4.2 முற்காலப் பாண்டியர் (கி.பி. 550 - 1000)


     தமிழகத்தை ஆட்சி செய்த பல்லவப் பேரரசர்கள் காலத்திலும்
பின் எழுந்த சோழப் பேரரசுக் காலத்திலும் முற்காலப்
பாண்டியர்கள் ஆட்சி செய்தனர். புதுக்கோட்டை மாவட்டத்து
வெள்ளாற்றை வடவெல்லையாகக் கொண்டு தென்குமரி வரை
உள்ள தென் தமிழகத்தை, மதுரையைத் தலைமையிடமாகக்
கொண்டு ஆட்சி புரிந்தனர். களப்பிரரை ஒழித்து,
பாண்டியன் கடுங்கோன் (கி.பி. 560 - 590) என்பவனால்
தொடங்கப்பெற்றது முற்காலப் பாண்டியர் ஆட்சி.

மாறவர்மன் அவனி சூளாமணி (கி.பி. 590 - 620)
சேந்தன் (கி.பி. 620 - 650)
அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கி.பி. 650 - 700)
கோச்சடையன் இரண தீரன் (கி.பி. 700 - 730)
மாறவர்மன் இராஜசிம்மன் (கி.பி. 730 - 768)
பராந்தக நெடுஞ்சடையன் எனும் முதல் வரகுணன்
             (கி.பி. 768 - 815)
ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் (கி.பி. 815 - 862)
சடையவர்மன் இரண்டாம் வரகுணன் (கி.பி. 862 - 907)
பராந்தகன் வீரநாராயணன் (கி.பி. 862 - 907)
மூன்றாம் இராஜசிம்மன் (கி.பி. 907 - 925)
சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 938 - 959)
எனும் அரசர்களால் அது தொடர்ந்தது.

4.2.1 புகழ்மிகு மன்னர்கள்


     இந்த முற்காலப் பாண்டியர்களில் தம் அரும் செயல்களால்
புகழ்பெற்ற குறிப்பிடத்தக்க மன்னர் சிலரைப் பற்றிப் பார்ப்போம்.

  • பாண்டியன் கடுங்கோன்

     ஏறத்தாழ கி.பி. 560-இல் களப்பிர அரசனை ஒழித்து
மதுரையில் மீண்டும் பாண்டியர் ஆட்சியை மலரச் செய்தவன்,
பாண்டியன் கடுங்கோன்.

களப்ரனென்னுங் கலியரசன் கைக்கொண்டதனை
இறக்கிய பின் படுகடல் முளைத்த பருதிபோல்
பாண்டியாதி ராசன் வெளிப்பட்டு....


என்று இவனது புகழை வேள்விக்குடிச் செப்பேட்டுச் சாசனப்
பாடல் குறிப்பிடுகின்றது.

  • அரிகேசரி பராங்குச மாறவர்மன் (கி.பி. 650 - 700)

     இம்மன்னன் நெல்வேலிப் போரில் சேரனை வென்றவன்.
‘நெல்வேலி வென்ற நின்றசீர் நெடுமாறன்’ என்று சுந்தரர்
தேவாரம் இவனைக் குறிப்பிடுகிறது. இவனுக்குக் கூன் பாண்டியன்
என்ற மற்றொரு பெயரும்      உண்டு. சோழ அரசி
மங்கையர்க்கரசியாரை மணந்தவன். குலச்சிறையார் என்பவரை
அமைச்சனாகப் பெற்றவன். சைவசமய குரவர் திருஞான
சம்பந்தரால் சமணம் விடுத்து மீண்டும் சைவ நெறி தழுவியவன்.
இரணியகர்ப்பம், துலாபாரம் போன்ற தானங்கள் பல செய்தவன்.
பாண்டிய நாட்டில் மங்களாபுரம் எனும் நகரை நிறுவியவன்.

  • கோச்சடையன் இரணதீரன் (கி.பி. 700 - 730)

     இரணதீரன் மங்களாபுரத்தில் சாளுக்கியரைத் தோற்கச்
செய்தவன். சேரநாட்டையும், சோழநாட்டையும்,     கருநாட
தேயத்தையும், கொங்கு நாட்டையும் வென்று திரை செலுத்துமாறு
செய்தவன்.

