1.4 சங்க காலச் சமுதாயம்


    சங்க காலத்திலும் அதற்கு அடுத்த பிற்காலத்திலும்
கல்வியும், கைத்தொழிலும், வணிகமும் மிகவும் சிறந்த நிலையில்
இருந்தன. இறைவழிபாடு உடையவர்களாகவும், நாகரிகத்திலும்
பண்பாட்டிலும் சிறந்தவர்களாகவும் தமிழர்கள் வாழ்ந்தார்கள்.

1.4.1 கல்வி நிலை


    கல்வியின் சிறப்பைத் தமிழ் மன்னர்கள் நன்கு போற்றினர்.
ஒரு குடும்பத்தில் கற்றவர்களையே தாய் மிகவும் விரும்புவாள்
என்பதைச் சங்கத் தமிழ் நூல்கள் கூறுகின்றன. கற்றவர்களே
குடும்பத்தாலும், சமுதாயத்தாலும் மிகவும் மதிக்கப் பெற்றனர்.
ஒருவன் துன்பப்பட்டாவது கல்வி கற்க வேண்டும் என்பதைப்
பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் “கற்றல்
நன்றே.....” (புறநானூறு - 183)
என்ற பாடல் வழி
உணர்த்தியுள்ளான்.

  • பெண் கல்வி

  •     பெண்களும் கல்வி கற்பதில் மிகுந்த ஈடுபாட்டுடன்
    விளங்கினர். பெருங்காக்கை பாடினியார், சிறுகாக்கை
    பாடினியார்
    என்ற பெண்பாற் புலவர் இருவர் யாப்பிலக்கணம்
    வகுத்தனர் என்பதை அறியும் போது பெண்கள் கல்வியிலும்
    மொழியறிவிலும் எவ்வளவு சிறந்து விளங்கினர் என்பதறியலாம்.
    ஒளவையார்,     நற்செள்ளையார் போன்ற     புலவர்கள்
    பேரரசர்களாலும், குறுநில மன்னர்களாலும் மிகவும் போற்றப்
    பெற்றனர் என்பது சங்கத் தமிழ் நூல்கள் கூறும் செய்தியாகும்.
    குறத்தி, குயத்தி, வேட்டுவச்சி, காவற்பெண்டு முதலிய எளிய
    நிலையில் இருந்த பெண்களும் கவிபாடும் ஆற்றல் பெற்று
    விளங்கினர்.

    1.4.2 கைத் தொழிலும் வணிகமும்


        சங்க காலத்தில் கைத் தொழிலும் வணிகமும் சிறப்பாக
    இருந்தமையை அறிய முடிகின்றது.

  • கைத்தொழில்

  •     ஆடை நெய்தல் சிறந்த கைத்தொழிலாகக் கருதப்பட்டது.
    கைம்பெண்கள் (கணவனை இழந்த பெண்கள்) நூல் நூற்கும்
    தொழிலில் ஈடுபட்டனர். பாண்டிய நாட்டில் நெய்யப் பெற்ற மிக
    மெல்லிய ஆடைகள் பாடலிபுத்திரம் போன்ற வடநாட்டு
    நகரங்களுக்கு அனுப்பப் பெற்றன என்பதைச் சாணக்கியர்
    தம் நூலில் கூறியுள்ளார். தச்சர், கொல்லர், கன்னார், தையற்
    தொழில் புரிவோர் முதலிய பல்வகைத் தொழிலாளர்களும்
    ஒவ்வொரு ஊரிலும் இருந்தனர். நுண்கலைகள் புரியும்
    தொழிலாளர்களும் அவர்களுடன் இணைந்து வாழ்ந்தனர்.

