2.1 வேற்றுமைத் தொகை


     வேற்றுமை எட்டு வகைப்படும். அவை,

     1) முதல் வேற்றுமை
     2) இரண்டாம் வேற்றுமை
     3) மூன்றாம் வேற்றுமை
     4) நான்காம் வேற்றுமை
     5) ஐந்தாம் வேற்றுமை
     6) ஆறாம் வேற்றுமை
     7) ஏழாம் வேற்றுமை
     8) எட்டாம் வேற்றுமை

    இவற்றில் முதல் வேற்றுமை, எழுவாய் வேற்றுமை எனப்படும்.
எட்டாம் வேற்றுமை, விளி வேற்றுமை எனப்படும். எழுவாய்
வேற்றுமை, விளி வேற்றுமை இரண்டிற்கும் உருபுகள் இல்லை.
ஏனைய ஆறு வேற்றுமைகளுக்கும் உருபுகள் உள்ளன.

    ஆறு வேற்றுமை உருபுகளும் வெளிப்பட்டு நின்றும்
மறைந்து நின்றும் சொற்றொடரில் தம் பொருள் உணர்த்தும்.
உருபுகள் தோன்றாமல் மறைந்து நின்று சொற்றொடரில்
பொருள் உணர்த்தும் தொடர்களே வேற்றுமைத் தொகைநிலைத்
தொடர்கள் எனப்படும்.

    வேற்றுமைகளும் அவற்றிற்குரிய உருபுகளும் கீழே
கொடுக்கப்பட்டுள்ளன.

     1) இரண்டாம் வேற்றுமை - ஐ
     2) மூன்றாம் வேற்றுமை - ஆல், ஆன், ஒடு, ஓடு
     3) நான்காம் வேற்றுமை - கு
     4) ஐந்தாம் வேற்றுமை - இன், இல்
     5) ஆறாம் வேற்றுமை - அது, ஆது
     6) ஏழாம் வேற்றுமை - கண்

     தொகை என்பது உருபு மறைதல் என்பதால்
தொகைநிலைத் தொடரில் வேற்றுமைத் தொகை என்பது
இரண்டாம் வேற்றுமை முதல் ஏழாம் வேற்றுமை வரை உள்ள
ஆறு வேற்றுமைத் தொகைகளையே குறிக்கும்.

     இரண்டு முதலாம் இடைஆறு உருபும்
     வெளிப்படல் இல்லது வேற்றுமைத் தொகையே
                    (நன்னூல் - 363)

     இவ்வேற்றுமைத் தொகைநிலைத் தொடர், வேற்றுமை உருபு
மட்டும் மறைந்து வருதல், வேற்றுமை உருபும் பயனும் சேர்ந்து
மறைந்து வருதல் என இரண்டு வகைப்படும்.

எடுத்துக்காட்டு :

பால் குடித்தான் - இரண்டாம் வேற்றுமைத் தொகை
பால் குடம் - இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
தலை வணங்கினான் - மூன்றாம் வேற்றுமைத் தொகை
பொன் வளையல் - மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
என் மகள் - நான்காம் வேற்றுமைத் தொகை
குழந்தைப் பால் - நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்க தொகை
ஊர் நீங்கினான் - ஐந்தாம் வேற்றுமைத் தொகை
வாய்ப்பாட்டு - ஐந்தாம் வேற்றுமைத் உருபும் பயனும் உடன்தொக்க தொகை
நண்பன் வீடு - ஆறாம் வேற்றுமைத் தொகை
மலைக் கோயில் - ஏழாம் வேற்றுமை
தண்ணீர்ப் பாம்பு - ஏழாம் வேற்றுமைத் உருபும் பயனும் உடன் தொக்க தொகை


    ஆறாம் வேற்றுமை, உருபு தொக்க தொகையாக மட்டுமே
வரும் ; உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையாக
வருவதில்லை.