2.3 பல்லவர் ஆட்சி :

    சிறந்த ஓர் ஆட்சி முறைக்கு எடுத்துக் காட்டாகப் பல்லவர்
கால ஆட்சிமுறை இருந்தது. ஆட்சி சிறப்பாக அமைவதற்காக
நாட்டைப் பல்வேறு பிரிவுகளாகப் பிரித்தனர். தந்தைக்குப் பின்
தனயன் என்ற அரசமுறையைப் பின்பற்றினர். நிர்வாகத்திற்குப்
பயன்படும் வகையில் அமைச்சர் குழுக்களையும் நியமித்தனர்.
நடுநிலையாக நியாயம் வழங்கும் பொருட்டு நீதிமன்றங்களை
நிறுவினர். நிலத்தை     அளந்து பதிவு     செய்தனர்.
வரி வசூலித்தனர், நாணயங்களையும் தயாரித்தனர்.

2.3.1 நாட்டுப்பிரிவுகள்

    பல்லவப் பெருநாடு மண்டலம், கோட்டம், நாடு, ஊர் எனும்
பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பல்லவர் ஆட்சிக்கு
முன்னரே தொண்டை    மண்டலம் புழல் கோட்டம்,
ஈக்காட்டுக்கோட்டம், மணவிற்கோட்டம், செங்காட்டுக்கோட்டம்,
பையூர்க்கோட்டம், எயில்கோட்டம் முதலிய 24 கோட்டங்களை
உடையது. இப்பழம் பிரிவுகளே பல்லவர் ஆட்சியிலும்
தொடர்ந்தன. தொண்டை மண்டலம் மட்டுமன்றி, சோழ
மண்டலம் முழுவதும், கொங்கு நாட்டின் ஒரு பகுதியும் பல்லவர்
ஆட்சியின் கீழ் வந்தன.

• நாட்டின் பல்வேறு பிரிவுகள்


    நாடு என்பது சிற்றூரைவிடப் பெரியது. கோட்டத்தைவிடச்
சிறியது. நாடு எனும் ஒரு பகுப்பில் பல சிற்றூர்கள் அடங்கும்.
அதனை 'நாட்டார்' என்பவர்கள் நிருவகித்தனர். சிற்றூர்களை
'ஊரார்' எனும் குழுவினரும், 'ஆள்வார்' எனும் அவையினரும்
நிர்வகித்தனர்.

    ஊர் அவையினரைப் 'பெருமக்கள்' என்று பல்லவர்
சாசனங்கள் குறிப்பிடுகின்றன. ஊர் அவை பல உட்பிரிவுகளாகப்
பிரிந்து சிற்றூர் ஆட்சியைக் கவனித்து வந்தது. ஏரி வாரியம்,
தோட்ட வாரியம் போன்ற அமைப்புகள் நீர்ப்பாசனம்,
தோட்ட நிர்வாகம் போன்றவற்றை மேற் கொண்டன. சில ஊர்ச்
சபைகளின் நிர்வாகிகளை 'ஆளுங்கணத்தார்' என்றும்
குறிப்பிட்டனர். கோயில்களின் நிர்வாகத்தை 'அமிர்த கணத்தார்'
என்ற அமைப்பினர் மேற்கொண்டனர். இவர்கள் கோயிலுக்கு
வரும் தானங்களைப் பெறுவர். கோயில் பண்டாரத்திலிருந்து
(சேமிப்பு நிலையம்) பொருள்களைக் குறித்த வட்டிக்குக் கடன்
தருவர். இவை தொடர்பான வணங்களைப் பாதுகாப்பர்.
கோயில் குறித்த பிறவேலைகளையும் மேற் கொள்வர்.

