5.3 மூன்று நாயக்க அரசுகள்


    இப்பாடத்தின் முற்பகுதியில் குமாரகம்பணன் தமிழகத்தின்மீது
படை எடுத்து வந்து முதலில் தொண்டை மண்டலத்தை ஆட்சி
செய்த சம்புவரையரைவென்று, பின்பு அவர்கள் துணையுடன்
பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மதுரை சுல்தான்களை ஒழித்து,
தமிழகம் முழுவதையும் விசயநகரப் பேரரசின் கீழ்க் கொண்டு
வந்ததைக் கண்டோம். இந்நிகழ்வுக்குப் பின்பு இரண்டாம்
தேவராயன் (கி.பி. 1426 - 1446) காலத்தில் இலக்கணன் என்பவன்
மதுரை நாட்டிற்கும், மாதண்ணன் என்பவன் தஞ்சை நாட்டிற்கும்
மகாமண்டலேசுவரர்களாகத் திகழ்ந்தனர். பதினாறாம் நூற்றாண்டின்
தொடக்கத்தில் கிருஷ்ணதேவராயர் பேரரசராக இருந்த காலத்தில்
நரச நாயக்கன் சோழ நாட்டிற்கும், நாகம நாயக்கன் மதுரை
நாட்டிற்கும் மகா மண்டலேசுவரர்களாக விளங்கினர்.முரண்பட்டுச்
செயல்பட்ட நாகமநாயக்கரைக் கிருஷ்ணதேவராயர் நீக்கிவிட்டு,
அவர்     மகன் விசுவநாத நாயக்கரை மதுரை நாட்டு
மண்டலேசுவரராக நியமித்தார்.

    கிருஷ்ண தேவராயருக்குப் பின்பு விசயநகரப் பேரரசரான
அச்சுத தேவராயர் தமிழ் நாட்டு ஆட்சி முறையை மேம்படுத்த
எண்ணி கி.பி. 1535-இல் செஞ்சி, தஞ்சை, மதுரை என மூன்று
மண்டலங்களாகப் பிரித்து மூன்று மகாநாயக்கத் தானங்களைத்
தோற்றுவித்தார். வையப்ப நாயக்கர் என்பவரைச் செஞ்சி
நாயக்க மன்னராகவும், தனது உறவினரான செவ்வப்பநாயக்கரைத்
தஞ்சை     நாயக்க     அரசராகவும், முன்பே மதுரையில்
மண்டலேசுவரராகத் திகழ்ந்த விசுவநாத நாயக்கரை மதுரை நாயக்க
அரசராகவும் நியமித்தார். அப்போது முதல் தமிழகத்தில் நாயக்கர்
ஆட்சி முறை தொடர்ந்தது.

5.3.1 செஞ்சி நாயக்க அரசும் நாயக்கர்களும்

    வட தமிழகமான தொண்டை மண்டலப் பகுதி முழுவதும்
செஞ்சி மகாநாயக்க தானமாக (நாயக்க அரசுப் பகுதியாக)
விளங்கியது திண்டிவனத்திற்கு அருகிலுள்ள செஞ்சி மலையின் மீது
கோட்டை, அரண்மனை ஆகியவற்றை அமைத்து வையப்ப
நாயக்கர் முதல் நாயக்க மன்னராக ஆட்சி புரியத் தொடங்கினார்.
வையப்பநாயக்கருக்குப் பின்பு பெத்த கிருஷ்ணப்ப நாயக்கர்
என்னும் துபாக்கி கிருஷ்ணப்ப நாயக்கர், கொண்டமநாயக்கர்,
முத்துகிருஷ்ணப்ப நாயக்கர் குமார வேங்கடப்பா, முத்து
வேங்கடப்பா, செஞ்சி வரதப்பா, இராமபத்ர நாயக்கர் என்னும்
செஞ்சி நாயக்கர்கள் ஆட்சிசெய்ததாகக் கல்வெட்டுகள் மூலம்
அறிய முடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் பீஜப்பூர் படைகளின்
தாக்குதல்களால் செஞ்சி நாயக்க அரசு அழிந்தது.

