2.7 பல்லவர் கால ஓவியக் கலை

பல்லவர் காலம் கோயிற் கட்டடக் கலைக்கும் சிற்பக்
கலைக்கும் பெயர் பெற்றதாக இருந்துள்ளதைப் போல, ஓவியக்
கலைக்கும் பெயர் பெற்றதாகவே இருந்துள்ளது. பல்லவர்
காலத்தில் பல கோயில்களில் ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன.
ஆனால் பெரும்பாலான ஓவியங்கள் அழிந்து விட்டன. அவ்வாறு
அழிந்த ஓவியங்கள் இருந்த இடங்களில் காணப்படும்
வண்ணங்களின்     எச்சங்கள் கொண்டு     ஓவியங்கள்
இருந்துள்ளமையை அறிய முடிகின்றது.
2.7.1 மகேந்திர வர்மன் கால ஓவியம்

பல்லவ மன்னன் மகேந்திர வர்மனுக்குச் சிறப்புப் பெயர்கள்
பல உண்டு. இவன் சித்திரக் கலையில் மிகவும் தேர்ச்சி
பெற்றவனாக இருந்தான். எனவே இவனுக்குச் “சித்திரகாரப் புலி”
என்ற சிறப்புப் பெயர் வழங்கிற்று. மகேந்திர வர்மன் பல
கோயில்களில் ஓவியங்களை வரையச் செய்துள்ளான். ‘தட்சிண
சித்திரம்’ என்னும் ஓவிய நூலுக்கு இவன் உரை எழுதியதாக இவனது மாமண்டூர்க் குடைவரைக் கோயிலில் இடம் பெறும் கல்வெட்டின் மூலம் அறியலாம். இக்கோயிலில் எஞ்சியுள்ள வண்ணங்களைக் கொண்டு இங்கு மகேந்திர வர்மன் காலத்தில் ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன என்பதையும் அவை மறைந்து போயின என்பதையும் உணரலாம். பல்லவர் காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் சில மட்டுமே கிடைத்துள்ளன.

2.7.2 இராச சிம்மன் கால ஓவியம்

மகேந்திர வர்மனுக்கு அடுத்ததாக இராச சிம்மனது கால
ஓவியங்களே நமக்குக் கிடைக்கின்றன. அவை காஞ்சி கைலாச
நாதர் கோயில்
, பனைமலை தாலகிரீசுவரர் கோயில் ஆகிய
இடங்களில் உள்ளன. அவை பற்றி இனிக் காணலாம்.

 • கைலாச நாதர் கோயில் ஓவியம்


 • காஞ்சிபுரம் கைலாச நாதர் கோயிலில் இராச சிம்மன்
  காலத்தைச் சேர்ந்த ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன.
  அவ்வோவியங்களுக்கு மேல் கி.பி பன்னிரண்டாம் நூற்றாண்டில்
  சோழர் காலத்தில் ஓவியம் தீட்டப்பட்டுள்ளது. அதனை
  அடுத்தாற்போல் கி.பி பதினான்காம் நூற்றாண்டில் விசயநகர
  அரசனான குமார கம்பணன்     காலத்தில் மீண்டும்
  அவ்வோவியத்தின் மேல் ஓவியம் தீட்டப்பட்டிருக்கலாம் எனக்
  கருதப்படுகிறது. தொல்லியல் துறையினரால் இரசாயன முறையில்
  மேலே உள்ள வண்ணங்கள் நீக்கப்பட்டு இராச சிம்மன்
  காலத்தில் தீட்டப்பட்ட ஓவியம் கண்டு பிடிக்கப்பட்டது.

  இந்த ஓவியம் அளவில் மிகப் பெரியதாக இல்லை. இருப்பினும்
  அஜந்தா ஓவியங்களோடு ஒப்பிடும் அளவிற்கு உருவங்களின்
  ‘பா’வம், வண்ணங்கள், கோடுகளின் தன்மை ஆகியன
  அமைந்துள்ளன.

