4.6 பாண்டியர் ஆட்சி முறை


     பாண்டிய மன்னர்கள் தம் ஆட்சி முறை மிகவும் சிறப்பாகவும்
சீர்மையாகவும் அமைய வேண்டும் என்பதற்காக, தம் நாட்டைப் பல
பிரிவுகளாகப் பிரித்து ஆட்சி செய்தனர். அதில் முக்கியமானது
நாடு. அது பல உட்பிரிவுகளைக் கொண்டது. மேலும், மக்களுக்கு
நேர்மையான ஆட்சி கிடைப்பதற்காகவும், நல்ல நெறிமுறைகள்
பின்பற்றப்படவேண்டும்      என்பதற்காகவும்     அரசனின்
தலைமையிலேயே ஆட்சி அமைப்பு இருந்தது. நிலத்தை
அளந்தனர். அளவைகளை ஏற்படுத்தினர். வணிகம், கல்வி, சமயம்
ஆகியவை சிறப்பாக வளர ஊக்கம் அளிக்கப்பட்டது.

4.6.1 பாண்டிமண்டலத்தின் உட்பிரிவுகள்

     பாண்டி மண்டலம் சங்ககாலம் தொட்டுப் பல நாடுகளாகப்
பிரிக்கப்பெற்றிருந்தது. இரணிய முட்டநாடு, புறப்பறளைநாடு,
பாகனூர்க் கூற்றம் களக்குடிநாடு, தென்பறம்புநாடு, வடபறம்புநாடு,
பொங்கலூர்நாடு தென்கல்லகநாடு, செவ்விருக்கைநாடு, பூங்குடிநாடு,
தும்பூர்க்கூற்றம் கீரனூர்நாடு, களாந்திருக்கைநாடு, அளநாடு,
துறையூர்நாடு, வெண்பைக்குடிநாடு, நெச்சுரநாடு, சூரன்குடிநாடு,
ஆசூர்நாடு, ஆண்மாநாடு கீழ்க்களக் கூற்றம், கீழ்வேம்பநாடு,
மேல் வேம்பநாடு, தென்வாரிநாடு, வடவாரிநாடு, குறுமாறை நாடு,
குறுமலைநாடு,     முள்ளிநாடு, திருவழுதிநாடு,     முரப்புநாடு,
தென்களவழிநாடு, வானவன்நாடு, குடநாடு, ஆரிநாடு, திருமல்லிநாடு
கருநிலக்குடிநாடு,     கானப்பேர்க்கூற்றம்,     அடலையூர்நாடு,
திருமலைநாடு, கொழுவூர்க்கூற்றம், தழையூர்நாடு, முத்தூர்க்கூற்றம்,
கீழ்ச்செம்பிநாடு செம்பிநாடு, வடதலைச்செம்பிநாடு, வெண்புலநாடு,
பருத்திக்குடிநாடு புறமலைநாடு, துருமாநாடு, மிழலைக்கூற்றம்,
இடைக்குளநாடு     காட்டூர்நாடு என்பன     முற்காலத்தில்
பாண்டிமண்டலத்திலிருந்த உள்நாடுகள் ஆகும்.

  • வளநாடுகள்

     சில நாடுகளையும் கூற்றங்களையும் தன்னகத்தே கொண்டு
விளங்கிய பெருநிலப்பரப்பு வளநாடு என்று வழங்கப்பெற்று வந்தது.
இத்தகைய வளநாடுகள் பாண்டி மண்டலத்தில் கி.பி. 9-ஆம்
நூற்றாண்டு முதல் கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும்,
இலக்கியங்களிலும் குறிப்பிடப் பெற்றுள்ளமையைக் காணலாம்.
மதுரோதய வளநாடு, வரகுணவளநாடு, கேரளசிங்க வளநாடு,
திருவழுதி வளநாடு, சீவல்லப வளநாடு, பராந்தக வளநாடு,
அமிதகுண வளநாடு என்பன முற்காலத்தில் பாண்டி
மண்டலத்திலிருந்த வளநாடுகள் ஆகும். நாடுகளின் பெயர்கள்
ஊர்களின் பெயர்கள் அடிப்படையிலும், வளநாடுகளின் பெயர்கள்
பாண்டி மன்னர்கள் பெற்ற சிறப்புப் பட்டங்களின் பெயர்கள்
அடிப்படையிலும் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.