  • வணிகம்

  •     தமிழகத்தில் விளைந்த விளை பொருள்களும் (உணவுப்
    பொருள்கள் மற்றும் இலவங்கம், ஏலம், மிளகு போன்றவை), கைத்
    தொழிற் பொருள்களும் நாட்டின் தேவையை நிறைவு
    செய்ததோடு பிற நாடுகளுக்கு விற்பனைப் பொருட்களாக
    அனுப்பும் அளவு மிகுந்து விளங்கின. கீழை நாடுகளிலிருந்து
    பட்டு, பீங்கான் போன்ற பொருள்களும் மேலை நாடுகளிலிருந்து
    போர்க்கருவிகள், உயர்ந்த    மது வகைகள், கண்ணாடி
    ஆகிய பொருள்களும் இறக்குமதியாயின. சேரநாட்டு மிளகு,
    ஏலம், யானைத் தந்தம் ஆகியவைகளுக்கு அயல் நாடுகளில்
    மிகுந்த வரவேற்பு இருந்தன. ஏற்றுமதிப் பொருள்களுக்கும்,
    இறக்குமதிப் பொருள்களுக்கும் அரசாங்க முத்திரையிடும்
    வழக்கம் இருந்தது. காவிரிப்பூம்பட்டினம், கொற்கை, தொண்டி,
    முசிறி போன்ற துறைமுகங்களில் பண்டகசாலைகள் இருந்ததையும்,
    கலங்களில் பொருள்களை ஏற்றுதல், இறக்குதல் ஆகிய
    பணிகள் இரவும் பகலும் நிகழ்ந்தன என்பதையும் சங்கப்பாடல்கள்
    தெளிவாகக் கூறுகின்றன.    துறைமுகங்களில் கலங்கரை
    விளக்கங்கள் (light house) இருந்தன என்பதும் அறிய முடிகிறது.

    1.4.3 சமய நிலை

        குறிஞ்சி நிலத்தவர் முருகனையும், பாலை நிலத்தவர்
    கொற்றவையையும், முல்லை நிலத்தவர் மாயோனையும்
    (திருமால்), நெய்தல் நிலத்தவர் வருணனையும், மருத நிலத்தவர்
    இந்திரனையும் வழிபட்டனர். பரிபாடல் போன்ற நூல்கள்
    திருமால், முருகன், சிவபெருமான் முதலிய கடவுளர்களைப்
    போற்றுகின்றன. மருதநில மக்கள் ‘இந்திரவிழா’ எடுத்து
    மகிழ்வுற்றனர். குரவைக் கூத்து போன்ற கூத்துகள் சமய
    விழாக்களில் இடம் பெற்றன.

        மதுரை, புகார் போன்ற நகரங்களில் பல தெய்வங்களுக்குக்
    கோயில்கள் இருந்தன. சிவபெருமான் முழு முதற்கடவுளாகக்
    கருதப்பட்டான். “பிறவாயாக்கைப் பெரியோன்”, என்றும்,
    “நுதல் விழி நாட்டத்து இறையோன்” என்றும் கடவுளர்
    வரிசையில்     முதலில்     குறிக்கப்     பெற்றிருப்பவன்
    சிவபெருமானேயாவன். பௌத்தர், அருகர், ஆசீவகர் போன்ற
    சமயத்தினரும் இணைந்தே வாழ்ந்தனர்.

        மார்கழி நோன்பு, தைந் நீராடல், கார்த்திகை விழா போன்ற
    விழாக்கள் நடைபெற்றன.

    1.4.4 இலக்கியங்கள்


        சங்க இலக்கியம் பாட்டும் தொகையும் என இருபகுப்புள்
    அடங்கும். அவை பத்துப்பாட்டு, எட்டுத்தொகை என்பனவாம்.
    பத்துப்பாட்டு
    என்ற தொகுப்பில்,

