|
4.1
குடிமையும் பண்பும்
|
அரசனைப் பற்றியும், அவனது ஆட்சிமுறை பற்றியும்,
அரசனுக்கு
உறுதுணையாக அமைந்துள்ள அமைச்சனைப் பற்றியும் அரிய பல
தத்துவங்கதமிழர்களின் பண்புகளையும், பழக்க வழக்கங்களையும்,
நம்பிக்கைகளையும் வெளிப்படுத்தும் வகையில், பல பழமொழிகள்
வழங்குகின்றன. அவற்றுள் ஒன்று, குடிப்பிறப்பைப் பற்றிக் கூறுகிறது.
நல்ல குடியில் பிறந்தவர்கள் எவ்வளவு துன்பம் நிகழ்ந்தாலும்,
நெருக்கடி ஏற்பட்டாலும், வறுமை வந்தாலும், தன் நிலையிலிருந்து
கொஞ்சமும் நெகிழ மாட்டார்கள். எப்படியாவது வாழவேண்டும்
என்பதற்காக எந்தத் தவற்றையும் செய்ய மாட்டார்கள்.
இக்கருத்தினைக்
|
‘கெட்டாலும்
மேன்மக்கள் மேன்மக்களே
சங்கு சுட்டாலும் வெண்மைதரும்’
|
என்று நீதிநூல் பழமொழி எடுத்துரைக்கிறது.
சங்கு
வெண்மையானது. தீயில் சுடுவதற்கு முன்னரும்
வெண்மையாக இருக்கும். சுட்ட பின்னரும் தனது தன்மையிலிருந்து
மாறாமல் வெண்மையாகவே இருக்கும். அதைப்போல, நல்ல குடியில்
பிறந்தவர்கள், வளமான வாழ்க்கை வாழும்போது எவ்வாறு
இருப்பார்களோ, அவ்வாறே வறுமையோ, கேடோ வந்தபோதும்,
முன்னைய நிலையிலிருந்து வழுவாமல் ஒரே தன்மையில்
இருப்பார்கள். அது அவர்களது பண்பாடு.
எனவே,
ஒருவன் பிறக்கின்ற குடி என்பது மிகவும் இன்றியமையாத
ஒன்று என்பதனை உணர்ந்த வள்ளுவர், குடிப்பெருமையின்
சிறப்பைப் பற்றிய பல கருத்துகளைக் கூறுகின்றார்.
• பண்பு
ஒருவருக்கு
அல்லது ஒரு பொருளுக்கு இருக்கும் தன்மையைப்
பண்பு என்று அழைப்பர். பஞ்சு எவ்வாறு இருக்கும் என்று
கேட்டால் அது மென்மையாக இருக்கும் என்று குறிப்பிடுகிறோம்.
மென்மை என்பது பஞ்சின் தன்மை.
அது அதன் பண்பு என்கிறோம்.
அதேபோல் மனிதனிடமும் சில இயல்புகள் அல்லது தன்மைகள்
இயற்கையாகவே அமைந்து இருக்கும். சில பண்புகள் குடிப்பிறப்பால்
அல்லது சூழலால் அமையும்.
மனிதனது
செயல், நடத்தை முதலியவை அவனது பண்பை
வெளிப்படுத்தும். அவன் வெளிப்படுத்தும்
பண்பை
அடிப்படையாகக் கொண்டு அவன் எத்தகையவன்
என்பதை
மதிப்பிடுகிறோம்.
நல்ல
குடியைச் சார்ந்தவனிடம் நல்ல பண்புகள் இருக்கும். அவன்
யாரிடமும் எளிமையாகப் பழகக்கூடியவன். தவறு செய்ய
நாணுவான். உயிரைவிட மானத்தை மலோகக் கருதுவான்.
|
4.1.1 எளிமை
|
ஒருவனது பழகும் முறை அவனது பண்பாட்டைப் புலப்படுத்தும்.
