4.0 பாட முன்னுரை


    அரசனைப் பற்றியும், அவனது ஆட்சிமுறை பற்றியும், அரசனுக்கு
உறுதுணையாக அமைந்துள்ள அமைச்சனைப் பற்றியும் அரிய பல
தத்துவங்களை வழங்கியுள்ளார் வள்ளுவர். அரசன் ஆட்சி
செய்கின்ற நாட்டைப் பற்றியும், ஒரு நாடு என்பது எவ்வாறு இருக்க
வேண்டும் என்பது பற்றியும் வரையறுத்துள்ளார். அதேபோல, ஒரு
நாட்டில் வாழும் குடிமக்கள் எவ்வாறு இருக்க வேண்டும் என்பது
பற்றியும் பல குறட்பாக்கள் மூலம் தெரிவுபடுத்தியுள்ளார்.

    பொருட்பாலில், 13 அதிகாரங்களில், அறிவாலும், ஒழுக்கத்தாலும்,
செயலாலும் உயர்ந்த குடியில் பிறந்தாரது தன்மையைக் கூறுகிறார்
வள்ளுவர்.

    பிறிதொரு இடத்தில் கூட, தூதுவனுக்கு உரிய பண்பைச் சுட்ட
விரும்பிய வள்ளுவர்,


அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல்வேந்துஅவாம்
பண்புடைமை தூதுஉரைப்பான் பண்பு



(குறள்: 681)


(ஆன்ற = மாட்சிமை சிறந்த, அவாம் = விரும்பும்)

என்று குறிப்பிடுகிறார்.

    ஓர் அரசனுக்குத் தூதுவனாகச் செயல்படுபவனுக்கு உள்ள
இலக்கணம் அல்லது தகுதியைச் சுட்டும்பொழுது அன்புடைமை
உள்ளவனாக இருப்பதோடு, சிறந்த குடியில் பிறந்த பெருமை
உடையவனாகவும், பண்புடையவனாகவும் இருக்க வேண்டும் என்று
குறிப்பிடுகிறார்.

    இதிலிருந்து என்ன தெரிகிறது? குடிப்பெருமை என்பது ஒரு
மனிதனை அடையாளம் காட்டுவதற்கு உரிய அல்லது மதிப்பீடு
செய்வதற்கு உரிய உரைகல். இதைப்பற்றி வள்ளுவர் கூறும்
கருத்துகள் இந்தப் பாடத்தில் தொகுத்துக் கூறப்பட்டுள்ளன.