• பிரமதேயச் சிற்றூர்கள்

    வேதம் படித்த அந்தணர்களுக்கென வழங்கப்பட்ட ஊர்கள்
பிரமதேயம் என வழங்கப்பட்டன. அவ்வூர்களுக்கு அரசு
வரிவிலக்கு அளித்தது. உதய சந்திரமங்கலம், பட்டத்தாள்
மங்கலம், சிம்மவிஷ்ணு சதுர்வேதி மங்கலம் போன்றவை
பிரமதேயச் சிற்றூர்களாகும்.

• தேவதானச் சிற்றூர்கள்

    சில சிற்றூர்கள் மன்னர்களால்     கோயிலுக்கென்று
விடப்பட்டன. அவை 'தேவதானம்' என்ற பெயரால்
அழைக்கப்பட்டன. அவ்வாறு விடப்பெற்ற தேவதான ஊரின்
வருவாய் முழுதும் குறிப்பிட்ட கோயில்களுக்கே உரியதாகும்.
தேவதான ஊர்களுக்கும்     அரசு     வரியிலிருந்து
விலக்களிக்கப்பெற்றது. பல்லவப் பேரரசர்கள் கோயில்களுக்கு
மிகுந்த ஆக்கம் தந்ததால் தேவதான ஊர்கள் சிறப்படைந்தன.
பல்லவர் ஆட்சியில், கோயில்கள் சிற்றூர்களின் பொதுவாழ்வில்
பெரிய மாறுதல்களை ஏற்படுத்தின. பொதுமக்களின் நலனுக்காகக்
கோயில்பணம் செலவழிக்கப்பட்டது.

• பள்ளிச்சந்தம்

    தேவதானம், பிரம்மதேயம் என்பன போலப் 'பள்ளிச்சந்தம்'
என்பது சமணப் பள்ளிகளுக்கென (சமணர் வழிபடும்
கோயில்கள்) விடப்பட்ட வரியில்லாத நிலங்களாகும். அரசர்கள்
சார்ந்துள்ள சமயம் எதுவாய் இருந்தாலும் பிறசமயக்
கோயில்களுக்கும் ஆக்கம் கொடுத்தனர்.

2.3.2 அரசமுறை

    பல்லவர் அரசமுறை தந்தைக்குப்பிறகு மூத்தமகனுக்கே
உரிமையுடையதாக இருந்தது. வாரிசு இல்லையென்றால் தந்தை
வழியில் நெருங்கிய இரத்த பந்தம் (Blood Relation)
உடையவர்களே அரச உரிமை பெற அனுமதித்தனர்.

• பட்டப் பெயர்கள்

    பல்லவ அரசர்கள் தங்கள் தகுதிக்கேற்பப் பட்டங்களைப்
பெற்றிருந்தார்கள். மகேந்திர பல்லவன்     ஓவியத்திறன்
பெற்றிருந்ததால் 'சித்திரகாரப்புலி' எனப் பட்டம் பூண்டான்.
அவர்கள் செய்த வேள்விகள் அடிப்படையிலும் பட்டங்கள்
புனைந்து கொண்டனர். தங்கள் இயற்பெயர் ஒன்றாக
இருப்பினும் முடி சூடும் போது அபிடேகப் பெயராக மற்றொரு
பெயரைப் புனைந்து கொண்டனர். அப்பெயரே பின்னர்
அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் நிலைத்தது. இராஜசிம்மன்
எனும் இயற்பெயருடைய பல்லவன் முடி சூடிக்கொள்ளும் போது
நரசிம்மவர்மன் எனும் புதிய பெயரினைப் பெற்றான். அது
போலவே பரமேசுரவர்மன் என்பவன் நந்திவர்மன் எனும் புதிய
பெயரினைச் சூடிக் கொண்டான்.

