5.0 பாட முன்னுரை


    தில்லி சுல்தானியப் பேரரசு வலிமை குன்றிய போது
கி.பி. 1347- இல் அலாவுதீன் பாமன்ஷா என்பான் தௌலதாபாத்
எனும் இடத்தைத் தலைமையிடமாகக் கொண்டு பாமனி
அரசைத் தோற்றுவித்தான். இதற்கு முன்பாக, கர்நாடகத்தில்
ஆட்சி செய்த போசள (HOYSALA) மன்னன் மூன்றாம்
வல்லாளன் (BALLALA III) காலத்தில்     விசய நகரத்தைத்
தலைமையிடமாகக் கொண்ட விசயநகர அரசு தோற்றம் பெற்றது.
கி.பி. 1336-இல் அரிகரர், புக்கர் எனும் உடன் பிறந்தார் இருவர்
துங்கபத்திரை நதிக்கரையில் இவ்வரசைத் தோற்றுவித்தனர். கிபி.
1342-இல் மதுரை சுல்தான் ஜியாத் உத்தீனுடன் ஏற்பட்ட
கண்ணனூர் - கொப்பம் போரில் மூன்றாம் வல்லாளனும், பின்பு
1346-இல் அவனது மகன் நான்காம் வல்லாளனும் இறந்து போக,
முதலாம் அரிகரர் போசள அரசின் வாரிசாகவும், விசயநகரப்
பேரரசராகவும் திகழும் சூழ்நிலை ஏற்பட்டது. அரிகரரும்,
புக்கரும் முறையே கி.பி. 1336-1357, 1357-1377 வரையிலும்
ஆட்சிபுரிந்தார்கள். சங்கம மரபினர் ஆட்சி இவர்களால் தோற்றம்
பெற்றது. பின்வந்த இம்மரபு அரசர்களின் ஆட்சி 1485 வரை
நீடித்தது. சங்கம குல மன்னர்களின் கீழ் சந்திரகிரியில்
சிற்றரசனாய் இருந்த சாளுவ நரசிம்மன் விசயநகர ஆட்சியைக்
கைப்பற்றி, சாளுவ மரபினரின் ஆட்சியைத் தோற்றுவித்தான்.
இம்மரபினரின் ஆட்சி கி.பி. 1509-இல் முடிவுற்றது. அதன் பிறகு
துளுவமரபினரே விசயநகரப் பேரரசர்களாய்த் திகழ்ந்தனர்.
இம்மரபினை வீரநரசிம்மன் தோற்றுவித்தான். இவர்களின்
ஆட்சிக்காலத்தில் (கி.பி. 1565-இல்) நிகழ்ந்த தலைக்கோட்டைப்
போரில் விசயநகரப் பேரரசு வலிமை குன்றியது. பின்பு திருமலை
ராயனால் தோற்றுவிக்கப் பெற்ற ஆரவீடு மரபினரின் ஆட்சி
கி.பி. 1672-இல் மூன்றாம் சீரங்கனின் மறைவோடு முடிவுற்றது.

    விசயநகரப் பேரரசின் தொடக்க காலம் முதல் அவர்களின்
ஆட்சியின் கீழ்த் திகழ்ந்த தமிழகத்தில், அச்சுத தேவமகாராயர்
கி.பி. 1535-இல் செஞ்சி, தஞ்சை, மதுரை எனும் மூன்று
நாயக்க அரசுகளைத் தோற்றுவித்தார். செஞ்சி, தஞ்சை
ஆகியநாயக்க அரசுகள் கி.பி. 17-ஆம் நூற்றாண்டில் மறைந்த
போதும் மதுரை நாயக்க அரசு கி.பி. 18-ஆம் நூற்றாண்டு வரை
தொடர்ந்தது. விசயநகரப் பேரரசின் கீழும், நாயக்கர் ஆட்சியிலும்
இருந்த தமிழகத்தின் வரலாறு பற்றி இப்பாடத்தில் காண்போம்.