2.5 செய்தியாளரின் கடமைகள்
எது செய்தியாகும் என்பதை முதலில் தெரிந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அது உண்மையானதா என்பதை அறியவேண்டும். அதன் மூலத்தை அணுகிச் செய்தியைத் தருவதுதான் செய்தியாளர் பணியாகும். காலத்தோடு போட்டியிட்டு விரைந்து செயல்படுகின்ற செய்தியாளர் வெற்றி பெறுகிறார்.
• நிறுவன நம்பிக்கை
செய்தியாளர், தான் ஒரு நிறுவனத்தைச் சார்ந்தவர் என்பதை மறந்து விடக் கூடாது. தான் சார்ந்திருக்கும் நிறுவனத்தின் நற்பெயரைக் கட்டிக் காப்பது என்றும் அவரது கடமையாகும். தான் சேகரித்த செய்திகளைத் தனது நிறுவனத்திற்கே தர வேண்டும். வேறு எந்த வகையிலும் ஆதாயம் கருதி, திரட்டிய செய்திகளைச் செய்தியாளர் பயன்படுத்தக் கூடாது.
• எழுத்தும் எளிமையும்
செய்தியாளர் தினமும் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும். சுருக்கமாக, தெளிவாக, எளிதில் புரியக் கூடிய வகையில் சொல்லுபவராக இருத்தல் வேண்டும். புதிர்போட்டு
வாசகர்களைப் பயமுறுத்தக் கூடாது.
• முன்னுரிமை
ஒவ்வொரு நாளும், அந்தக் கணத்தின் முக்கியச் செய்தியை, அன்றைய நாளின் கேள்விக் குறியான பிரச்சினையை முதலாவதாகவும், முதன்மையானதாகவும் எடுத்துக் கொண்டு அதைப் பரிசீலிக்க வேண்டும். எழுதும் பொழுது சாதாரண வாசகர்களை நினைவில்கொண்டு எழுத வேண்டும். அதற்கு ஏற்றவாறு நடையினை வகுத்துக் கொள்ள வேண்டும்.
• சுருக்கம்
செய்தித்தாளின் உயிர்நாடியே சுருக்கத்தில்தான் இருக்கிறது.
நீண்ட கட்டுரைகள் எவ்வளவுதான் சிறப்பு உடையனவாக இருந்தாலும் அவை மோசமானவை என்றே கருதப்படும். ஏனெனில் அவற்றைப் பெரும்பாலோர் படிப்பதில்லை. அவ்வாறு படித்தாலும் அவை வெகுவிரைவில் மறக்கப் பட்டுவிடும்.
• மனத்தில் கொள்ள வேண்டியவை
மக்கள் செய்தியாளரிடம் முழுநம்பிக்கை கொண்டிருக்கிறார்கள். அதனைச் செய்தியாளர் உணர்ந்து செயல்பட வேண்டும். செய்தியாளர் பல செய்தித்தாள்களைப் படிப்பதுடன் நின்று விடாமல், எதைச் சொல்ல வேண்டும், எதை மறுக்க வேண்டும், எதை வெளியிட வேண்டும் என்பதை மனத்தில் கொள்ள வேண்டும்.
செய்தியாளன் முக்கியமானதையும் சுவையானதையும் தேர்ந்தெடுத்து வெளியிட வேண்டும்.
முக்கியத்துவத்துக்கு அடுத்த படியாக, அதைக் கொடுக்கும்முறை அல்லது வாசகர்களின் பார்வை படும் கோணம் ஆகியவை எவ்வாறு இருக்க வேண்டும் என்பது முக்கியம்.
திறந்த மனம் படைத்தவராக இருக்க வேண்டும். பல திறப்பட்ட புலமையும், எதையும் தாங்கும் இதயமும்
கொண்டவராக இருக்க வேண்டும்.
தனது பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்
கொள்ளும் செய்தியாளரே சிறந்த செய்தியாளராகத் திகழ முடியும்.
இவைகள் அனைத்தும் செய்தியாளரின் முக்கியக்
கடமைகளாகும்.
|