5.3.2 தஞ்சை நாயக்க அரசும் நாயக்கர்களும்

    விசயநகரப் பேரரசர் அச்சுத தேவராயரின் மனைவி
திருமலாம்பாவின் தங்கை மூர்த்தி மாம்பா என்பவரை மணந்த
செவ்வப்ப நாயக்கர் தஞ்சை நாயக்க அரசின் முதல்
முதல்மகாநாயன்காரராக நியமனம் பெற்றார்.கி.பி. 1535-இல் தஞ்சை
நாயக்கராகப் பொறுப்பேற்ற இவரது கல்வெட்டுச் சாசனங்கள் கி.்பி.
1590 வரை காணப்பெறுகின்றன.

    செவ்வப்பநாயக்கரின் ஆட்சிக் காலத்திலேயே (கி.பி. 1564
முதல்) தஞ்சை நாயக்க அரசின் பொறுப்புக்களை ஏற்ற அவரது
ஒரே மகனான அச்சுதப்ப நாயக்கர் கி.பி. 1600 வரை ஆட்சி
செய்தார். பின்பு அவரது மகனான இரகுநாத நாயக்கர் 1645 வரை
தஞ்சை அரசராக விளங்கினார். கி.பி. 1631 முதல் தன் தந்தை
இரகுநாதநாயக்கருடன் இணைந்து அரசுப் பொறுப்பை ஏற்ற
விசயராகவ நாயக்கர் 1675 வரை அப்பணியில் தொடர்ந்தார்.

    மதுரை நாயக்க அரசர் சொக்கநாதர் தஞ்சை அரசருக்குரிய
வல்லத்தைக் கைப்பற்றிய போது விஜயராகவ நாயக்கர் பீஜப்பூர்
படையின் உதவியை நாடினார். உதவிக்கு வந்த பீஜப்பூர் படையின்
தளபதிகளால் ஒருவரான ஏகோஜி எனும் மராட்டியர் தஞ்சை
நாயக்க மன்னர் விசயராகவ நாயக்கரை கி.பி. 1675- ஆம் ஆண்டில்
சண்டையிட்டுக் கொன்று, தஞ்சையில் மராட்டியர் ஆட்சி
முறையைத் தோற்றுவித்தார்.

கோவிந்த தீட்சிதர்


    தஞ்சை நாயக்க அரசர்களான செவ்வப்பர், அச்சுதப்பர்,
இரகுநாதர் ஆகிய மூவருக்கும் பிரதானியாகவும் ஆசானாகவும்
விளங்கியவர் கோவிந்த தீட்சிதர் என்பவராவார். கி.பி. 1635 வரை
வாழ்ந்த இவர் தஞ்சை நாயக்க அரசர்களின் புகழுக்குக் காரணமாக
விளங்கினார். இவரைப் பெரிதும் மதித்த இரகுநாத நாயக்கன்
‘கோவிந்தய்யா’ என்று தமிழில் பெயர் பொறிக்கப் பெற்ற காசுகளை
வெளியிட்டுச் சிறப்பித்தார். சிறந்த புலவராகவும் அரசியல்
வழிகாட்டியாகவும் திகழ்ந்த கோவிந்த தீட்சிதர் தஞ்சை நாட்டில்
பல கோயிற் பணிகளைச் செய்துள்ளார்.

5.3.3 மதுரை நாயக்க அரசும் நாயக்கர்களும்    கி.பி. 1535-இல் மதுரை நாயக்க மன்னராக நியமனம் பெற்ற
விசுவநாத நாயக்கரின் ஆட்சி கி.பி. 1564 வரை நீடித்தது.
இவருக்குப் பின்பு அவர் மகன் முதலாம் கிருஷ்ணப்ப நாயக்கர்
(கி.பி. 1564 - 1572), பின்பு அவரது மகன் வீரப்ப நாயக்கர் (கி.பி.
1572 - 1595), அவரது மகன் இரண்டாம் கிருஷ்ணப்பநாயக்கர் (கி.பி.
1595 - 1601) ஆகியோர் ஆட்சி செய்தனர். இவர்களது ஆட்சிக்குப்
பின்பு முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் (கி.பி. 1606 - 1609), முதலாம்
முத்து வீரப்ப நாயக்கர் (கி.பி. 1609 - 1623), திருமலை நாயக்கர்
( கி.பி. 1623 - 1659 ), சொக்க நாத நாயக்கர் (கி.பி. 1659 - 1682),
அரசி மங்கம்மாள் ( கி.பி. 1689 - 1706 ), விஜயரங்க சொக்கநாத
நாயக்கர் (கி.பி. 1706 - 1782), அரசி மீனாட்சி (கி.பி. 1782 - 1786)
ஆகியோர் ஒருவர் பின் ஒருவராக மதுரை நாயக்க அரசின்
பொறுப்பை ஏற்று ஆட்சி செய்தனர்.

