4.3 இடைக்காலப் பாண்டியர் (கி.பி. 1000 - 1200)


     சோழப் பேரரசு உச்ச நிலையில் இருந்த முதலாம் இராஜராஜ
சோழன் காலத்தில் தொடங்கி மூன்றாம் குலோத்துங்கன் காலம்
ஈறாக கி.பி. 11 - 12 ஆம் நூற்றாண்டுகளில் பாண்டியர்களின்
நிலை மிகத் தாழ்வு அடைந்திருந்தது. அவர்கள் நாடு இழந்த
நிலையில் மறைந்து வாழும் அவல நிலைக்குத் தள்ளப்பட்டனர்.
இக்கால கட்டத்தில் சோழ இளவரசர்களும், பிரதிநிதிகளும்
மதுரை அரியாசனத்தில் அமர்ந்து ‘சோழபாண்டியர்’ என்ற
பட்டத்துடன் ஆட்சி புரிந்து வந்தனர்.

4.3.1 மன்னர்களின் ஆட்சி நிலை

     வீரம் மிக்க பாண்டிய அரசர்கள் சிலர் திரைமறைவில்
வாழ்ந்து அவ்வப்போது கிளர்ந்தெழுந்து பாண்டியப் பேரரசை
மீண்டும் ஏற்படுத்த முயன்று தோல்விகளையே தழுவினர். சில
பாண்டிய அரசர்கள் சோழர்களுடன் மணவினைத் தொடர்பு
கொண்டு அமைதியாக ஒரு புறம் வாழ்ந்து வந்தனர்.

    சடைய வர்மன் ஸ்ரீவல்லபன், மாறவர்மன் பராக்கிரமன்,
மாறவர்மன் ஸ்ரீவல்லபன், சடையவர்மன் குலசேகரன், பராந்தக
தேவன் போன்ற ஒரு சில பாண்டிய அரசர்கள் பாண்டிநாட்டில்
ஆட்சி புரிந்ததற்கான கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன.