2.5 கோயில்களும் கவின்கலைகளும்


    தமிழகத்தைப் பொறுத்தவரை குடைவரைக் கோயில் எடுக்கும்
மரபினைத் தோற்றுவித்தவர்கள் பல்லவர், பாண்டியர், அதியர்
மரபுகளைச் சேர்ந்த மன்னர்களே ஆவர். அவர்களை
ஒப்பிடும்போது பல்லவர்களின் படைப்புகளே தமிழகத்தில்
அதிகம் காணப்படுகின்றன. குடை வரைக்கோயில்கள் மட்டுமன்றி,
கட்டுமானக் கோயில்களும் பலவற்றை எடுப்பித்து, அங்குச் சிற்பம்,
ஓவியம், நாட்டியம், இசை, அணிகலன்கள் உருவாக்குவது போன்ற
பல்வேறு கவின்கலைகளையும் வளர்த்தனர்.

2.5.1 குடைவரைக் கோயில்கள்
    
    பல்லவர்களில் மகேந்திர பல்லவனே முதன் முதலாகக் குடை
வரைக் கோயில்களைத் (Rock-Cut Temples) தோற்றுவித்தான்.
செஞ்சிக்கருகில் உள்ள மண்டகப்பட்டு எனும் ஊரில் ஒரு
குன்றினைக் குடைந்து கோயிலாக மாற்றியதோடு அங்கு ஒரு
கல்வெட்டும் பொறித்தான். அதில் 'இந்தக்கோயிலை நான்முகன்,
திருமால், சிவபெருமான் ஆகிய மூன்று தெய்வங்களுக்கும் கல்,
மண், உலோகம், சுதை, மரம் இன்றி விசித்திர சித்தனாகிய நான்
தோற்றுவித்தேன்' என்று குறிப்பிட்டுள்ளான். இவனே மாமண்டூர்,
திருக்கழுக்குன்றம், திருச்சிராப்பள்ளி போன்ற இடங்களில் குடை
வரைக் கோயில்களை அமைத்துக் கட்டடக் கலைக்குப் புத்துயிர்
அளித்ததோடு, அழகான சிற்பங்களையும் உருவாக்கியுள்ளான்.
இவனுக்குப் பின் வந்த இவன்மகன் நரசிம்மவர்மன் தன் தந்தையின்
பணியைத் தொடர்ந்தான். திருக்கழுக்குன்றத்திலுள்ள ஒரு
குடைவரைக் கோயில் இவன் காலத்துப் படைப்புக்குச் சிறந்த
சான்றாகும். பின்வந்த இராஜசிம்ம பல்லவன் காலத்தில்தான்
பல்லவர்காலக் கோயிற்கலை சிகரத்தைத் தொட்டது. காஞ்சிபுரத்துக்
கயிலாசநாதர் கோயில், மாமல்லபுரத்துக் குடைவரை படைப்புகளான
ஐந்து ரதங்கள், குன்றில் குடையப்பட்ட கோயில்கள், புலிக்குகை
போன்ற படைப்புகள் அனைத்தும் இவனது பணியாகும்.

மாமல்லபுரம்

• கட்டுமானக் கோயில்கள்

    
    பல்லவர்காலக் கட்டுமானக் கோயில்களில் மிகச் சிறந்தவை
எனக் குறிப்பிடப்பெறுபவை காஞ்சிக் கயிலாச நாதர் கோயில்,
மகாபலிபுரம் கடற்கரைக் கோயில், காஞ்சி வைகுந்தநாதர் ஆலயம்,
திருவதிகை வீரட்டானம் போன்றவையாகும். நரசிம்ம பல்லவன்,
நந்திவர்மன் போன்ற பல்லவப் பேரரசர்கள் கட்டுமானக்
கோயிற்கலைக்கு மிகுந்த ஆக்கம் அளித்தனர்.

2.5.2 கவின்கலைகள்
    
    பல்லவர்கள் படைத்த குடைவரைகள், கட்டுமானக் கோயில்கள்
ஆகிய அனைத்திலும் சிற்பங்களுக்கே முதலிடம் தந்துள்ளனர்.
காஞ்சிபுரம், மகாபலிபுரம் ஆகிய இடங்களில் உள்ள பல்லவர்
கோயில்களில் காணப்படும் சிற்பங்கள் உயர்தரமுடையவை.
சிற்பங்களின் மீது சுதை பூசி வண்ணங்கள் தீட்டுவதும், சுவரில்
வண்ண ஓவியங்கள் தீட்டுவதும் பல்லவர் காலச் சிறப்பாகும்.
காஞ்சி கயிலாச நாதர் கோயில், பனைமலைக் கோயில் ஆகிய
இடங்களில் இத்தகைய ஓவியப்படைப்புகளைக் காணலாம்.
• உருவச் சிலைகள்

    மகாபலிபுரம் ஆதிவராகப் பெருமாள் கோயில் குடைவரையின்
சுவரில் இரண்டு இடங்களில் பல்லவ அரசர்கள் மற்றும்
அவர்களுடைய தேவியர் உருவச் சிற்பங்கள் கல்வெட்டுப்
பொறிப்புகளோடு     உள்ளன. அச்சிற்பங்களை     ஆராய்ந்த
வல்லுநர்கள் அவை முறையே

     (1) சிம்மவிஷ்ணு, முதலாம் மகேந்திர பல்லவன்,
     (2) முதலாம் மகேந்திர பல்லவன், முதலாம்
     நரசிம்ம பல்லவன்
     (3) இராஜசிம்ம பல்லவன், மூன்றாம் மகேந்திரன்

என்போர் உருவச் சிலைகள் என்ற கருத்துகளைக் கூறியுள்ளனர்.
இருப்பினும் அண்மைக்கால ஆய்வுகள் அவை இராஜசிம்மன்,
மூன்றாம் மகேந்திரன் ஆகியோருடைய உருவச் சிலைகள் என்ற
கருத்தையே வலியுறுத்துகின்றன.