1.1 பக்க அமைப்பு

செய்தித்தாள் வெறும் செய்திகளின் குவியலாக, அடுக்கி வைக்கப்பட்ட அச்சுக் குறிப்புகளாக இருந்தால் மட்டும் அது செய்தித்தாள் ஆகிவிட முடியாது. தரத்திற்கும் தேவைக்கும் ஏற்பச் செய்தித்தாளின் உரிய பக்கங்களில், உரிய இடங்களில் செய்திகளை அமைக்க வேண்டும். அத்துடன் ஒரு செய்தித்தாளில் இடம்பெறும் பல்வேறு வகையான உள்ளடக்கங்களையும் (contents) அவற்றின் திறன் அறிந்து பொருத்தமான இடங்களில் சுவைபடத் தருவதே பக்க அமைப்பு எனப்படும்.

செய்தித்தாளில் இடம் பெறுபவை வெறும் செய்திகள் மட்டுமல்ல. சிந்திக்கத் தூண்டும் தலையங்கம், துணுக்குகள், கருத்துப்படங்கள் (Cartoons), விளம்பரங்கள் (Advertisements), படக்கதைகள், பல்வேறு அட்டவணைகள், புகைவண்டி நேரம், நீர்மட்ட அளவு, வானிலை அறிக்கை, தொலைக்காட்சி ஒளிபரப்புகள், விலைவாசி நிலவரம், ராசிபலன், விளையாட்டுச் செய்திகள், திரைப்படம், இலக்கியச் செய்திகள், கட்டுரைகள், வானொலி, மாதிரி வினாவிடை இவை போன்று எத்தனையோ உள்ளடக்கங்கள் பல்வேறு நாளிதழ்களிலும் வெளிவருகின்றன. இவையெல்லாம் பரவலாகவும், பொருத்தமான இடங்களிலும் அமைவதே சிறந்த பக்க அமைப்பு ஆகும். ஆந்திரப் பிரபா, அமிர்தபசார் பத்திரிகா, மலையாள மனோரமா போன்ற நாளிதழ்கள் சிறந்த பக்க அமைப்புக் கொண்டவை என்று கருதப்படுகின்றன. தமிழில் தினத்தந்தி சிறந்த பக்க அமைப்புக் கொண்டதாகக் கருதப்படுகிறது.

பக்க அமைப்பு முறை தாளுக்குத் தாள் வேறுபடுகிறது. சில செய்தித்தாள்கள் நிலையான அமைப்பு முறை கொண்டிருக்க, சில இதழ்கள் அமைப்பு முறையை மாற்றிக் கொண்டிருக்கலாம். நிலையான பக்க அமைப்பால் (Fixed page make up) ஆசிரியருக்கு வேலை குறைவு. அத்துடன் படிப்பவர்களும் தாம் விரும்பிய பக்கத்தை, பழக்கம் காரணமாக இயல்பாகப் புரட்டி விடுவார்கள். பக்க அமைப்பை மாற்றுவதிலும் ஒரு நன்மை உண்டு. படிப்பவர்களுக்குப் புதுப்புது அமைப்புமுறை (Mixed page make up) ஒரு மகிழ்ச்சியைக் கொடுக்கலாம்.

முதல் பக்கம்

ஒரு செய்தித்தாளின் எல்லாப் பக்கங்களும் இன்றிமையாதவை என்று சொன்னாலும், முதல் பக்கம் இதழின் ஒரு முகப்பாகவும், முகப்பொலிவாகவும் அமைந்து விடுகிறது. படிக்கத்தூண்டும் ஆவலை ஊட்டுவதும் முதல் பக்கமே ஆகும். முக்கியமான செய்திகளை முதல் பக்கத்தில் போட வேண்டி இருப்பதால் காலை நாளிதழ்களில் இரவுக் கடைசிச் செய்தி கிடைத்த பிறகே முதல் பக்கம் அமைக்க முடியும். முதல் பக்கத்தில் முக்கிய அரசியல் செய்திகள், நெஞ்சைத்தொடும் செய்திகள் ஆகியவை இடம்பெறும். முதல் பக்கத்தில்தான் மிகப்பெரிய எழுத்துக்கள், பல்வேறு வண்ண எழுத்துக்கள் இவையெல்லாம் இடம்பெறும். பக்கம் கட்டுவது அதிலும் முதல்பக்கம் கட்டுவது என்பது தனிக்கலை ஆகும். இதழைப் படிக்கும் ஆர்வம், அதன் தரம் இவற்றை எதிரொலிப்பதை முதல்பக்கத்தின் முத்திரைகள் என்று கூடச் சொல்லலாம்.

