2.1 இதழ்களின் அமைப்பும் உள்ளடக்கமும்

இதழ்களின் வகைகளே அவற்றின் அமைப்பையும் உள்ளடக்கத்தையும் தீர்மானிக்கின்றன. எனவே, தமிழ் இதழ்களை,

(1)

நாளிதழ்

(2)

வெகுசன இதழ்

(3)

சிற்றிதழ்

என மூன்றாகப் பிரித்து அதன் வழி அந்தந்த இதழ்களின் அமைப்பும் உள்ளடக்கமும் பற்றி அறிவது எளிதாக அமையும்.

தினமணி, தினகரன், தினத்தந்தி, The Hindu, மாலைமலர், மாலைமுரசு முதலியன காலையிலும் மாலையிலும் வரும் நாளிதழ்களாக அமைகின்றன. எனவே இவ்விதழ்களின் அமைப்பு அல்லது வடிவம் இதழ்கள் உருவாக்கத்தில் மிக முக்கிய இடம் வகிக்கின்றது.

நாளிதழ்களின் அமைப்பு என்பதை அதன் அளவு, பக்கம், விலை முதலியன கட்டமைக்கின்றன. பெரிய அளவில் இருப்பதோடு முதல் பக்கமே தலையாயதாக விளங்குகிறது. மேலும் இதழின் பெயர், தேதி, விலை முதலியனவும் அமைப்பிற்கு வலுசேர்ப்பனவாக அமைகின்றன.

நாளிதழின் உள்ளடக்கமும், வார, மாத இதழ்களின் உள்ளடக்கமும் வேறானவையாக அமைகின்றன. மேலும் நாளிதழில் வலப்பக்கம் இடம்பெறும் செய்தி முக்கியமானதாகவும், பணம் அதிகம் தரும் செய்தியாகவும் அமைகின்றது. இன்னும் தெளிவாக அறிய வேண்டுமானால் நாளிதழின் உள்ளடக்கத்தைக் கீழ்க்காணுமாறு சொல்லலாம்.

(1)

செய்தி முன்னுரை

(2)

செய்தித் தலைப்பு

(3)

தலைப்பின் வகைகள்

(4)

தலைப்பெழுத்து வகைகள்

(5)

தலைப்பின் பயன்கள்

(6)

மற்றும் சில

செய்தி முன்னுரை

செய்தி இதழ்களில் இடம் பெறும் செய்திகள் அனைத்தையும் அனைவரும் படித்துவிட முடியாது. காலக் குறைவு, ஆர்வமின்மை காரணமாகப் பல செய்திகள் படிக்க இயலாமற் போகும். அதனால் செய்தியைச் சுருக்கமாகத் தருவதே செய்தி முன்னுரை (Lead) ஆகும். இச்செய்தித் தொடக்கத்தைப் படித்த பின், தேவையானால் செய்தித் தொடர்ச்சியினை மக்கள் படித்துக் கொள்வார்கள். தேவையில்லாத அல்லது தமக்கு ஆர்வமில்லாத செய்தியை விட்டுவிடுவார்கள். இங்ஙனம் தேர்வு செய்வதற்கு, தலைப்புக்குப் (Heading) பின் இந்த முன் செய்தியே ஈர்ப்புச் சக்தியாக உள்ளது.

எடுத்துக்காட்டு :

Chennai Jan.3. The Madras High Court has directed the Centre to pay pension to a freedom fighter’s wife ending her 22 years wait for the benefit.

செய்தித் தலைப்பு

உடலுக்குத் தலை எவ்வாறு முக்கியமானதாக விளங்குகின்றதோ அதைப் போல் செய்திப் பகுதிக்குத் தலைப்பு முக்கியமானதாகும். எந்திரம்போல் வேகமாகச் செயல்படும் மக்களின் வேகத்திடையே இந்தத் தலைப்புகள் மட்டும் படிக்கக் கூடியவர்களுக்கு இது மிக்க பயன் உடையது. அதனால் இது துல்லியமாகவும், ஆர்வம் ஊட்டக் கூடியதாகவும், விறுவிறுப்பானதாகவும் இருக்க வேண்டும்.

தலைப்புகளை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அவை (1) தலைமைத் தலைப்பு, (2) செய்தித் தலைப்பு. தலைமைத் தலைப்பு அரசியல் மாற்றம், போர், இயற்கை நிகழ்வு, பெரிய விபத்துகள், திடீர்த் திருப்பங்கள், அரசின் புதிய திட்டங்கள், உடன்படிக்கைகள், அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணங்கள் இவை பற்றியதாக அமையும். மேற்கூறியவற்றிற்கு அடுத்தபடியாக அமையும் செய்திகளின் தலைப்புகள் செய்தித் தலைப்பு எனப்படும்.

