4.3 எழுத்து மாறாச் சொற்றொடர்கள்

     சில சொற்றொடர்களில் இடம் பெறும் எழுத்துகளைப்
பிரித்துக் கூறுவதாலும் சேர்த்துக் கூறுதாலும் பொருள்
வேறுபாடு எழும்.

(எ-டு)

     தலைவிதிவசம்
     நாகன்றேவன்போத்து
     பலகையொலி
     தாமரைக்காடு

     இத்தொடர்கள் என்ன பொருளில் கூறப்பட்டன என்பது
கேட்போர்க்கும் படிப்போர்க்கும் விளங்கா நிலையில் உள்ளன.

     முதல் தொடரைத் ‘தலைவிதி - வசம்’ எனப் பிரித்தால்
‘தலைவிதியின் காரணமாக’ என்றும் ‘தலைவி - திவசம்’
எனப்பிரித்தால் ‘மனைவிக்குத் திவசம்’     என்றும் இரு
பொருள்படும்.

     இரண்டாவது தொடரை ‘நாகன்றே வன்போத்து’ எனப்
பிரித்தால், ‘இளம் பெண்எருமை அன்று, முதிர்ந்த எருமைக்
கடா’ என்றும், ‘நாகன் றேவன் போத்து’ எனப் பிரித்தால்
‘நாகனும் தேவனும் போத்தும்’ என்றும் பொருள்படும்.

     மூன்றாவது தொடரைப் பலகை ஒலி எனப் பிரித்தால்
‘மரப்பலகையின் ஒலி’ என்றும், ‘பல கை ஒலி’ எனப் பிரித்தால்
‘பல கைகள் எழுப்பும் ஒலி’ என்றும் பொருள்படும்.

    நான்காவது தொடரைத் ‘தாமரைக் காடு’ எனப் பிரித்தால்
‘தாமரை நிறைந்துள்ள நீர்நிலை’ என்றும், ‘தா மரைக் காடு’
எனப் பிரித்தால் ‘தாவுகின்ற மான்கள் நிறைந்த காடு’ என்றும்
பொருள்படும்.

     இவ்வாறு வடிவ வேறுபாடு இல்லாமல் ஒலி அழுத்தம்
இடைவெளி ஆகியவற்றால் பொருள் வேறுபடும் தொடர்களைத்
தக்க பொருள் விளங்குமாறு இசையறுத்துக் கூறுதல் மரபு.

     இசையறுத்துக் கூறுதல் என்பது, கூறப்பட்ட சொற்களின்
இறுதியும் முதலும் தோன்ற, ஒலி வேறுபாடு தோன்றக் கூறுதல்.


     எழுத்தியல் திரியாப் பொருள்திரி புணர்மொழி
     இசைத்திரி பால்தெளிவு எய்தும் என்ப
             (நன்னூல் - 391)

தன்மதிப்பீடு : வினாக்கள் - I

1)

மரபு என்றால் என்ன?

(விடை)
2)
பல பொருள் தொகுதியின் ஒரு சொல்லிற்கு
எடுத்துக்காட்டுத் தருக.
(விடை)
3)
பல பொருள் தொகுதியை எவ்வினையால் முடிக்க
வேண்டும்?
(விடை)
4)
எழுத்து மாறாச் சொற்றொடர் என்றால் என்ன?
(விடை)
5)
எழுத்து மாறாச் சொற்றொடர்களைப் பொருள்
வேறுபடுத்துவது எவ்வாறு? எடுத்துக்காட்டுத் தருக.
(விடை)
6)
இசையறுத்துக் கூறுதல் என்றால் என்ன?
(விடை)