ஒருவன் பிறரோடு பழகும் முறையிலிருந்து அவன் எத்தகைய
பண்பாட்டை
உடையவன்
என்பதைத் தீர்மானிக்கலாம் அல்லது அறிந்து
கொள்ளலாம். நல்ல பண்புகள் உடைய ஒருவன், எல்லோரிடமும்
எளிமையாகப் பழகக் கூடிய தன்மை உடையவன். எனவே
எல்லோரிடத்திலும் எளிய முறையில் பழகும் தன்மையினால் பண்பு
உடையவராக வாழும் நல்வழியை எளிதில் அடையலாம் என்கிறார்
வள்ளுவர்.
|
எண்பதத்தால் எய்தல் எளிதுஎன்ப யார்மாட்டும்
பண்புஉடைமை என்னும் வழக்கு
|

(குறள்: 991)
|
|
(எண் (எண்மை) = எளிமை, எய்தல் = அடைதல்,
பதம் = பக்குவம்/பொழுது, மாட்டும் = இடத்தும், வழக்கு =
வழி)
எளிமையாக இருத்தல் மூலம்
பண்புடைமை என்னும் தகுதியைப்
பெறல் எளிது. மேற்குறிப்பிட்ட இந்தப் பண்பு, நல்ல
குடிப்பிறந்தாரிடம் இருக்கக் காண்கிறோம்.
|
4.1.2
நாணம்
|
பொதுவாக நாணம் என்பதற்குக் கூச்ச உணர்வு அல்லது
வெட்கம்
(Shyness) என்று பொருள் கூறுவர். பண்புடைய பெரியவர்கள்,
தமக்குப் பொருந்தாத அல்லது ஏற்றுக் கொள்ளத்தகாத செயல்களில்
ஈடுபடுவதற்கு வெட்கப்படுவார்கள் அல்லது நாணுவார்கள் என்கிறார்
வள்ளுவர். நல்ல குடியைச் சார்ந்தவர்கள் தவறு செய்வதற்குக்
கூசுவர். மேலும் மானத்தைக் காப்பாற்றுவதற்காக எதையும் துறக்கத்
தயங்கார். தவறு செய்ய நாணும் பண்பை உயிரினும் மலோகப்
போற்றி ஒழுகுவர். இதனை,
|
நாணால்உயிரைத் துறப்பர், உயிர்ப்பொருட்டால்
நாண்துறவார் நாண் ஆள்பவர்
|

(குறள்: 1017)
|
|
(துறப்பர் = விட்டுவிடுவர், உயிர்ப்பொருட்டு = உயிருக்காக,
நாண் ஆள்பவர் = நாணத்தை மதித்து ஒழுகுபவர்)
என்ற
குறள் மூலம் வள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
நாண்
ஆள்பவர் நாணத்தால் உயிரைத்
துறப்பர்;
உயிர்ப்பொருட்டால் நாண் துறவார். நாணத்தை மதித்து
ஒழுகுபவர்கள் நாணுகின்ற நிலை உண்டாயின் உயிரை விடுவார்கள்.
ஆனால், உயிரைக் காப்பாற்றுவதற்காக நாணத்தை விட்டு செய்யத்
தகாத செயல்களில் ஈடுபடமாட்டார்கள்.
இன்னொரு
இடத்தில் (குறள்: 952), நல்ல குடிப்பிறந்தார் எந்தச்
சூழலிலும் தவறு செய்ய நாணும் பண்பிலிருந்து மாறமாட்டார்கள்
என்று வள்ளுவர் குறிப்பிடுகிறார். தவறு செய்ய நாணுவது நல்ல
குடியில் பிறந்தவர்களிடம் இருக்கும் நல்ல இயல்பு. இந்தப் பண்பை,
அவர்கள், உயிராகவும், உயிரைவிட மலோகவும் கருதுகின்றனர்.
எனவே, நாணமுடையவன், நல்ல குடியைச் சார்ந்தவனாகக்
கருதப்படுவான். நல்ல குடியில் பிறந்தவனிடம் இருக்கும்
பண்புகளில் தலையாயது நாணம் உடைமை என்கிறார் வள்ளுவர்.
|
4.1.3 மானம்
|
ஒருவரைப் பிறர் மதிக்கக் காரணமாக இருப்பது
மானம். ஒருவரது
நடத்தையாலும் செயல்களாலும் அவருக்கு ஏற்பட்டிருக்கும் மதிப்பும்,
சிறப்பும் ‘மானம்’ என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.
