2.3
இலக்கியம் காட்டும் கட்டடக்கலை
பல்வேறு கட்டடங்களின் அமைப்புகள்
பற்றிய குறிப்புகளைச்
சங்க இலக்கியங்களிலும் அடுத்து வந்த இலக்கியங்களிலும்
விரிவாகக் காணலாம்.
2.3.1
காஞ்சி மாநகர்
காஞ்சிபுரம் சங்க காலத்திலும்,
சங்கம் மருவிய காலத்திலும்,
பல்லவர் காலத்திலுமாகப் பல காலகட்டங்களில் படிப்படியே
வளர்ச்சி பெற்ற மிகச் சிறந்த நகராகும்.
இது, பல்லவர் குலமுதல்வர்களாகிய
தொண்டைமான்களின்
ஆட்சியில் தலைநகராகிய பெருமை கொண்டது.
பெரும்பாணாற்றுப்படை என்னும் நூலால்,
காஞ்சியின் இயற்கை
வளமும் நகர அமைப்பும் ஓரளவு தெரிய வரும்.
உலகிலுள்ள நகரங்கள் எல்லாவற்றிலும்
சிறந்து நிற்பது
காஞ்சி மாநகராகும்; இப்பெருநகரைச் சுற்றிலும் செங்கல்லால்
அமைந்த மதிலும், அதனைச் சார்ந்து படைவீரர்கள் தங்கியிருக்கும்
படை வீடுகளும் இருந்தன என்பதைப்
பெரும்பாணாற்றுப்படையால் தெரிந்து கொள்ளலாம்.
தேர்கள் ஓடும் பெரிய
தெருக்கள் இருந்தன என்பதையும்,
பல வகையான பண்டங்களை விற்கவும் வாங்கவும் பெரிய
கடைகள் இருந்தன என்பதையும், குடிமக்கள் நெருக்கமாக வீடுகள்
கட்டிக் கொண்டு வாழ்ந்தனர் என்பதையும், இந்தக் கச்சிமாநகரில்
திருவெஃகா என்ற வைணவத்தலம் உள்ளது என்பதையும்
பெரும்பாணாற்றுப்படை குறிப்பிடுகின்றது.
சீத்தலைச் சாத்தனார் எழுதிய
மணிமேகலைக் காப்பியமும்
காஞ்சிபுரத்தைச் சிறப்பாக குறிப்பிடுகிறது. துறவறம் பூண்ட
மணிமேகலை காஞ்சிபுரத்திற்கு வந்து தருமதவனம் என்ற இடத்தில்
தங்கியிருக்கையில், மணிமேகலா தெய்வம் அவளை அன்புடன்
அழைத்துச் சென்று, தான் அமைத்திருந்த மணிபல்லவப்
பொழிலையும் கோமுகிப் பொய்கையையும் கண்டு மகிழுமாறு
செய்தது.
காஞ்சி மாநகர் பௌத்தர்களுக்கேயன்றிச்
சமணக் கோட்பாடு
உடையவர்களுக்கும் இடந்தந்த சிறப்பினையுடையது. சைவமும்
வைணவமும் சாக்கதமும் (காமாட்சியம்மன் கோயிலும்) கௌமாரமும்
(குமர கோட்டமும்) பௌத்தமும் சமணமும் தத்தம்
கொள்கைகளைப் பரப்புவதற்கு வாய்ப்பளித்த இடமாக விளங்கியது.
தமிழ்நாட்டிலேயே கல்வியும் சமயஞானமும் போதிக்கும் கடிகை
(பல்கலைக் கழகம் போன்ற நிறுவனம்) இங்கிருந்து செயற்பட்டது
என வரலாற்றால் தெரிய வருவதால், இவற்றுக்கெல்லாம்
இடங்கொடுக்கும் பலவகைக் கட்டடங்கள் தோன்றியதில்
வியப்பில்லை.
மேலும், காஞ்சியைச் சுற்றிலும்
பல கோட்டைகள் இருந்ததால்
காஞ்சி உள்ளிட்ட தொண்டை நாட்டின் ஒரு பகுதியை ‘எயிற்
கோட்டம்’ என்றும், காஞ்சியை ‘எயிற்பதி’ என்றும் அழைத்தனர்.
2.3.2
மதுரை மாநகர்
சிலப்பதிகாரத்து ஊர் காண்காதையில்,
கட்டடக் கலைக்குரிய
செய்திகள் பல உள்ளன. கவுந்தியடிகளிடம் விடைபெற்றுக்
கொண்டு, மதுரையைச் சுற்றிப் பார்க்கச் செல்லுகின்றான் கோவலன்.
அவன் கண்டு மகிழ்ந்ததாக கட்டடங்கள் பல கூறப்படுகின்றன.