  • பராந்தக நெடுஞ்சடையன் எனும் முதல்வரகுணன்
    (கி.பி.768-815)

     பரம வைணவனாகத் திகழ்ந்து புகழ் பெற்றவன். வேள்விக்குடி,
சீவரமங்கலம் செப்பேடுகளும், ஆனைமலை, திருப்பரங்குன்றம்
ஆகிய குடைவரைக் கோயிற் கல்வெட்டுக்களும் இவனது புகழை
எடுத்துரைக்கின்றன. இவனது அலுவலரான மாறங்காரி என்பான்
மதுரைக்கு அருகில் உள்ள ஆனைமலையில் திருமாலுக்கெனக்
குடைவரைக் கோயிலொன்றினைத் தோற்றுவித்தான். மற்றொரு
அலுவலரான சாத்தன் கணபதி என்பானும் அவனது மனைவி
நக்கன் கொற்றி என்பாளும் திருப்பரங்குன்றத்துக் குடைவரைக்
கோயில்களைத் தோற்றுவித்தனர். திருவாசகம், திருக்கோவையார்
ஆகிய நூல்களைப் பாடிய மணிவாசகர் இம்மன்னன் காலத்தவர்
எனச் சில வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர்.

  • ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் (கி.பி. 815 - 862)

     முதல் வரகுண பாண்டியனின் மகனான ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன்
சேரனையும், சிங்களவரையும் வென்று புகழ் பெற்றான். இவன்
சடையன் மாறன் என்ற பட்டம் பூண்டவனாவான். புதுக்கோட்டை
மாவட்டம் சித்தன்னவாசல் குடைவரை இவன் காலத்தில்
தோற்றுவிக்கப் பெற்றதாகும். அங்குள்ள ஓவியக் காட்சியில்
ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன், அவனது தேவி அச்சளநிம்மடி மற்றும்
சமணத்துறவி ஒருவர் ஆகியோர் உருவங்கள் இடம் பெற்றுள்ளன.
இவன் பல்லவர்களுடன் நிகழ்த்திய போர்கள் நான்காகும். அவை
ஆற்றூர்ப்போர்,      தெள்ளாற்றுப்போர், குடமூக்குப்போர்1,
அரிசிற்கரைப்போர் என்பனவாகும். பாண்டியர் கைப்பற்றியிருந்த
தொண்டைமண்டலத்துத் தெள்ளாறு எனும் ஊரில் பல்லவ மன்னன்
மூன்றாம் நந்திவர்மனுக்கும், ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபனுக்குமிடையே
கி.பி. 884 - இல் போர் நிகழ்ந்தது. இப்போரில் பல்லவன்
வென்றமையால்,     தொண்டைமண்டலத்திலிருந்த பாண்டியர்
செல்வாக்கு குறைந்தது. பல்லவ மன்னனுக்கும் ஸ்ரீவல்லபனுக்கும்
ஆணூர் எனுமிடத்தில் நிகழ்ந்த போரிலும் பாண்டிய மன்னன்
தோல்வியுற்றதாக, தளவாய்புரச் செப்பேடு கூறுகின்றது. ஆனால்
சோழநாட்டில் குடமூக்கு (கும்பகோணம்) எனும் இடத்தில்
நிகழ்ந்த போரில் பாண்டியன் ஸ்ரீவல்லபன் தெள்ளாறு எறிந்த
நந்திவர்ம பல்லவனையும், அவனுக்குத் துணை நின்ற கங்கர்,
சோழர், காலிங்கர், மகதர் ஆகிய அரசர்களையும் தோல்வியுறச்
செய்து புகழ்பெற்றான்.

     இவனது ஆட்சியின் இறுதிக் காலத்தில் சோழநாட்டு
அரிசிலாற்றங் கரையில் பல்லவமன்னன் நிருபதுங்கனுடன்
நிகழ்ந்த போரில் தோல்வியையே சந்தித்தான். அதுபோன்றே
சிங்கள மன்னன் இரண்டாம் சேனனுடன் நிகழ்த்திய போரில்
வீரமரணம் அடைந்தான்.