• அரசரும் சமய நிலையும்

    பல்லவப் பெருவேந்தர்கள் காலத்தில் பௌத்தம், சமணம்,
சைவம், வைணவம் ஆகிய சமயங்கள் திகழ்ந்தன. மகேந்திர
பல்லவன் தொடக்கத்தில் சமண சமயச் சார்புடையவனாகத்
திகழ்ந்து, பின்பு சைவ சமயத்திற்குப் பேராதரவு அளித்தான்
என்பதை இலக்கியங்கள், கல்வெட்டுகள் வாயிலாக அறிய
முடிகிறது. பின்வந்த பல்லவ அரசர்கள் சைவம், வைணவம்
போன்ற அறுவகைச் சமயத்திற்கும் ஆதரவு நல்கினர். (சைவம்,
வைணவம்,
சக்தியை வணங்கும் சாக்தம், கணபதியை வழிபடும்
காணாபத்தியம், குமரனை வணங்கும் கௌமாரம், சூரியனை
வழிபடும் சௌரம் ஆகிய ஆறும் அறுவகைச் சமயம் எனக்
குறிப்பிடப்படும்.)

• பல்லவர் இலச்சினை


    பாண்டியர்க்கு மீனும், சேரர்க்கு வில்லும், சோழர்க்குப்
புலியும், சாளுக்கியர்க்குப் பன்றியும் இலச்சினையாகத் திகழ்ந்தது
போன்று, பல்லவர்க்கு நந்தி (காளை உருவம்) இலச்சினையாகத்
திகழ்ந்தது. பல்லவர்களுடைய கொடி இடபக்கொடி (காளை
உருவம் பொறித்த கொடி), காசுகளிலும், செப்பேட்டு
இலச்சினைகளிலும் நின்ற அல்லது படுத்த நிலையில் காளை
உருவம் காணப்படுகின்றது. இலச்சினைகளில் காளை
உருவத்தோடு இருபுறமும் குத்துவிளக்குகள் காணப்படுகின்றன.


2.3.3 அமைச்சர் குழு

    பல்லவப் பேரரசர்களின் நிர்வாக அமைப்பிற்கு உதவிட
அமைச்சர் குழுக்கள் செயல்பட்டன என்பதை அவர்கள் காலத்து
நூல்களும், கல்வெட்டுகளும்     எடுத்துக்     கூறுகின்றன.
பிரம்மஸ்ரீராஜன், நம்பன் இறையூர் உடையான், தமிழ்ப்
பேரரையன் போன்ற பல்லவர் கால அமைச்சர்கள் பற்றிய
குறிப்புகள் கல்வெட்டுகளில் காணப்பெறுகின்றன. நாட்டின்
அரசுப் பணிகளைக் கவனிப்பது, அரசனுக்கு முக்கிய
ஆலோசனைகள் வழங்குவது போன்ற முக்கிய பணிகளை
அமைச்சர் குழுக்கள் மேற்கொண்டன.

• உயர்நிலை அலுவலர்கள்

    பல்லவ அரசர்களுக்கு, உள்படு கருமத் தலைவர் (Private
Secretaries), வாயில் கேட்பார் (Secretaries), கீழ் வாயில்
கேட்பார் (Under Secretaries), என்ற உயர்நிலை
அலுவலர்களும் நிருவாகத்தில் உறுதுணையாக விளங்கினர்.

• படைகள்

    தேர்ப்படை, யானைப்படை, குதிரைப்படை, காலாட்படை
என்ற நால்வகைப் படைகள் மூலம் பல்லவப் பேரரசர்கள்
நாட்டினைப் பாதுகாத்ததோடு, பல நாடுகளை வெற்றியும்
கொண்டனர். நிலத்தில் இயங்கும் இத்தகைய தரைப்படைகளைத்
தவிர மாமல்லபுரத்துத் துறைமுகத்தில் சிறந்த கப்பற் படையும்
இருந்துள்ளது என அறிகிறோம். விஷ்ணுவர்மன், பரஞ்சோதி,
உதயசந்திரன், பூதிவிக்கிரமகேசரி போன்ற சிறந்த சேனைத்
தலைவர்கள் பல்லவப் பேரரசர்களுக்காகப் பணி புரிந்தனர்
என்பதைக் கல்வெட்டுகளும், நூல்களும் எடுத்துக் கூறுகின்றன.