4.6.2 ஆட்சிமுறை
     பாண்டி மண்டலத்திற்குப் பாண்டிய அரசனே தலைவன்
ஆவான். நீதி தவறாது செங்கோல் நடத்துவதையே அறம் எனக்
கொண்டனர், பாண்டிய மன்னர்கள். தங்கள் புதல்வர்கள்
பலருக்கும் இளவரசுப் பட்டம் கட்டி, தங்கள் நாட்டின் பல்வேறு
பகுதிகளை ஆளும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தனர். இருப்பினும்
பட்டத்தரசியின் மூத்த மகனுக்கே பேரரசன் ஆகும் தகுதியைத்
தந்தனர். பல இளவரசர்கள் ஆட்சி புரிந்தமையால்தான் மிக அதிக
அளவில் மன்னர்களின்      பெயர்கள் கல்வெட்டுகளில்
காணப்படுகின்றன.
  • அரசு அலுவலர்கள்

     அமைச்சர், படைத்தலைவர்,     சாமந்தர்,     அரையர்,
நாடுவகைசெய்வோர், வரியிலார், புரவுவரித் திணைக்களத்தார்,
திருமுகம் என்போர் உயர்நிலை அலுவலர்களாகத் திகழ்ந்தனர்.
இவர்களுள் அரையர்      உள்நாட்டுப்      பகுதிகளுக்குத்
தலைவர்களாகத் திகழ்ந்தனர். அமைச்சர்கள் அரசனுடன் இருந்து
நிர்வாகத்தை மேற்கொண்டனர். சாமந்தர், படைத்தலைவர் என்போர்
நாட்டின் பாதுகாப்பு, போர் மேற்செல்லல் ஆகிய பணிகளைக்
கவனித்தனர். நாடுவகை செய்வோர் என்போர் ஊர்கள்
அனைத்தையும் அளந்து கணக்கில் கொள்பவராவர். வரியிலார்
என்பார் அனைத்துத் தரப்பு வரிகளையும் நிர்ணயிப்பவர் ஆவர்.
புரவுவரித்திணைக்களத்தார் என்போர் நில வருவாய்த் துறையை
நிருவகிப்பவர்களாவர். திருமுகம் என்போர் அரசனின் முக்கிய
ஆணைகளை எழுத்தில் வடிப்பவர்கள். இவ்வகை உயர்
அலுவலர்களைத் தவிர பல்வேறுபட்ட அலுவலர்கள் நாட்டின்
நிருவாகத்தை மேற்கொண்டனர்

  • ஊர்ச்சபை

     பாண்டியர்களின் ஆட்சிக் காலங்களில் கிராம நிர்வாகம்
ஊர்ச்சபைகள் மூலமாக நிகழ்ந்தன. அச்சபையின் உறுப்பினர்கள்
குடவோலை மூலம் தேர்வு செய்யப்பெற்றுப் பணியாற்றினர். நிலமும்
சொந்த மனையும், கல்வியறிவும் உள்ளவர்களாகவும், அறவழி
நடப்பவர்களாகவும் உள்ளவர்கள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டனர்.
ஊர்ச்சபைகள் பல உட்கழகங்களை உடையதாகத் திகழ்ந்தன.
அறநிலயங்களைக் கண்காணிக்கும் சம்வற்சரவாரியம்,     நீர்
நிலைகளைப் பாதுகாக்கும் ஏரிவாரியம் , நிலங்களைப் பேணும்
அமைப்பாகத் தோட்ட வாரியம், நாணயங்களைக் கண்காணிக்கும்
பொன்வாரியம், வரிவசூல் செய்து அரசனுக்குச் செலுத்தும்
பஞ்சவாரியம் போன்றவை ஊர்ச்சபையின் அங்கங்களாகத்
திகழ்ந்தன. சபையோரைப் ‘பெருமக்கள்’ என அழைத்தனர். பொது
அம்பலங்களிலும், கோயில் மண்டபங்களிலும் சபையோர் கூடித்
தம் கடமைகளை ஆற்றினர். திருநெல்வேலி மாவட்டம் மானூர்க்
கோயிலில் காணப்பெறும் கல்வெட்டில் சபையோரைத் தேர்வு
செய்யும் முறைகள்,     தேர்தலுக்கு நிற்போரின் தகுதிகள்
ஆகியவைபற்றி விவரிக்கப் பெற்றுள்ளன.