மாதிரித் திட்ட வரைவு

ஒவ்வொரு இதழும் இதழ் முழுமையாகுமுன், ஒரு மாதிரித் திட்ட வரைவு (Dummy) கொண்டிருக்கும். ஒவ்வொரு உள்ளடக்கப் பகுதியும் ஒவ்வொரு இடத்தில் என்னென்ன வரவேண்டும் என்று ஒரு கற்பனை நிர்ணயம் செய்து வைத்திருக்கும். செய்திகள் கிடைக்கக் கிடைக்க அவற்றை அந்தந்த இடத்தில் பொருத்திவிடுவது எளிமையாக இருக்கும். கடைசியில் வரும் முக்கியச் செய்திகள் பெரும்பாலும் முதல் பக்கத்தில் ஏற்றப்படுவதால் முதல் பக்கத்தில்தான் மாற்ற வேண்டி இருக்கும்.

(1)

தலைமைச் செய்தி

(2)

இரண்டாவது முக்கியச் செய்தி

(3)

பிற செய்திகள்

(4)

செய்தி விமர்சனம்

(5)

நிழற்படம்

(6)

வானிலை

(7)

நீர் மட்டம்

(8)

உள்பக்கங்களில்

(9)

சார் ஒரு நிமிடம்

(10)

பிற விளம்பரங்கள்

செய்தித்தாள் மூன்று வகையான பக்க அமைப்புகளை மேற் கொள்ளும். (1) சமநிலைப் பக்க அமைப்பு (2) மாறுபட்ட சமநிலைப் பக்க அமைப்பு (3) கலப்புநிலைப் பக்க அமைப்பு.

சமநிலைப் பக்க அமைப்பு (Balanced Page Make up)

ஒவ்வொரு பக்கத்திலும் செய்திகள், பிற உள்ளடக்கங்கள் ஆகியவை இரண்டும் சமஅளவில் இருந்தால் அது சமநிலைப் பக்க அமைப்பு என்று பெயர் பெறும். அதாவது செய்திகளோடு விளம்பரங்கள், துணுக்குகள், கருத்துப் படங்கள், நிழற்படங்கள் ஆகியவையும் சம அளவில் அமைந்தால் அது சமநிலைப் பக்க அமைப்பு என்று அழைக்கப்படும். செய்திகள் மிகுந்து பிற உள்ளடக்கங்கள் குறைந்தோ, அல்லது செய்திகள் குறைந்து பிற உள்ளடக்கங்கள் மிகுந்தோ இல்லாமல் பார்த்துக் கொள்ளுதலே சமநிலைப் பக்க அமைப்பின் முக்கியப் பண்பாகும்.

மாறுபட்ட சமநிலைப் பக்க அமைப்பு (Contrast and Balanced Page Make up)

சமநிலைப் பக்க அமைப்போடு, சில மாறுபட்ட அமைப்பையும் இணைப்பது மாறுபட்ட சமநிலைப் பக்க அமைப்பு எனப்படும்.

கலப்புநிலைப் பக்க அமைப்பு (Mixed Page Make up)

சமநிலைப் பக்க அமைப்பு முறையினின்றும் முற்றிலும் மாறுபட்ட நிலை உடையதாக அமைந்தால் அது கலப்புநிலைப் பக்க அமைப்பு எனப்படும். அதாவது செய்தியோ, பிற உள்ளடக்கங்களோ எவையும் எந்த இடத்திலும் வரலாம். ஒவ்வொரு நாளும் கூட இவை இடமாற்றம் பெறலாம்.

தன் மதிப்பீடு : வினாக்கள் I

1.

‘பக்க அமைப்பு’ என்பதனை எங்ஙனம் விளக்கலாம்?

2.

‘உள்ளடக்கம்’ என்பது யாது? செய்தித்தாளின் உள்ளடக்கங்கள் ஐந்தைக் குறிப்பிடுக.

3.

நிலையான பக்க அமைப்பிற்கும், மாறிவரும் பக்க அமைப்புக்கும் உள்ள வேறுபாடு யாது?

4.

‘முதல் பக்கம்’ எங்ஙனம் முக்கியத்துவம் பெறுகிறது?

5.

‘மாதிரித் திட்ட வரைவு’ என்றால் என்ன?

6.

பக்க அமைப்பு வகைகள் எத்தனை? யாவை?