2.3.4 நீதி மன்றங்கள்

    பல்லவப் பேரரசர்களின் ஆட்சிக் காலத்தில் பெரு
நகரங்களில் 'அதிகரணங்கள்' எனப்படும் நீதி மன்றங்களும்,
சிற்றூர்களில் 'கரணம்' என்ற நீதித்தலங்களும் செயல்பட்டன.
மத்த விலாசபிரகசனம் எனும் மகேந்திர பல்லவனின் நூலில்
இத்தகைய அதிகரணங்கள் பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
அதிகரணத்தின் நடுவர் அதிகரண போசகர் என்றும்,
கரணத்தின் தலைவர் அதிகாரி என்றும் அழைக்கப்பட்டனர்.ஊர்
வழக்குகளை உள்ளுர்ச் சபையோரும் விசாரித்துத் தீர்ப்பு
வழங்கினர் என்பதைச் சுந்தரர் வரலாற்றின் மூலம் அறியலாம்.

    1. ஆட்சி
    2. ஆவணம் (Documentary Evidence)
    3. அயலார் காட்சி (Eye Witness)

என்ற மூன்று வகையான நடைமுறைகள் மூலம் வழக்குகள்
விசாரிக்கப்பட்டன என்பதைப் பெரியபுராணத்தின் மூலம்
அறியலாம்.

• ஆவணக்களரி

    ஆவணங்களைச் சேகரித்துப் பாதுகாப்பாக வைக்கும்
அலுவலகம் ஆவணக் களரி எனப்படும். மன்னனது
ஆணையிலிருந்து மக்களின் நடைமுறை     வாழ்க்கையில்
பயன்படும் ஆவணங்கள் வரை முறையாகப் பதிவு செய்யப்
பெற்றன. ஒவ்வொரு ஊரிலும் அரசு அலுவலர்கள், ஊர்ச்
சபையினர் ஆகியோர் பொறுப்பில் ஆவணக் களரிகள்
செயல்பட்டன. நிலப் பதிவிலிருந்து அனைத்து வகையான
பதிவுகளையும் அத்தகைய ஆவணக் களரிகள் மேற்கொண்டு
வந்தன.

2.3.5 நில அளவும் நாணயங்களும்

    பல்லவர் ஆட்சியின் சிறப்புகளில் ஒன்று     நிலம்
அளத்தலாகும். அதைப்போல உலோகத்தில் நாணயங்கள்
புழக்கத்திலிருந்ததும் சிறப்பான ஒன்றாகும்.

• நிலஅளவு

    பல்லவர் ஆட்சிக்குட்பட்ட நாட்டில் நிலம் முழுவதும்
முறையாக அளக்கப் பெற்றுப் பதிவு செய்யப் பெற்றிருந்தது. நில
அளவைக் குரிய கணக்குகளையும், வரி விதித்தலுக்குரிய
கணக்குகளையும் அந்தந்த ஊர்களில் அரசு அலுவலர்களே
மேற்கொண்டனர். நிலத்தின் தரத்திற்கேற்ப வரிவிதிப்பும்
இருந்தது.

• நாணயங்கள்

    பல்லவ அரசர்கள் தங்கம், வெள்ளி, செம்பு, ஆகிய
உலோகங்களால் ஆன காசுகளைப் பயன்படுத்தினர். அவர்களது
காசுகளில் பெரும்பாலும்     காளை     (BULL) உருவம்
காணப்பெறும். பல்லவ அரசர்களின் பெயர் பொறிக்கப்பெற்ற
காசுகளும், மீன், கப்பல் போன்ற உருவங்கள் பொறிக்கப் பெற்ற
காசுகளும் கிடைத்துள்ளன. ஸ்ரீபரன், ஸ்ரீநிதி, கதாசித்ரா,
பாகாப்பிடுகு போன்ற பல்லவ அரசர்களின் பட்டப் பெயர்கள்
அவர்கள் காலத்துக் காசுகளில் காணப் பெறுகின்றன.