  • ஆவணக் களரி

     பாண்டி மண்டலத்தில் ஊர்கள் தோறும், எழுதப்பெற்ற
ஆவணங்களைப் பாதுகாக்க ஆவணக் களரிகள் ( Registration
Offices) இருந்தன. நிலத்தை விற்போரும் வாங்குவோரும்
ஓலையில் எழுதப் பெற்ற ஆவணத்துடன் அங்குச் சென்று
நிலத்தின் பரப்பு, நாங்கெல்லை, விலை ஆகியவற்றைத் தெரிவித்து,
தம் உடன்பாட்டிற்கு உறுதிமொழி கூறி ஆவணத்தைப் பதிவு
செய்யும் வழக்கம் இருந்துள்ளது. (நிலத்தின் நான்கு திசைகளிலும்
உள்ள எல்லைக்கோடு. இது, கல்வெட்டுகளில் ‘நாங்கெல்லை’ எனக்
குறிக்கப்பெறும்.) மிக முக்கியமான ஆவணங்களின் நகல்களைக்
(Copy) கோயில்களில்     கல்வெட்டாகவும்,     செப்பேட்டு
ஆவணங்களாகவும் பதிவு செய்து காத்தனர்.

  • படை

     பாண்டிய மன்னர்களிடம் யானைப்படை, குதிரைப்படை,
தேர்ப்படை, காலாட்படை ஆகிய நால்வகைப் படைகள் இருந்தன.
கொற்கை, தொண்டி முதலான கடல்துறைப் பட்டணங்களில்
ஆண்டுதோறும்     பத்தாயிரத்துக்கு மேற்பட்ட குதிரைகள்
இறக்குமதியாயின என்பது வாசப் என்ற முகதிய ஆசிரியரின்
பயணக் குறிப்பால் அறிய முடிகிறது. பாண்டியர்கள் குதிரைகள்
வாங்குவதில் பெரும்பொருள் செலவிட்டனர் என்பதை ‘மார்க்கோ
போலா’      என்ற வெளிநாட்டுப்     பயண எழுத்தாளர்
குறிப்பிட்டுள்ளார்.

     ‘முனை எதிர் மோகர்’, ‘தென்னவன் ஆபத்துதவிகள்’,
‘பெரும்படையினர்’ என்ற சிறப்புப் பாதுகாப்புக் குழுவினர்
பாண்டியர்களுக்குத்     துணையாய் விளங்கினர் என்பதைக்
கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன.

  • அரசு இறை

     அரசிறையில் நிலவரியே முக்கியமானதாக இருந்தது.
நிலவரியை விளையும் நெல்லின் ஒரு பகுதியாகவோ அல்லது
பொற்காசுகளாகவோ வசூல் செய்தனர். அரசிறையை
ஊர்ச்சபைகளே பெற்று அரசனுக்குச் செலுத்தின. நெல்
விளையாத இடங்களில் அங்கே விளையும் தானியங்களையே
இறையாகப் பெற்றனர். நிலவரி மட்டுமன்றி, தறியிறை (துணி
நெய்யும் தறிகளுக்கு வரி), செக்கிறை (எண்ணெய் ஆட்டும்
செக்கார் செலுத்தும் வரி), பாடிகாவல் (நாடுகாவல் புரிய
வரி), மனையிறை      (வீட்டுவரி), உல்கு (சுங்கவரி)
முதலானவைகளும் நடைமுறையில் இருந்தன. அந்தந்தத்
தொழில்களை மையமாக வைத்து அத்தொழிற்பெயரோடு
வரிப்பெயரினையும் சேர்த்துக் குறிப்பிட்டனர். இறை , பாட்டம்
என்பன வரியைக் குறிப்பிடும் பெயர்களாக விளங்கின. வழிபாட்டுத்
தலங்களின் சொத்துகளுக்கும், பொது நிறுவனங்களின்
சொத்துகளுக்கும் வரிவிலக்கு அளித்திருந்தனர். அதனை இறையிலி
என்ற சொல்லால் குறிப்பிட்டனர்.

