6.0 பாட முன்னுரை


    விசயநகர     நாயக்கர் ஆட்சிக்காலத்திற்குப் பின்பு
தமிழகத்தில் வலுவான ஆட்சி அமைப்பு இல்லாமல் இருந்தது.
கி.பி.1675-இல் மராட்டியர் தமிழகத்தில் காலடி எடுத்து வைத்தனர்.
தஞ்சை நாட்டைக் கைப்பற்றி ஏறத்தாழ இரு நூற்றாண்டு்க் காலம்
மராட்டியர் தம் ஆட்சியை அங்குத் தொடர்ந்தனர். செஞ்சிப்
பகுதியும் அவ்வப்போது மராட்டியர் வசமாயிற்று. ஆர்க்காட்டிலும்,
பிறவிடங்களிலும்     இசுலாமியர்     ஆட்சி     ஏற்பட்டது.
தென்தமிழகத்தில் திகழ்ந்த பாளையக்காரர்கள் தங்களுக்குள்
ஒற்றுமையில்லாமல் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். இதனால்
அயலாருக்குத் தமிழகம் சிறிது சிறிதாக இரையாயிற்று.
தமிழகத்தின் ஒரு சில பகுதிகளைக் கைப்பற்றிய மைசூர் நாட்டு
ஹைதர் அலியும், திப்புசுல்தானும் ஆங்கிலேயரை எதிர்க்கத்
தங்கள்     வீரத்தினைக் காட்டினரே ஒழிய, நாடுகளை
ஒருங்கிணைத்து ஒற்றுமையாய்ச் செயல்பட முனையவில்லை.
சமயத்தாலும் பண்பாலும்     பிளவுபட்டிருந்த     தமிழகம்
ஆங்கிலேயருக்கு வரவேற்புக் கூடமாகத் திகழ்ந்தது.

    இந்தியாவிற்கு வணிகம் செய்ய வந்த போர்த்துக்கீசியரும்,
டச்சுக்காரரும், டேனியரும் பெரும் போட்டியிலிருந்து
விலகினர். ஆங்கிலேயரும் பிரஞ்சுக்காரரும் வணிகப் போட்டியில்
ஈடுபட்டு நாளடைவில் நாடு கவரும் முயற்சியில் முனைந்தனர்.
உள்நாட்டு அரசியல்      நிலைமைகள்     அவர்களுக்கு
நல்வாய்ப்பளித்தன. இறுதியில் ஆங்கிலேயர்கள் இந்திய
நாட்டைக்     கைப்பற்றி,     அதனைத் தங்கள் காலனி
ஆதிக்கத்தின்கீழ்க் கொணர்ந்தனர். அப்போது தமிழகம்
ஆங்கிலேயர்களின் முழுக்கட்டுப்பாட்டிற்குள் வந்தது. இங்கிருந்த
பாளையங்களில் சில ஆங்கிலேயருக்கு அடி வருடும்
ஜமீன்களாக மாறின. சில சமஸ்தானங்கள் ஆங்கிலேயர்களின்
கைப்பாவைகளாகச் செயல்பட்டன. கி.பி. 19 - 20 ஆம்
நூற்றாண்டுகளில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக மக்கள்
இயக்கங்கள் தோன்றி, நாளடைவில் வலுவடைந்தன. 20-ஆம்
நூற்றாண்டின் இடைப்பகுதியில் ஆங்கிலேய ஏகாதிபத்தியம்
ஒழிந்து நாடு சுதந்திரம் பெற்றது. பின்னர் மக்களாட்சி முறை
நடைமுறைப்படுத்தப் பெற்றது. இந்திய நாட்டின் ஓர்
அங்கமாகத் தமிழ்நாடு மாநிலம் எனும் நிலையில்
திகழ்கின்றது. புதுதில்லியில் மைய அரசு செயல்பட, அந்தந்த
மாநிலங்களில் மாநில அரசுகள் ஆட்சி புரிகின்றன.
சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு தமிழ்நாடு அரசு
செயல்பட்டு வருகின்றது.