பண்பான மாணவர்களே! இதற்குமுன்னர் நீங்கள் பாவின்
உறுப்புகளான எழுத்து, அசை, சீர், தளை, அடி,
தொடை
ஆகியவற்றைப் படித்திருப்பீர்கள். இனி, இவ்வுறுப்புகளால் ஆகிய
‘பா’
வின் இலக்கணம் காணலாம்.
பாக்கள் அடிப்படையாக 1) வெண்பா
2) ஆசிரியப்பா
3) கலிப்பா 4) வஞ்சிப்பா என நான்கு வகைப்படும். இவற்றுடன்
வெண்பாவும் ஆசிரியப்பாவும் கலந்து வரும் மருட்பா (மயங்கிய-
கலந்த பா)வையும் சேர்த்துக் கொள்ளலாம்.
இப்பாக்களின்
முழுமையான, விரிவான இலக்கண அமைப்புகளைப் பின்னர்
வரவிருக்கும் பாடங்களில் பயில இருக்கிறீர்கள். வகைகளின்
உட்பிரிவுகள், அவற்றின் பெயர்க்காரணங்கள்,
ஓசைகளின்
அமைப்பு ஆகியவற்றைப் பின்னர்க் காண இருப்பதால் இங்கு
அவை சுருக்கமாகச் சுட்டிக் காட்டப்படுகின்றன. |