6.1 இலக்கியமும் பிறகலைகளும்

இலக்கியம் ஓர் இனிய கலை வடிவம் ஆகும். இலக்கியத்தைக்
கேட்பதாலும், எழுதுவதாலும், பேசுவதாலும், உணருவதாலும்,
காட்சியாக வரைவதாலும், காட்சியாகக் காண்பதாலும் மகிழ்ச்சி
அடைய இயலும். இலக்கியம் என்கிற கலை வடிவம் மற்ற
எல்லாக் கலைகளுக்கும் மையமாக அமைவதாகும்.

ஒரு செய்யுளை இசையோடு இனிமையாகப் பாடினால்,
கேட்பவர் மகிழ்ச்சி அடைவார். இதன் மூலம் இலக்கியம்
இசையோடு கலந்து விடும் கலையாகி விடுகிறது.

ஒரு செய்யுளை அபிநயம் பிடித்து நடனம் ஆடினால், அது
நாட்டியக் கலையாக அமைந்து விடுகிறது. அதே செய்யுள் தரும்
பொருளை, இருவர் உரையாடும் நாடகக் காட்சியாக மாற்றி
நடித்தால் நாடகக் கலை உருவாகி விடுகிறது. இதையே
திரைப்படமாக (Movie), அசையும் படமாக (Animated Picture),
தொலைக்காட்சித் தொடராக (Television Serial), காட்சிப்
படமாக (Video) ஆக்கவும் இயலும். இதன் மூலம் இலக்கியம்
நிகழ்கலையுடன் இணைந்து விடுகின்றது. இவ்வாறாக இலக்கியக்
கலை மற்ற கலைகளுக்கு மையமாகவும், மற்ற கலைகள்
இலக்கியத்தைச் சார்ந்து அமைவனவாகவும் விளங்குகின்றன.

ஓவியக் கலையும் இலக்கியத்தோடு
இணைந்து வாழும் ஒர் கலையாகும்.
இலக்கியம் தரும் அழகான காட்சிகளை,
ஓவியமாக்க இயலும். இரவிவர்மா என்ற
ஓவியர் நளன் கதையில் இடம்பெறும்
“தமயந்தி - அன்னம் தூது உரையாடல்”

பெரிய படத்தைக் காண

காட்சியை அழகான ஓவியமாக ஆக்கினார். இதன் மூலம் இந்த
ஓவியத்தைக் காணும் ஒருவர் நளவெண்பாவை எண்ண இயலும்.
நளவெண்பாவைப் படித்த ஒருவர் இந்த ஓவியத்தை நினைத்துப்
பார்க்க இயலும். இவ்வாறு இலக்கியத்திற்கும், ஓவியத்திற்குமான
இருநிலைத் தொடர்பை மேற்கண்ட எடுத்துக்காட்டைக் கொண்டு
அறியலாம்.

சரி; இலக்கியமே அதாவது இலக்கியத்தில் இடம் பெறும்
மொழியே, சொல்லே, எழுத்தே ஓவியம் போல அமைந்தால்
இன்னும் எவ்வளவு சிறப்பாக இருக்கும். அவ்வாறு எழுத்துகள்
செய்யுளுக்குள்ளேயே ஓவியமாக மடங்கி நிற்கும் முறையே,
அமைப்பே சித்திரகவி எனப்படுகின்றது.