தளவாய் அரியநாத முதலியார்

    மதுரை நாயக்க அரசின் முதல் நான்கு நாயக்க அரசர்களுக்கு
சிறந்த போர்த்தளபதியாகவும் அமைச்சராகவும் தொண்டாற்றியவர்
தளவாய் அரியநாத முதலியார் ஆவார். இவர் மதுரை நாயக்க
அரசை வலுவுடையதாக ஆக்குவதற்குக் காரணமாக விளங்கியவர்.
இவரது முயற்சியால் மதுரை நாட்டில் 72 பாளையங்கள் அமைக்கப்
பெற்றன. பாளையக்காரர்களின் துணையோடு நாயக்க அரசின்
படைபலத்தைப் பெருக்கினார். பல சீர்திருத்தங்களைக் கொண்டு
வந்து செம்மையான ஆட்சி நிகழ வழி வகுத்தார்.

5.3.4 மதுரை நாயக்க அரசும் நாயக்கர்களும்


    நாயக்க மன்னர்களின் ஆட்சி உரிமை தந்தை மகன் எனக்
கொடி வழி உரிமையுடையதாக இருந்தது. பேரரசுக்கு உரிய
திறையும் தேவைப்படும்போது படை உதவியும் அளித்தல் நாயக்க
மன்னர்களின் கடமையாக இருந்தது. பாளையக்காரர்களிடமிருந்தும்,
அமர கிராமங்களிலிருந்தும் அலுவலர்கள் மூலம் பெறப்படும் வரிப்
பணம் நாயக்க அரசுக்கு உரிய முக்கிய வருவாயாக இருந்தது.
பாளையக்காரர்கள் நாயக்க அரசருக்குத் தேவைப்படும் போது
படை உதவி அளிக்க வேண்டும்.

    சிற்றூர்களில் கர்ணம், மணியக்காரர் தலையாரி முதலிய
பன்னிருவர் அடங்கிய ஆயக்காரர் முறை இருந்தது. கள்ளர்,
மறவர்களின் ஊர்களில் மணியக்காரர் ‘அம்பலக்காரர்’ என
அழைக்கப்பெற்றார். கர்ணம்,     தலையாரி, மணியக்காரர்
ஆகியோரால் தண்டல் செய்யப் பெற்ற வரிப் பணத்தை அரசு
அலுவலர்களிடம் சேர்ப்பார்கள். அவர் அதனைச் சரிபார்த்து,
பிரதானிக்கு அனுப்புவார் இவ்வாறு வரிப்பணம் இருமுறை
கணக்குப் பார்க்கப் பெறுவதால் அது ‘இருசால்’ எனப்பெற்றது.

நாயக்கர் கால நாட்டமைப்பு

ஒரு பெரிய மண்டலம் சீர்மை, வளநாடு, சாவடி (உசாவடி),
நாடு, கோட்டம், பற்று என்ற உட்பிரிவுகளை உடையதாக
விளங்கிற்று.ஊர்கள் பண்டாரவாடை, அமரம், இனாம் என்ற மூன்று
பகுப்புகளில் அடங்கியிருந்தன. பண்டார வாடை என்பது பேரரசின்
நேரடி நிர்வாகத்தில் இருந்த ஊர்களாகும். அமரம் என்பது நாயக்க
அரசுக்கு உரிய ஊர்களாகும். இனாம் அல்லது மானிய கிராமம்
என்பது தனிநபர்களுக்காக அரசால் வழங்கப்பட்ட நிலங்கள் உள்ள
ஊராகும். மதுரை நாட்டில் பாளையம் என்ற பகுப்பின் கீழ்ப் பல
ஊர்கள் திகழ்ந்தன.