  • நாணயங்கள்

     சங்ககாலத்திலும், பிற்காலத்திலும் பாண்டிய அரசர்கள்
வெளியிட்ட காசுகள் பல நாணய இயல் ஆய்வாளர்களுக்குக்
கிடைத்துள்ளன. சங்ககாலப் பாண்டியர் வெளியிட்ட முத்திரை
நாணயம் ஒன்றில் சூரியன், ஆறு கைகள் கொண்ட சக்கரம்,
மரம், பாம்பு, வாத்து வடிவங்கள் ஒருபுறமும் பின்புறம் மீன்
சின்னமும் அச்சு குத்தப்பெற்ற நிலையில் காணப்பெறுகின்றன.
பாண்டிய மன்னன் பெயரான ‘பெருவழுதி’ என்பது எழுதப்பெற்ற
காசு ஒன்றில் குதிரை உருவமும்,     மீன் சின்னமும்
பொறிக்கப்பெற்றுக் காணப்பெறுகின்றன. மற்றொரு வகை
சங்ககாலப் பாண்டியர் காசில் யானை, வேலியிட்டமரம், சூலம்,
மனித உருவம், உடுக்கை , கும்பம், சந்திரன், திருமறு, சக்கரம்
ஆகிய உருவங்கள் ஒருபுறமும் பின்புறம் மீன் சின்னமும்
காணப்பெறுகின்றன. (திருமகள் உருவத்தைத் ‘திருமறு’ என்று
குறிப்பிடுவர்.) சில காசுகளில் பாண்டிய அரசனின் தலை உருவம்
காணப்பெறுகின்றது. சங்ககாலக் காசுகள் சதுரம் அல்லது செவ்வக
வடிவில்     காணப்பெறுகின்றன. சங்ககாலத்திற்குப் பிற்பட்ட
பாண்டிய அரசர்களின் காசுகள் வட்ட வடிவில் கிடைக்கின்றன.
பாண்டியர் இலச்சினையான இரண்டு மீன்கள், செண்டு, கோல்
ஆகிய உருவங்களோடு மன்னர்களின் பெயர்கள் அல்லது
பட்டப்பெயர்கள் குறிக்கப்பெற்ற பல காசுகள் கிடைத்துள்ளன.
சோழர்காசுகளில் காணப்பெறுவது போன்ற மனித உருவம்
பொறிக்கப்பெற்ற பாண்டியர் காசுகளும் கிடைத்துள்ளன.

  • பாண்டியர் இலச்சினை

     பாண்டிய மன்னர்கள் தங்கள் அரசு இலச்சினையாக இரண்டு
கயல் உருவங்களையும், அவைகளுக்கு இடையே செண்டு
கோல் எனும் போர்க்கருவி ஒன்றையும் பொறித்துக் கொண்டனர்.
தாங்கள் வெற்றி பெற்ற நாடுகளில் உள்ள கோயில்களில் அவர்தம்
இலச்சினையைப் பொறித்து, தங்கள் மலோதிக்கத்தைக் காட்டினர்.
சோழநாட்டுத் தில்லைக் கோயிலின் தெற்கு இராஜ கோபுரம்,
திருவானைக்கா சுந்தரபாண்டியன் கோபுரம், திருவரங்கம்
கோபுரம், மற்றும் மதுரைக் கிழக்குக் கோபுரம் ஆகிய
இடங்களில் பாண்டியர் இலச்சினைச் சிற்பங்களைக் காணலாம்.

