|
கி.மு. 300 - இல் தொடங்கி, கி.பி. 300 வரை உள்ள
ஆறு
நூற்றாண்டுக் கால எல்லையில் அமைந்த தமிழகத்தின் வரலாறே
சங்க கால வரலாறு எனக் கொள்ளப்பெறுகின்றது.
இந்த அறுநூறு
ஆண்டுக் காலத் தமிழக வரலாற்றை
அறிவதற்குப் புறநானூறு போன்ற சங்கத் தமிழ்
நூல்களே
பெருந்துணை புரிகின்றன. கி.பி முதல் இரண்டு நூற்றாண்டுகளில்
தமிழகக் கடற்கரையை ஒட்டிய பகுதிகளுக்கு வந்து சென்ற
பிளைனி, தாலமி ஆகியோரும், பெரிபுளுஸ் எனும் நூலின்
ஆசிரியரும் எழுதி வைத்த குறிப்புகள் ஓரளவு
அக்கால
வரலாற்றை அறியத் துணை நிற்கின்றன. வட
மொழியில்
(சமஸ்கிருதத்தில்) எழுதப்பெற்ற கௌடிலியம் எனும் சாணக்கியரின்
நூலும், பிற்கால இலங்கை வரலாற்று நூல்கள் முதலியனவும்
ஓரளவு அக்கால வரலாற்றை எடுத்துக்
கூறுபவையாக
அமைந்துள்ளன.
|
|
|
தமிழகம் மிகப் பழைய காலத்தில் குமரிமுனைக்குத் தெற்கே,
இன்றுள்ள இலங்கைத் தீவைத் தன்னகத்தே கொண்டிருந்த
பெரும் நிலப்பரப்பைக் கொண்டிருந்தது எனச் சிலப்பதிகாரத்தின்
அடியார்க்கு நல்லார் உரையும், இறையனார் களவியல் உரையும்
கூறுகின்றன. அப்பகுதி ஏழ்தெங்க நாடு, ஏழ்பனை நாடு முதலிய
நாற்பத்தொன்பது நாடுகளைக் கொண்டு திகழ்ந்தது.
அந்நிலப்பரப்பில் குமரிமலைத் தொடரும், குமரியாறும் இருந்தன.
ஒரு பெருங் கடல்கோளால் அவையாவும் கடலுள் ஆழ்ந்தன
என்பதும் பண்டைய நூல்கள் கூறும் செய்திகளாகும்.
இரண்டு கடல்கோள்களுக்குப்
பிறகு மதுரை பாண்டியர்
தலைநகரமாயிற்று. அப்போது. இன்றுள்ள குமரிமுனை தமிழகத்தின்
தெற்கெல்லையாகக் கொள்ளப்பட்டது. வடக்கே வேங்கட மலைத்
தொடரும், கிழக்கும் மேற்கும் இருகடல்களும் எல்லைகளாகத்
திகழ, சங்க காலத் தமிழகம் விளங்கியது.
1.1.2
சங்க கால நிலப்பகுப்பு |
தமிழ் மக்கள் தமிழக நிலப் பகுதியை, குறிஞ்சி,
பாலை,
முல்லை, மருதம், நெய்தல் என ஐந்து வகையாகப் பிரித்து
வாழ்க்கை முறையை அமைத்துக் கொண்டனர். நில அமைப்பு,
தட்ப வெட்ப நிலைகள் ஆகியவற்றின் அடிப்படையிலேயே
இப்பகுப்பு முறை அமைந்திருந்தது. ஒவ்வொரு நிலத்து
மக்களுடைய பழக்க வழக்கங்களும், உடை, உணவு, பண்பாடு
ஆகியவையும் வேறுபட்டன.
மலையும் மலையைச் சார்ந்த இடமும் குறிஞ்சி
எனப்படும்.
இங்கு வாழ்ந்த மக்களின் முக்கிய தொழில்
வேட்டையாடுதல்,
காட்டில் கிடைக்கும் பொருள்களை மற்ற பகுதி
மக்களுக்கு
விற்பனை செய்தல் ஆகியவையாக அமைந்தன. கல்வி,
கலை
ஆகியவைகளிலிருந்து இங்கு வாழ்ந்த மக்கள் விலகியே இருக்க
நேர்ந்தது. இவர்களில் பெரும்பாலானவர் வேடர் இன மக்களாவர்.
|
காடும் காட்டைச் சார்ந்த புல்வெளிகள்
உள்ள இடமும்
முல்லை எனப்படும். இங்கு வாழ்ந்த மக்களின் முக்கிய தொழிலாக
ஆடு, மாடு போன்றவை வளர்ப்பது, தங்கள் பகுதியில் விளையும்
பொருள்களை மருத நில மக்களிடம் எடுத்துச் சென்று
விற்பது
ஆகியவை அமைந்தன. இவர்கள் ஆயர்
என அழைக்கப்
பெற்றனர்.
|
விளைச்சல்
ஒன்றும் இல்லாத வøண்ட பகுதி
பாலை
எனப்பெறும். இங்கே தொழில்களுக்கு
வாய்ப்பின்மையால்
அப்பகுதி மக்கள் களவு, வழிப்பறி போன்ற
செயல்களில்
ஈடுபட்டனர். அவர்களைக் கள்வர் என அழைத்தனர்.
|
ஆற்று நீர்ப்
பாசனம் பெற்ற வயலும் வயலைச் சார்ந்த
இடமும் மருதம் எனப்பெறும். இப்பகுதி
மக்கள் நாகரிக,
பண்பாட்டு வளர்ச்சி பெற்றவர்களாக விளங்கினர். உழுகுடியினர்
எனப்பெற்ற இப்பகுதி மக்கள் இசை, ஓவியம், நாட்டியம் போன்ற
கலைகளில் ஈடுபாடுடையவர்களாக விளங்கினர்.
|
கடலும் கடலைச் சார்ந்த
இடமும் நெய்தல் நிலமாகும்.
மணற்பாங்கான இந்நிலப் பகுதியில் தாழை,
பனை போன்ற
மரங்கள் மிகுந்திருந்தன. கடலிலே கலம்
செலுத்தி மீன்பிடி
தொழிலைச் செய்த இம்மக்கள் பரதவர் என
அழைக்கப்
பெற்றனர். அவர்கள் வாழ்ந்த கடற்கரை ஊர்கள் பாக்கம் என
அழைக்கப் பெற்றன. முத்துக்குளித்தல், உப்பு வணிகம் செய்தல்
ஆகியவையும் இவர்கள் மேற்கொண்ட தொழிலாகும்.
|
|
|