தலைப்பின் பாகுபாடுகள்

தலைப்பு வகைகளைப் பலரும் பல்வேறு விதமாகப் பாகுபடுத்துகின்றனர். அவற்றுள் முக்கியமான சிலவற்றைக் காண்போம்.

நெற்றித் தலைப்பு (Topic Headline)

சிறப்புத் தலைப்பிற்கு மேல் சிறிய எழுத்துக்களாலும் அடிக் கோடிட்டும் அமைவதே நெற்றித் தலைப்பு எனப்படும்.

எடுத்துக்காட்டு :

நேருவும் சூயென்லாயும் ஒரு மணி நேரம் பேச்சு அமைதி நடவடிக்கை தொடரும்

இடைநிலைத் தலைப்பு (Cross Line)

பக்க அமைப்பில் உள்ள பத்திகளில், பல பத்திகளை அடைத்துக் கொண்டு ஒரே தொடரில் இடைநிலையில் அமைவது இடைநிலைத் தலைப்பு எனப்படும்.

எடுத்துக்காட்டு :

தவறான தகவலால் திணறும் தீயணைப்புப் படையினர்.

முழுப்பக்க இடைநிலைத் தலைப்பு

இடப் பக்கத்திலிருந்து வலது பக்கம் வரை எட்டுப் பத்திகளையும் அடைத்தாற்போல் தலைப்பிடுவது முழுப்பக்க இடைநிலைத் தலைப்பு ஆகும்.

கூம்புத் தலைப்பு (Pyramid Headline)

ஒன்றிற்கு மேற்பட்ட தொடர்கள் வருகின்ற அமைப்புடைய தலைப்பில், புதுக்கவிதை போலத் தொடரை வெட்டி, எகிப்தின் பிரமிடு போலக் கூம்பு வடிவத்தில் அமைப்பதாகும்.

கவிழ் கூம்புத் தலைப்பு (Inverted Pyramid Headline)

ஒன்றிற்கு மேற்பட்ட தொடர்கள் வரும் தலைப்பில், பிரமிடு அமைப்பின் தலைகீழ் வடிவில் கவிழ் வடிவில் தலைப்பு அமைப்பது ஆகும்.

சிறுதொடர் மேல்தலைப்பு (Kicker method)

தலைப்பிற்கு மேல் சிறிய தொடராகச் சிறு தலைப்பு அமைப்பது சிறுதொடர் மேல்தலைப்பாகும்.

நீண்ட தொடர் மேல்தலைப்பு (Reverse Kicker method)

சிறப்புத் தலைப்பினை விட மேலே இருக்கும் தலைப்பு நீளமானதாகவும், சிறிய அளவு எழுத்துகளாலும், அடிக்கோடிட்டும் அமைவது  நீண்ட தொடர் மேல்தலைப்பாகும்.

கிளர்ச்சியூட்டும் தலைப்பு (Exciting Headline)

படிப்பவர்களுக்குக் கிளர்ச்சியூட்டும் வகையில் எடுப்பான துடிப்பான சொற்களால் அமைவது இத்தலைப்பாகும்.

பரபரப்பூட்டும் தலைப்பு (Sensational Headline)

படிப்பவர்கள் பரபரப்புடன் செய்தியைப் புரட்டிப் படிக்கத் தூண்டும் வகையில் அமையும் தலைப்பு இது.

தீவிரத் தலைப்பு (Radical Headline)

அதிரடியாகத் தரும் தலைப்பு ஆகும். பொதுவாக அரசியல் செய்திகள் இங்ஙனம் அமையும்.

மிதவாதத் தலைப்பு (Conservative Headline)

தீவிரப் போக்கின்றி மிதவாத நிலையில் அமைப்பது மிதவாதத் தலைப்பாகும்.

உந்து தலைப்பு (Topical Headline)

தலைப்பைப் படித்த அளவிலேயே முழுச் செய்தியையும் படிக்கத் தூண்டும் தலைப்பு உந்து தலைப்பு எனப்படும். இது சிறப்புத் தலைப்பிற்கு மேல் ஒரு தலைப்பாக அமைந்து, அடிக்கோடும் போடப்பட்டிருக்கும்.

மேற்கோள் குறியுடைத் தலைப்பு (Quotation Headline)

தலைப்பின் இரு புறங்களிலும் மேற்கோள் குறியிடப்பட்ட தலைப்பு மேற்கோள் குறியுடைத் தலைப்பு எனப்படும்.

வினாத் தலைப்பு (Question Headline)

வினா முறையில் அமையும் தலைப்பு இதுவாகும்.

எடுத்துக்காட்டு : இந்த வாரத்தில் தேர்தல் அட்டவணை?