  • பாண்டியர் போற்றிய பழக்கங்கள்

     அரசர்கள் தாங்கள் முடிசூடும் நாளில் அரசிறையைத்
தவிர்த்தனர். தாங்கள் அமர்ந்த சிங்காதனங்களுக்கு மழவராயர்,
காலிங்கராயர், முனைய தரையன், பாண்டியராயன் எனப்
பெயரிட்டும் போற்றினர். அரசர்கள் ஆணைகள் பிறப்பிக்கும்
போது இன்ன இடத்தில் இன்ன காரியங்கள் புரிந்து
கொண்டிருந்தபோது இந்த ஆணையை வெளியிட்டேன் என்று
சாசனங்களில் குறிப்பிடும் வழக்கம் அவர்களிடம் இருந்தது.
தாங்கள் பிறந்த நாட்களில் கோயில்களுக்கு நிவந்தங்கள் (கொடை)
அளிப்பதையும் போரில் இறந்துபட்ட வீரர்களின் குடும்பங்களுக்கு
’உதிரப்பட்டி’ என்ற பெயரால் வரியில்லாத நிலம் வழங்குவதையும்
மேற்கொண்டு ஒழுகினர்.

  • நில அளவு

    சோழப்பேரரசர்கள் எவ்வாறு நாடு முழுவதையும் துல்லியமாக
அளந்து ஆவணங்களாகப் பதிவு செய்தார்களோ, அதேபோன்று
பாண்டிய மன்னர் பாண்டிய நாட்டையும் முறையாக அளந்து பதிவு
செய்திருந்தனர். ‘சுந்தரபாண்டியன் கோல்’, ‘குடிதாங்கிக் கோல்’
என்ற பெயரில் அமைந்த கோல்கள் மூலம் நில அளவை
செய்ததாகக் கல்வெட்டுக் குறிப்புகள் கிடைக்கின்றன. நிலங்கள்
எல்லாம் குழி, மா, வேலி என்ற அளவீட்டு முறையில் அளந்தனர்.
அளக்கப்பட்ட நிலங்களின் எல்லைகளில் எல்லைக்கற்களை
நட்டனர். சிவாலய நிலங்களில் எல்லைக் கற்களில் சூலக்குறியும்,
வைணவ ஆலய நிலங்களின் எல்லைக்கற்களில் சக்கரக் குறியும்
இட்டனர். இவைகளை முறையே சூலக்கல், ஆழிக்கல் என்ற
பெயரால் அழைத்தனர். இறையிலியாக அளிக்கப்பட்ட சிவாலய
நிலங்களைத் திருநாமத்துக் காணி என்ற பெயராலும், வைணவ
ஆலய நிலங்களைத் திருவிடையாட்டம் என்றும், சமண, பௌத்த
பள்ளிகளுக்குரிய நிலங்களைப் பள்ளிச் சந்தம்     என்றும்
குறிப்பிட்டனர்.

  • அளவைகள்

     பாண்டி நாட்டில் எண்ணல், எடுத்தல், முகத்தல், நீட்டல் என்ற
நான்கு வகைப்பட்ட அளவைகள் அக்காலத்தில் வழக்கில் இருந்தன.
எண்ணிக்கை அடிப்படையில் அளவிடுதலை எண்ணல் என்றும்,
ஒரு பொருளை நிறுத்து அளவிடுதலை எடுத்தல் என்றும்
குறிப்பிட்டனர். பொன் வெள்ளி போன்ற உயர் பொருள்கள்
கழஞ்சு, காணம் என்ற நிறை கற்களாலும், காய்கறிகள், புளி
முதலியன துலாம், பலம் போன்ற நிறை கற்களாலும் நிறுக்கப்
பெற்று வந்தன. நெல், அரிசி, உப்பு, பால், தயிர், மிளகு, கடுகு
முதலியன செவிடு, ஆழாக்கு, உழக்கு, உரி, நாழி, குறுணி எனும்
முகக்குங் கருவிகளால் (படி, மரக்கால் போன்றவற்றால்)
அளக்கப்பட்டுவந்தன.