மதுரை நாயக்க அரசின் தலைநகரங்கள்

    மதுரைப் பெருநாடு, பிரிவுபெறாத சேலம், கோயம்புத்தூர்,
திருச்சி, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி மாவட்டங்களையும்,
திருவிதாங்கூரின் ஒரு பகுதியையும் தன்னகத்தே கொண்டு
திகழ்ந்தது. கி.பி. 1535-1615 வரை மதுரை நகரே இப்பெரு நாட்டின்
தலைநகரமாக விளங்கியது. பின்னர் கி.பி. 1616 முதல் 1634 வரை
திருச்சிராப்பள்ளி தலைநகராக விளங்கியது.கி.பி. 1634-இல் மீண்டும்
மதுரைக்குமாற்றம் பெற்ற தலைநகரம் கி.பி. 1664 வரை அதே
நிலையில் இருந்தது. பின்னர் கி.பி. 1665 இலிருந்து 1734 வரை
மீண்டும் திருச்சிராப்பள்ளியே தலைநகரமாக விளங்கலாயிற்று.

நாயக்கர் காசுகள்

    தமிழகத்தில் ஆட்சிபுரிந்த நாயக்கர்கள் விசயநகரப் பேரரசின்
நாணயங்களைப்     புழக்கத்தில்     கொண்டிருந்தபோதும்,
தங்களுக்கெனத்     தனியாகவும்     காசுகளை     வெளியிட்டு
வந்தனர். மதுரை, தஞ்சை நாயக்கர்கள் வெளியிட்ட பல காசுகள்
கிடைத்துள்ளன. அக்காசுகளில் நாயக்க அரசர்களின் பெயர்களும்
காணப்பெறுகின்றன. சில காசுகளில் நாயக்க அரசர்களின்
உருவங்களும், தெய்வ உருவங்களும் உள்ளன. தரங்கம்பாடி,
நாகப்பட்டிணம் போன்ற இடங்களில் வணிக மையம் அமைத்த
டேனியர், டச்சுக்காரர், போர்த்துகீசியர் போன்றவர்கள் நாயக்க
அரசர்களின் அனுமதி பெற்று, அவர்கள் கண்காணிப்பின் கீழ்
தங்களுக்கெனத் தனியாகக் காசுகளை வெளியிட்டனர்.

சமயம்

    தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்ட நாயக்க அரசர்களில்
பெரும்பாலானோர்     வைணவச்     சார்புடையவர்களாகத்
திகழ்ந்தபோதும், சிலர் சைவ சமயச் சார்புடையவர்களாகவும்
விளங்கினர். சமணம், கிறித்தவம், இசுலாம் போன்ற பிற
மதத்தவர்களுக்கு ஆக்கம் கொடுத்த சமயப் பொறையுடைமை
நாயக்க மன்னர்களுக்கு இருந்தது.

கலை

    விசயநகரப் பேரரசர்களும் நாயக்க அரசர்களும் கோயில்களை
விரிவுபடுத்துவதிலும், உயர்ந்த கோபுரங்களைக் கட்டுவதிலும்,
மிகுந்த ஆர்வம் காட்டியதால் கோயிற்கலை தமிழகத்தில்
தழைத்தது. பதினொரு நிலைக் கோபுரங்கள் கட்டுவது, ஐந்து
அல்லது ஏழு திருச்சுற்றுக்களுடன் கோயில்களை விரிவுபடுத்துவது,
மிகுந்த வேலைப் பாடுகளுடன் உள்ள மண்டபங்களைக் கட்டுவது
போன்ற பணிகள் தமிழகம் முழுவதும் நிகழ்ந்தன. ஸ்ரீவில்லிபுத்தூர்,
திருவண்ணாமலை, திருவரங்கம், மன்னார்குடி ஆகிய இடங்களில்
உள்ள உயர்ந்த கோபுரங்கள் நாயக்கர்களின் கொடையாகும்.
ஓவியக் கலைக்கு மிகுந்த ஆக்கம் தந்தனர் மதுரை, திருவரங்கம்,
பட்டீச்சரம், திருவலஞ்சுழி போன்ற இடங்களில் உள்ள ஓவியங்கள்
குறிப்பிடத்தக்கவையாகும்.

    மதுரை நாயக்கர் மகால், தஞ்சாவூர் அரண்மனை, செஞ்சிக்
கோட்டை அரண்மனை ஆகியவை நாயக்கர் காலக் கட்டடக்
கலைக்குச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும்.