4.5 பிற்காலப் பாண்டியர் (கி.பி. 1371 - 1650)


     ஹரிஹரனும் புக்கனும் விசயநகரப் பேரரசைக் கி.பி. 1336-ல்
நிறுவினர். புக்கனின் மகன் கம்பணன். அவன் மனைவி
கங்கமாதேவி, தன் கணவனது தென்னகப் படையெடுப்பை, ‘மதுரா
விஜயம்’ எனும் தனது நூலில் விரிவாகக் கூறியுள்ளாள்.
(விசயநகரப் பேரரசு பற்றிப் பாடம் 5-இல் படிக்கலாம்.)

    கி.பி. 1371-இல் கம்பணன் மதுரை நகரைக் கைப்பற்றிய பிறகு
அவனது பிரதிநிதிகளான லக்கண உடையார் போன்றவர்கள்
கி.பி. 1448 வரை மதுரையிலிருந்து ஆட்சிபுரிந்தனர்.
இக்காலகட்டத்தில் திருநெல்வேலி, இராமநாதபுரம், சோழநாடு
ஆகிய பகுதிகளில் குறுநில ஆட்சியாளர்களாகப் பாண்டியர்கள்
திகழ்ந்தனர்.

4.5.1 தென்காசிப் பாண்டியர்கள்

    கி.பி. 1422-இல் முடிசூடிய ஜெடிலவர்மன் பராக்கிரம
பாண்டியன் தென்காசி நகரைத் தோற்றுவித்து, அங்குத்
தங்கள் ஆட்சியை நிலைப்படுத்தினான். இவ்வாறு தோற்றம்
பெற்ற பாண்டிய அரசினை ஆட்சி செய்தவர்கள் ‘தென்காசிப்
பாண்டியர்’ எனக் குறிப்பிடப்பட்டனர். ‘பாண்டிய குலோதயம்’
எனும் வடமொழி நூல் இவர்களைப் பற்றி விரிவாகக் கூறுகின்றது.
தென்காசிப் பாண்டியர்கள் தங்களை ‘இறந்த காலம் எடுத்தவர்’
எனக் கூறிக்கொண்டனர். ஏறத்தாழ கி.பி. 1650 வரை பிற்காலப்
பாண்டியர்கள் பற்றிய கல்வெட்டுக் குறிப்புகள் கிடைக்கின்றன.
கீழ்க்குறிப்பிடும் மன்னர்கள் தென்காசிப் பாண்டியர் என
அழைக்கப்பட்டனர்.

(1) பராக்கிரம பாண்டியன் (கி.பி. 1422 - 1463)
(2) சடையவர்மன் குலசேகரன் (கி.பி. 1429 - 1473)
(3) அழகன் பெருமாள் பராக்கிரம பாண்டியன் (கி.பி. 1473 - 1506)
(4) சடையவர்மன் ஸ்ரீவல்லபன் (கி.பி. 1534 - 1543)
(5) சடையவர்மன் பராக்கிரம குலசேகரன் (கி.பி. 1543 - 1552)
(6) நெல்வேலி மாறன் (கி.பி. 1552 - 1564)
(7) சடையவர்மன் அதிவீரராமன் (கி.பி. 1564 - 1604)
(8) வரதுங்கராம பாண்டியன் (கி.பி. 1588 - ?)
(9) வரகுணராம குலசேகரன் (கி.பி. 1613 - ?)

17-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிவரை பாண்டியர் பற்றிய
கல்வெட்டுக் குறிப்புகள் கிடைக்கின்றன. அதற்குப் பிறகு
பாண்டியர் பற்றி எந்த ஒரு வரலாற்றுத் தடயமும் நமக்குக்
கிடைக்கவில்லை.