        (1) திருமுருகாற்றுப்படை (புலவராற்றுப் படை)
        (2) பொருநராற்றுப்படை
        (3) சிறுபாணாற்றுப்படை
        (4) பெரும்பாணாற்றுப்படை
        (5) முல்லைப் பாட்டு
        (6) மதுரைக் காஞ்சி
        (7) நெடுநல்வாடை
        (8) குறிஞ்சிப் பாட்டு
        (9) பட்டினப்பாலை
        (10) மலைபடுகடாம் (கூத்தராற்றுப்படை)

    என்ற நூல்கள் அடங்கும். எட்டுத்தொகையில்,

        (1) நற்றிணை
        (2) குறுந்தொகை
        (3) ஐங்குறுநூறு
        (4) பதிற்றுப்பத்து
        (5) பரிபாடல்
        (6) கலித்தொகை
        (7) அகநானூறு
        (8) புறநானூறு

    என்ற நூல்கள் அடங்கும். இந்நூல்களில் குறிக்கப் பெற்றுள்ள
    செய்திகளே சங்க கால வரலாறு மற்றும் தமிழர் பண்பாடு பற்றி
    அறியப் பெரிதும் துணை புரிகின்றன.

    1.4.5 நாகரிகமும் பண்பாடும்


        சங்க காலத் தமிழர் செய்யும் தொழிலாலும் வாழ்க்கை
    முறையாலும் சிறந்த நாகரிகம் பெற்றிருந்தனர். உலகளாவிய
    சிந்தனைகளின்     வாயிலாக     உயர்ந்த பண்பாட்டையும்
    பெற்றிருந்தனர் என்பதையும் அறிய முடிகிறது.

  • நாகரிகம்

  •     சங்கத் தமிழர் கடல் வாணிகம், உள்நாட்டு வாணிகம்
    ஆகியவற்றைச் சிறப்பாகச் செய்தனர். இதனால் அனைத்து
    வகையான பொருள்களின் பயன்பாடு பற்றியும் நன்கு
    அறிந்திருந்தனர். உழவுத் தொழில் நன்னிலையில் இருந்தது.
    பரதவர்களால் மீன் பிடிக்கும் தொழிலும் சிறந்திருந்தது.
    மெல்லிய ஆடைகள் அணிதல், பொன்னாலும், மணியாலும்
    ஆன பல்வகை அணிகலன்களை அணிதல், தூய்மையாக
    இருத்தல் ஆகியவை சங்கத் தமிழரின் நாகரிகக் கூறுகளாகும்.

  • பண்பாடு

  •     தமிழர் பண்பாட்டின் ஒரு வெளிப்பாடுதான் ‘திருக்குறள்’
    எனும் உலகப் பொது மறையாகும். ‘யாதும் ஊரே ; யாவரும்
    கேளிர்” (உலகத்திலுள்ள ஒவ்வொரு ஊரும் நமது ஊரே;
    உலகமக்கள் எல்லோரும் நம் உறவினரே) என்ற கணியன்
    பூங்குன்றனாரின் பாடல் (புறநானூறு பாடல் எண். 192) அடிகள்
    தமிழ்ப் பண்பாட்டின் ஆழத்தை எடுத்துக்காட்டுவதாகும்.
    பண்புடையவராக வாழ்தலைத் தமிழ்ச் சமுதாயம் மிகவும்
    போற்றியது. வாழ்க்கை நெறிகளால் அன்பிற்கு முக்கியத்துவம்
    கொடுத்தனர். பகையை வெல்லும் ஆற்றல், தீயோரை
    நல்லோராக்கும் வண்மை ஆகியவை அன்பால் இயலும்
    என்பதை, தங்கள் பண்பாட்டு நெறியாகத் தமிழர் போற்றினர்.

        மருத்துவ அறிவில் மேம்பட்டு விளங்கினர். ஆடல்
    அரங்கங்கள், பட்டிமண்டபங்கள் (பேச்சாற்றல் வெளிப்படும்
    பொது இடம்) போன்றவை அவர்களின் திறமைகளைக் காட்டும்
    பொது இடங்களாகத் திகழ்ந்தன.