  • சடையவர்மன் இரண்டாம் வரகுணன் (கி.பி. 862 - 907)

    ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபனின் மறைவிற்குப்பிறகு இவனது மகன்
வீரபாண்டியன் ஒருசில ஆண்டுகளே ஆட்சிபுரிந்தான். பின்
பாண்டிய அரசனாக ஸ்ரீவல்லபனின் மற்றொரு மகனான இரண்டாம்
வரகுணன் முடிசூடிக்கொண்டான். சிறந்த     சிவபக்தனான
இம்மன்னனின் காலத்தில்தான் இவனது அமைச்சராக மணிவாசகர்
திகழ்ந்து, திருவாசகம் இயற்றினார் என்பது பல வரலாற்று
அறிஞர்கள் கண்ட முடிபாகும். வரகுணனின் கல்வெட்டுகள்
சோழநாட்டில்      திருநெய்த்தானம்,     திருக்கோடிக்கா,
திருக்காட்டுப்பள்ளி, கும்பகோணம், ஆடுதுறை, திருவியலூர்
ஆகிய ஊர்களில் காணப் பெறுகின்றன. கி.பி. 888 - இல்
சோழநாட்டின் மீது படை எடுத்துச்சென்ற வரகுணன் காவரியின்
வடகரையில் மண்ணி நாட்டிலிருந்த இடவை என்ற நகரைக்
கைப்பற்றினான். அப்போது சோழ இளவரசனாயிருந்த முதல்
ஆதித்தன் வரகுணனை எதிர்த்துப் போர்புரிந்தும் வெற்றிபெற
இயலவில்லை. பின்பு சோழநாட்டுத் திருப்புறம் பயத்தில் நிகழ்ந்த
போரில் பாண்டியன் வரகுணன் ஒருபுறமும், ஆதித்த சோழன்,
அபராஜித பல்லவன், கங்கமன்னன் பிருதுவிபதி என்போர்
எதிர்ப்புறமும் இருந்து போரிட, போர்க்களத்தில் கங்கமன்னன்
உயிர்துறந்தான். பல்லவரும் சோழரும் வெற்றி பெற்றனர்.
பாண்டியன் தோல்வியுற்றதால் சோழநாட்டிலிருந்து கைப்பற்றிய
ஊர்களை அவன் இழக்க நேரிட்டது.

  • மூன்றாம் இராஜசிம்மன் (கி.பி. 907 - 925)

    இவனை மூன்றாம் இராஜசிம்ம பாண்டியன் என்றும்
மானாபரணன் என்றும் குறிப்பர். இவன் கொடும்பாளூர்
மன்னனையும், சேரமன்னனையும் போரில் வென்றவன் எனக்
குறிக்கப்படுகிறான். சோழமன்னன் பராந்தக சோழனுடன் கி.பி.927-
இல் நிகழ்த்திய போரில் இவன் தோல்வியுற்றான். பாண்டிய
நாட்டின் மீது சோழர்களின் மலோதிக்கம் ஏற்பட அத்தோல்வி
வழிவகுத்தது.

  • சடையவர்மன் வீரபாண்டியன் (கி.பி. 938 - 959)

     இராஜசிம்மனின் மகனான வீரபாண்டியன், பராந்தக சோழனின்
மகனான உத்தமசீலியைப் போரில் கொன்றதால் “சோழன்
தலை கொண்ட வீரபாண்டியன்” எனப் பட்டம் புனைந்து
கொண்டான். பராந்தகசோழனால் பாண்டி நாட்டில் ஏற்பட்டிருந்த
சோழரின் மலோதிக்கத்தைக் குறைக்க முற்பட்டான். பின்னாளில்
சுந்தரசோழனின் மூத்தமகனும், இராஜராஜ      சோழனின்
அண்ணனுமான சோழ இளவரசன்     ஆதித்தகரிகாலனால்
கொல்லப்பட்டு வீரபாண்டியன் இறந்தான். இவனோடு முற்காலப்
பாண்டியர் ஆட்சி நிறைவெய்தியது.