அவற்றுள், சிவன் கோயிலும் திருமால் கோயிலும் பலராமன்
கோயிலும் முருகன் கோயிலும் அறநெறிக்கண் நிற்கும் முனிவர்
பள்ளியும், பாண்டியன் அரண்மனையும் இடம் பெறுகின்றன.
மேலும், மதுரையில் செழுங்குடிச்
செல்வரும் மன்னரும்
விரும்பும் வீதியும், பரத்தையரின் இருபெரும் வீதியும் செல்வம்
குவிந்துள்ள அங்காடி வீதியும் இரத்தினக் கடை வீதியும் தானியம்
விற்கும் கூல வீதியும் நால்வேறு தெருவும் சதுக்கமும் சந்தியும்
மன்றமும் பலபிரிவுகளையுடைய தெருக்களும் திரித்து கோவலன்
புறஞ்சேரிக்குத் திரும்பினான். இவ்வாறு கூறுமிடத்து பல்வகைக் கட்டடங்கள் மதுரையை அணி செய்தன
என்பது புலனாகும்.
2.3.3
நீர்ப்பாசனமும் கட்டடக் கலையும்
நீரின் சிறப்பினை
நன்குணர்ந்த மன்னர்கள்
அக்காலத்திலேயே நீர் ஆதாரங்கள் பெருக்கும் வகையில்
திட்டமிட்டுச் செயற்படுத்தினர்.
பாண்டியன் நெடுஞ்செழியனைக்
குடபுலவியனார்
புறநானூற்றில் பாடிய பாடல் நீர் ஆதாரங்களைக் குறித்துக்
கூறுவதாகும். (புறம்-95) அது, நீரை இன்றியமையாத
உடம்
பிற்கெல்லாம் உணவு கொடுத்தவர்களே உயிரைக்
கொடுத்தவர்களாவர் ; உணவால் உளதாகியதே உடம்பு.
ஆதலால் உணவென்று சொல்லப்படுவது நிலத்தொடு கூடிய
நீராகும். அந்த நீரையும் நிலத்தையும் ஒருவழிக்
கூட்டினரேல் அவர்கள் இவ்வுலகத்து உடம்பையும்
உயிரையும் படைத்தவராவர் (படைப்புக் கடவுளேயாவர்).
நெல் முதலியவற்றை விதைத்து மழை நீரைப் பார்த்திருக்கும்
புன் செய் நிலம் (வானம் பார்த்த பூமி) இடமகன்ற பெரிய
நிலத்தை உடையதாயினும் மன்னனது முயற்சிக்குப்
பயன்படாது. ஆதலால், பாண்டியனே ! விரைந்து நிலம்
பள்ளமாக உள்ள இடத்தில் நீர் நிலை மிகுமாறு நீரைத்
தடுத்துச் சேமித்து வைத்தல் நல்லது. அவ்வாறு செய்தவரே
நிலைத்த புகழைக் கொண்டவர் என்ற கருத்தை
வெளிப்படுத்தியுள்ளது.
இவ்வாறு நீர் ஆதாரத்தைத்
தேடும் கடமையுடையவன்
மன்னன் என்பதைப் பட்டினப்பாலை, குளந்தொட்டு
வளம்பெருக்கி (284) என்று குறிப்பிடுகிறது. குளம் தொட்டு
என்ற குறிப்பால் குளம் தோண்டப்படுவதால் உண்டாவது என்பது
புலப்படும்.
ஏரியும் குளமும் கிணறும்
செயற்கையாகத்
தோண்டப்படுவதால் அமைந்திடும் நீர்நிலையாகும்; அருவி,
பொய்கை ஆகியவை இயற்கையாக மலைக் கண் உண்டாகக்
கூடியவை.
சோழ மாமன்னர்கள் காவிரியாற்று
நீரினைச் சிறப்பாகப்
பயன்படு்த்தினர்; அதற்கேற்பத் திட்டமிட்டு அணைகளையும்
மதகுகளையும் வாய்க் கால்களையும் ஏற்படுத்தி நீர்ப்பாசனத்திற்கு
அனைத்து வசதிகளையும் செய்து புகழ் படைத்தனர். கரிகாலன்
கட்டிய கல்லணையில் அமைந்த தொழில் நுட்பத்தைப் பின்னர்க்
காண்போம்.
மேலும் முனிவர்கள் வாழும்
அறச்சாலைகள் குற்றவாளிகளை
அடைத்து வைக்கும் சிறைச்சாலைகள், பல்வேறு தொழில்
புரிவோரது தொழில் கூடங்கள் போன்ற
பல்வேறு கட்டிட அமைப்புகளும் அக்காலத்தில் இருந்தமையை இலக்கியச்
சான்றுகள்
வெளிப்படுத்துகின்றன.
|