4.4 ஒரு பொருள் குறித்த பல பெயர்கள் | |
ஒரு பொருளைக் குறித்துப் பல பெயர்கள் ஒரு தொடரில் இடம் பெறுமானால், அப்பெயர்கள் எல்லாம், பொருள் ஒன்றையே குறிக்கின்றன என்பதை வெளிப்படுத்த ஒரு முடிக்கும் சொல்லைக் கொண்டு முடிப்பது மரபு. (எ-டு) பொய்யில் புலவர், முப்பால் ஆசிரியர், தமிழ்வேதம், தந்த தலைமகன், திருவள்ளுவர் வந்தார். இத்தொடரில் பொய்யில் புலவர்,முப்பால் ஆசிரியர், தமிழ்வேதம், தந்த தலைமகன் என்பன எல்லாம் திருவள்ளுவரையே குறிப்பிடுகின்றன. எனவே வந்தார் என்னும் ஒரு முடிக்கும் சொல்லைக் கொண்டு முடிப்பது மரபாகும். சில சமயங்களில் மேலே குறிப்பிட்டவாறு, பல பெயர்களும் ஒரே பொருளைக் குறிப்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றால், அத்தொடரில் இடம் பெறும் ஒவ்வொரு பெயர்க்கும் ஒரே வினையைக் கொடுத்து முடிப்பதும் மரபாகும். (எ-டு) முக்கண்ணனே வருக; நஞ்சுண்ட கண்டனே வருக; மாதொரு பாகனே வருக; தென்னாடுடையே சிவனே வருக இத்தொடரில் முக்கண்ணன், நஞ்சுண்ட கண்டன், மாதொரு பாகன், தென்னாடுடைய சிவன் என்னும் பெயர்கள் எல்லாம் சிவனாகிய ஒரு பொருளையே குறித்து வந்துள்ளன. அந்நிலையில் அப்பெயர்கள் ஒவ்வொன்றிற்கும் வருக என்னும் ஒரே வினையைப் பயன்படுத்துவது மரபாகும். ஒருபொருள் மேல்பல பெயர்வரின் இறுதி ஒருவினை கொடுப்ப தனியும் ஒரோவழி (நன்னூல் - 392) |