மானம்
என்பது நல்ல குடியில் பிறந்தோரிடம் இருக்கும் சிறந்த
பண்பு. மானம் என்னும் இப்பண்பைப் பற்றிக் கூறுவதற்கு
வள்ளுவர் ஓர் அதிகாரத்தையே அமைத்துள்ளார்.
சிலரைப்
பார்த்துச் சில நேரங்களில் அவன் மானம் உடையவன்;
மானம் மிக்க குடும்பத்தைச் சார்ந்தவன் என்று குறிப்பிடுகிறோம்.
இவற்றிற்கு என்ன காரணம்? சிலரை மட்டும், இனம் பிரித்து,
இவ்வாறு ஏன் சொல்ல வேண்டும்? இவர்கள் தங்கள்
நடத்தையினாலும் வெளிப்படுத்தும் பண்புகளாலும் தங்களை
அடையாளங் காட்டுகின்றனர். எத்தகைய பண்பை? மானம் எனும்
பண்பை என விடையளிக்கிறார் வள்ளுவர்.
நல்ல
குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மானம் என்னும் பண்பை ஒரு
சொத்தாகக் (asset) கருதி வாழ்வார்கள். ஏதாவது ஒரு
காரணத்திற்காக மானம் இழந்து வாழக்கூடிய ஒரு சூழல் வந்தால்,
மானத்தைக் காப்பாற்றும் பொருட்டு தம் உயிரையும் விட்டு விடுவர்.
இத்தகையோரை மானமுடையவர் - மானமுடைய குடும்பத்தைச்
சார்ந்தவர் என்று குறிப்பிடுகின்றோம்.
• உயிர் நீப்பர் மானம்வரின்
மானிடர்களின் இந்த இயல்பைக் கவரிமானின் வாழ்க்கையோடு
ஒப்பிடுகிறார் வள்ளுவர். கவரிமானின் உடலிலுள்ள மயிர்கள்
(hairs) அதற்குச் சிறப்புக் கொடுப்பவை. சிறப்பாகக் கருதும் அந்த
மயிர்த் தொகுதியில் ஒரு மயிர் நீங்கினாலும், கவரிமான் உயிர்
வாழாதாம். அதைப்போல, தனக்குரிய பண்புகளில் சிறப்பாகக்
கருதப்படும் மானம் எனும் பண்புக்குக் கேடு வருமானால், நற்குடியில்
பிறந்தோர் தமது மானத்தைக் காப்பாற்ற உடனே தம் உயிரையும்
விட்டு விடுவர். இதனை,
|
மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார்
உயிர் நீப்பர் மானம் வரின்
|

(குறள்: 969)
|
|
(நீப்பின் = நீங்கின், அன்னார் = போன்றோர்,
மானம் வரின் = மானம் அழிய நேர்ந்தால்)
என்ற
குறள் மூலம் விளக்குகிறார் வள்ளுவர்.
• மன்னனும் மானமும்
இழந்த தன் மானத்தைக் காப்பாற்ற தன் உயிரை
விட்ட
நிகழ்ச்சிக்குச் சிறந்த எடுத்துக்காட்டு சிலப்பதிகாரத்தில் உள்ளது.
அரசியின்
காற்சிலம்பைத் திருடிய பொற்கொல்லனின் சதியால்,
கோவலன் என்பவன் மீது வீண் பழி சுமத்தப்படுகிறது. நன்கு
ஆராயாமல், கோவலனுக்கு மரண தண்டனை வழங்குகிறான்
பாண்டியன் நெடுஞ்செழியன் என்னும் மன்னன். கோவலனின்
மனைவி கண்ணகி, தன் கணவன் குற்றமற்றவன் என்பதை அரசனின்
அவையில் நிரூபித்தாள். உண்மையை உணர்ந்த மன்னன் தவறான
தீர்ப்பால், தன் குலத்தின் மானம் போய்விட்டதே என்று வருந்தி,
உடனே தன் உயிரை நீத்தான்.
