக்கமாகும்.
விதவை மறுமணத்தை ஆதரித்து, காரைக்குடியிலிருந்து மரகதவள்ளி
அம்மையார் மாதர் மணம் இதழ் வெளியிட்டார்.
‘நாடும், மக்களும் வளர, வாழ நல்ல கதைகள் வேண்டும். கதைகள் மூலமாகவே
சிறந்த கருத்துகளைச் செப்பனிட்டுத் தரலாம்; வாழ்வை
வளப்படுத்தலாம் ; பண்பாட்டைப் பசுமையாக்கலாம்.
இந்த நற்கருத்தைத் தாங்கி இன்று கலாவல்லி பணியாற்ற
வருகிறாள்’ என்ற அறிவிப்போடு
வெளியான கலாவல்லி இதழின் நோக்கம் கதைகளை மட்டும் வெளியிடும்
இலக்கிய நோக்கமாகும்.
இவ்வாறு
தனித்த இதழ்கள் ஒவ்வொன்றும் அதன்
பொருளடக்க அடிப்படையில் சிறப்பு நோக்கம் கொண்டதாகக் கருதப்படலாம்.
|