4.6.3 கல்வியும் சமயமும் வணிகமும்


     பாண்டியர்கள் கல்வியும் சமயமும் மேம்பட்டு வளர
ஆக்கபூர்வமான பல பணிகளைச் செய்தனர். வணிகத்தையும்
ஊக்கப்படு்த்தினர்.

  • கல்வி

    பாண்டிய அரசர்கள் மிகச்சிறந்த தமிழ்ப் புலமை
வாய்ந்தவர்களாக விளங்கினர். தலை நகராகிய மதுரையில்
சங்கம் அமைத்துத் தமிழ் வளர்த்தனர். தலைசிறந்த புலவர்கள்
49பேர் சங்கப் புலவர்களாகத் திகழ்ந்து தகுதி வாய்ந்த நூல்களைச்
சங்கத்தின் நடுவே திகழும் சங்கப்பலகை மீது ஏற்றி
அங்கீகரித்தனர். பெண்களும் கல்வியில் சிறந்து விளங்கியமையால்
பல பெண்பாற் புலவர்களின் பாடல்கள் சங்கத் தமிழ் நூல்களில்
இடம் பெற்றன. சமயம், குலம், தொழில் இவற்றில் எந்தவித
வேறுபாடுமின்றி ஆண்களும் பெண்களும் ஒருங்கே கல்வி கற்றுச்
சிறந்த புலமை எய்தியிருந்தனர் என்பது சங்க நூல்களால்
அறியமுடிகிறது.

  • சமயநிலையும் கோயில்களும்

     பாண்டியர்கள்     உமாதேவியை     மீனாட்சியாகவும்,
சிவபெருமானைச் சோமசுந்தரப் பாண்டியனாகவும் கருதி
அரசாண்டனர் என்பது பாண்டி நாட்டுப் புராணங்கள் கூறும்
செய்தியாகும். பாண்டிய அரசர்கள் மிகச்சிறந்த சைவர்களாக
வாழ்ந்தனர். ஒருசிலர் வைணவர்களாகவும், சமணர்களாகவும்
திகழ்ந்தனர். பாண்டி நாட்டில் சைவம், வைணவம், சமணம்,
பௌத்தம் ஆகிய சமயங்கள் செழித்தன. சிற்றன்னவாயில்,
ஆனைமலை உள்ளிட்ட எண்பெருங்குன்றம், திருப்பரங்குன்றம்,
கழுகுமலை, பிள்ளையார்பட்டி, குன்றக்குடி போன்ற இடங்களில்
உள்ள குடைவரைக்கோயில்கள், சிற்பங்கள்     ஆகியவை
பாண்டிய நாட்டில் பல்வேறு சமயங்களும் செழித்ததை
எடுத்துக்காட்டுகின்றன.

  • வணிகம்

     பாண்டிய நாட்டில் வணிகம் மிகவும் சிறப்புற்று விளங்கியது.
மதுரை, கொற்கை, தொண்டி முதலிய நகரங்கள் மிக முக்கிய வணிக
மையங்களாக விளங்கின. தென்பாண்டிய நாட்டுக் கடல்துறைகளில்
முத்துக்குளித்தல் மிக முக்கியத் தொழிலாக இருந்துள்ளது. பாண்டி
நாட்டு முத்துகள் பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதியாயின. பாண்டி
நாட்டில் பல்வேறு வணிகக் குழுவினர் வாழ்ந்தனர். அவர்களை
‘வணிகச் சாத்து’ எனக் குறிப்பிட்டனர். சிறந்த வணிகர்களுக்கு
அரசர்கள் ‘எட்டி’ என்ற பட்டம் வழங்கினர். ‘அற வணிகர்கள்’
திகழ்ந்ததை சங்கத்தமிழ் நூல்கள் கூறுகின்றன. முத்து வணிகம்,
சங்கறுத்தல், வளையல் செய்தல், உப்பு விளைத்தல், நூல் நூற்றல்,
நுண்ணிய பருத்தி ஆடைகள் நெய்தல் ஆகியவை பாண்டி நாட்டு
முக்கியத் தொழில்களாக விளங்கின.