மேற்குறிப்பிட்ட
நிகழ்ச்சி, மானத்திற்கும் - மானத்தோடு
வாழ்வதற்கும் மன்னர் உட்பட்ட பண்டைத் தமிழ் மக்கள்,
எத்தகைய சிறப்பிடம் கொடுத்திருந்தார்கள்
என்பதை
வெளிப்படுத்தும். தமிழ் மக்களின் இத்தகைய மனப்பான்மையின்
அடிப்படையில்தான் வள்ளுவர் மானம் எனும் பண்பைப் பற்றிக்
கூறுகிறார். அந்தப் பண்பை விளக்கக் கவரிமானை
எடுத்துக்காட்டாக எடுத்துரைக்கிறார்.
|
4.1.4
ஆளுமை
|
ஒருவன் தான் தோன்றிய குடும்பத்திற்குச் செய்ய வேண்டிய
கடமைகள் பல. அவற்றுள் ஒன்று குடும்பத்திலுள்ள அனைவரும்
மகிழ்வடையும் வகையில் - நன்மை பெறும் வகையில் கடமையாற்ற
வேண்டும். அவ்வாறு கடமையாற்றினால் குடும்பத்திலுள்ள
அனைவரின் நல்மதிப்பையும் பெறுவான். குடும்பத்தாரின் நல்ல
மதிப்பையும் அன்பையும் பெற்றால், தன் குடும்பத்தை ஆளுமை
செய்யும் தன்மையைப் பெறமுடியும். இதனை,
|
நல்ஆண்மை என்பது ஒருவற்குத் தான்பிறந்த
இல்ஆண்மை ஆக்கிக் கொளல்
|

(குறள்: 1026)
|
|
(ஆண்மை = ஆளும் தன்மை, இல் = வீடு/குடும்பம்)
என்ற
குறள் மூலம் விளக்குகிறார் வள்ளுவர்.
ஒருவன்
தான் பிறந்த குடியை ஆளுமை செய்து, குடும்பத்தாரின்
நன்மதிப்பைப் பெறுவானேயாகில், அதுவே அவன் நல்ல ஆளும்
தன்மையைப் பெற்றுள்ளான் என்பதற்கான இலக்கணமாகும். இதுவே
இந்தக் குறளின் பொருள்.
சிலர்
சிலருக்குக் கட்டுப்படுவர். சில குடும்பம் குறிப்பிட்ட ஒரு
சிலருக்குக் கட்டுப்படும். அவர்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்ளும்.
அவர்கள் கட்டளையிட்டபடி செயல்படும். ஒரு நாட்டு மக்கள்
ஒருவருக்குக் கட்டுப்படுவர். அவரது ஆணைக்குப் பணிவர். அவர்
இட்ட கட்டளையை நிறைவேற்றுவர். அவருக்கு வரும்
சோதனைகளைத் தமக்கு வந்ததாகக் கருதிச் செயல்படுவர். அவர்
பொருட்டு எத்தகைய தியாகத்தையும் விருப்பத்தோடு செய்ய
அணியமாக இருப்பார்கள். அவர்களையே தங்கள் தலைவராக
ஏற்றுக் கொள்வர். இவற்றிற்கு உரிய காரணங்கள் எவை? எவற்றால்
இவர்கள் ஒரு சிலரை, ஒரு குடும்பத்தை, ஒரு நாட்டு மக்களை
ஆட்கொள்ளும் தன்மையைப் பெறுகின்றார்கள்? தம் அன்பாலும்,
பண்பாலும், பிற நல்ல நடத்தைகளாலும் கவர்ந்திருப்பார்கள்.
எனவே, ஒருவரை ஒரு குடும்பத்தை அல்லது ஒரு நாட்டு மக்களை
ஆளும் தன்மை பெறுவதற்கு அடிப்படைக் காரணம் அவர்களது
நற்பண்புகளும் நற்செயல்களுமேயாகும். இதையேதான் வள்ளுவர்,
மேற்குறிப்பிட்ட குறளில் மிகவும் சுருக்கமாக, முதலில் ஒருவன்
தனது குடும்பத்தை ஆளும் தகுதியைப் பெற்று இருக்க வேண்டும்;
அதுவே அவன் நல்ல ஆளும் தன்மையைப் பெற்றுள்ளான்
என்பதற்குச் சான்றாகும் என்று விளக்குகிறார்.
|
|