4.5 இயற்பெயரும் சிறப்புப் பெயரும் | |
ஒருவரை அல்லது ஒரு பொருளைக் குறிக்கும் இயற்பெரும் சிறப்புப் பெயரும் ஒரு தொடரில் இடம் பெறுமாயின் சிறப்புப் பெயரை முன்னர்ச் சொல்லி இயற்பெயரைப் பின்னர்ச் சொல்வது மரபு. (எ-டு) பேரறிஞர் அண்ணாதுரை இத்தொடரில் பேரறிஞர் என்பது சிறப்புப் பெயர். அண்ணாதுரை என்பது இயற்பெயர். இவ்விரண்டில் சிறப்புப் பெயரை முன்னரும் இயற்பெயரைச் சிறப்புப் பெயரின் பின்னரும் பயன்படுத்தலே மரபு. சிறப்புப் பெயர்கள், திணை, நிலம், சாதி, குடி, உடைமை, குணம், தொழில், கல்வி ஆகியன பற்றி வரும். (எ-டு) குறிஞ்சிக் கபிலன் - திணை சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் - இடம் (ஊர்) அந்தணர் நச்சினார்க்கினியர் - சாதி பாண்டியன் அறிவுடைநம்பி - குடி செல்வர் மணியன் - உடைமை நற்சோணை - குணம் நடிகர் கணேசன் - தொழில் முனைவர் அமுதன் - கல்வி இச்சிறப்புப் பெயரும் இயற்பெயரும் மாறிவருவதும் உண்டு. (எ-டு) உ.வே.சாமிநாத ஐயர் திணைநிலம் சாதி குடியே உடைமை குணம்தொழில் கல்வி சிறப்பாம் பெயரோடு இயற்பெயர் ஏற்றிடின் பின்வரல் சிறப்பே (நன்னூல் - 393) |