நேர் வரிசை அடுக்குத் தலைப்பு (Flush left)

இவ்வகையில் தலைப்பு ஒரே சீரான நேர்வரிசை அடுக்குகளாக அமையும்.

எடுத்துக்காட்டு : தினமணி இதழுக்கு விருது

மாறுவரிசை அடுக்குத் தலைப்பு (Step line)

தலைப்பு அடுத்து வரும் வரிகள் சற்று உள் அடங்கி இருத்தல் இவ்வகையில் அடங்கும்.

உடுக்கைத் தலைப்பு

இதில் உடுக்கை வடிவத்தில் தலைப்பு ஒருவரி உள் அடங்கியும், முன் பின் உள்ள வரிகள் சற்று முன்னால் தொடங்குவனவாகவும் அமையும்.

தலைப்பு எழுத்து வகை

மேற்கூறிய தலைப்புகள் செய்திகளை வாசிக்கும் ஆவலை ஊட்டுகின்றன. அத்துடன் இவை அச்சடிக்கப்படும் எழுத்தின் அளவும் செய்தித்தாள் வாசிப்பில், விற்பனையில் முக்கிய இடம் பெறுகின்றன. மிகப் பெரிய எழுத்துகளில் வரும் தலைப்புகளும் உண்டு. தினத்தந்தி, மாலைமுரசு, மாலைமலர் இவற்றில் இத்தகைய மிகப்பெரிய எழுத்துகளைக் காண முடியும். செய்தியின் முக்கியத்துவமும் எழுத்தின் அளவை நிர்ணயிக்கும்.

தலைப்புகள் பல்வேறு வகையில் அமைவதனால் நிறையப் பயன் உண்டு. படிப்பவர்கள் செய்தியைப் படிப்பதற்கு ஒரு தூண்டுகோலாகவும், புதிய உத்திகள் காரணமாக ஓர் ஆர்வத்தை ஊட்டுவதாகவும் தலைப்புகள் அமைகின்றன. பெரிய எழுத்துகள், மாபெரும் எழுத்துகள் இவையும் ஆர்வத்தைத் தூண்டுகின்றன. அதிகம் எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்களும் செய்தித்தாள் படிக்கும் ஆர்வம் பெறுகின்றனர். அடிக்கோடிட்டுச் செய்தித் தலைப்பைத் தருவதனால், அது இன்றிமையாதது என்பது விளக்கமாகிறது. அதனால் தலைப்புகளே பாதிச் செய்தியைத் தெரிவித்து விடுகின்றன. மீதமுள்ள பகுதியையும் படிக்கும்படி அவையே ஆர்வமும் ஊட்டிவிடுகின்றன. இவை யாவும் இதழ்களின் பொது உள்ளடக்கமாக அமையினும் நாளிதழ்களுக்கே உரிய முக்கியப் பண்பாகவும் உள்ளடக்கமாகவும் அமைகின்றன. செய்தித்தாளில் உள்ளடக்கங்கள் சில, அறியாத பாமர மக்களைத் தூண்டுவனவாக அமைகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், ராசி பலன், வானிலை, அங்காடி விலை நிலவரம், வரி விளம்பரம், புத்தக விமர்சனம், மக்கள் உபயோகப் பொருட்களின் விளம்பரம் முதலியன குறிப்பிடத்தக்கனவாக அமைகின்றன. மேலும் நாளிதழ்கள் பல இலவச இணைப்புகளையும் தருகின்றன. அவை வரும் நாள், பெயர் முதலியன அந்த இலவச இணைப்பின் உள்ளடக்கத்தைத் தீர்மானிக்கின்றன. நாளிதழ்கள் பெரும்பாலும் மாவட்டவாரியாக வருகின்றன. எனவே அந்தந்த மாவட்டங்களின் செய்திகள் அந்தந்த மாவட்டங்களில் வெளியாகும் இதழ்களில் முக்கியச் செய்தியாக அமைகின்றன. மேலும் மாநிலச் செய்திகள், மாநகரச் செய்திகள், இந்தியச் செய்திகள், உலகச் செய்திகள், விளையாட்டுச் செய்திகள், திரைப்படச் செய்திகள் முதலியனவும் நாளிதழின் உள்ளடக்கத்திற்குக் கூடுதல் ஈர்ப்பை மக்களிடம் ஏற்படுத்தத் துணை செய்கின்றன.

தன் மதிப்பீடு : வினாக்கள் I

1.

இதழ்களின் வகையே அவற்றின் அமைப்பையும் உள்ளடக்கத்தையும் வரையறை செய்கின்றனவா?

2.

நாளிதழ்களின் அமைப்பை விளக்குக.

3.

நாளிதழின் உள்ளடக்கம் குறித்து எழுதுக.