 • சோமாஸ்கந்தர் ஓவியம்


 • இராச சிம்மன் காலத்துக் கோயில் கருவறைகளின் பின் சுவரில்
  புடைப்புச் சிற்பமாகக் காணப்படும் சோமாஸ்கந்தர் சிற்பம்தான்
  இங்கு ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளது. இதில் சிவபெருமானுடைய
  உருவம் பெரிதும் அழிந்துவிட்டது. சிவபெருமான் காலடியில் ஒரு
  பூதமும், பார்வதிக்கு அருகே அழகான பணிப் பெண்ணின்
  உருவமும் அமைந்துள்ளன. சிவபெருமானின் கரங்கள் இரண்டு
  தெரிகின்றன. அவற்றில் ஆபரணங்கள் மற்றும் கேயூரம், இடையில்
  உதர பந்தம், மார்பின் ஒரு பகுதியில் முப்புரி நூல் ஆகியன
  காணப்படுகின்றன.     இடக்காலை மடக்கியும் வலக்காலைத்
  தொங்கவிட்டும் அமர்ந்திருக்கும் அவரது ஆடை மடிப்பு அழகுற
  அமைந்துள்ளது. முருகப் பெருமானது தலையில் கீரீடமும் அவரது
  ஒருபுறக் கண்ணும் தெளிவுறத் தெரிகின்றன. உமையின் ஒரு
  கரம் முருகனைத் தட்டிக் கொடுப்பது போல் அமைந்துள்ளது.
  மொத்தத்தில் சோமாஸ்கந்தர்     சித்திரம் முழுமையாகக்
  கிடைக்கவில்லை. எனினும் கிடைத்த பகுதிகளை வைத்து அழிந்து
  போன பகுதிகளையும் கற்பனைக் கண்கொண்டு கண்டு
  இன்புறுமாறு அமைந்துள்ளது.

 • பிரம்மனும் சிவனும்


 • கோயிலின் பின்புறத்தில் உள்ள ஒரு சிறு கோயிலினுள்
  நான்முகனது உருவம் காணப்படுகிறது. பிரம்மனது முகங்கள்
  மிகவும் கம்பீரமாகத் தீட்டப்பட்டுள்ளன. அவ்வோவியத்திற்கு
  எதிர்ச்சுவரில் சிவபெருமான் யோகப் பட்டை     தரித்து
  யோகாசனத்தில் அமர்ந்த     நிலையில்     காணப்படுகிறார்.
  இச்சிவபெருமான் ஓவியத்தின் ஒரு பகுதியே எஞ்சியுள்ளது.
  கோயிலின் வடக்கேயுள்ள சிறு ஆலயங்கள் சிலவற்றில் ஓவியங்கள்
  உள்ளன. இவற்றில் கின்னர உருவங்கள் இடம் பெற்றுள்ளன.
  பல்லவர் காலத்தைச் சேர்ந்த ஓவியங்களில் காஞ்சி கைலாசநாதர்
  கோயிலில் கிடைத்துள்ள ஓவியங்கள் சிறப்பான இடத்தைப்
  பெறுகின்றன.

 • பனைமலை தாலகிரீஸ்வரர் கோயில் ஓவியம்


 • தாலகிரீஸ்வரர் கோயிலில் அழிந்தது போக எஞ்சியுள்ள ஒரே
  ஓர் ஒவியம். பார்வதி தேவியின் ஓவியம் ஆகும். தேவியின்
  தலையில் மகுடமும் தலைக்கு மேலே ஒரு     குடையும்
  காணப்படுகின்றன. இவர் இடக் காலை மடக்கிச் சுவரில் வைத்தும்
  வலக்காலைத் தரையில் ஊன்றியும் நிற்கும் காட்சி அழகுறத்
  தீட்டப்பட்டுள்ளது. கண்கள் பாதி மூடியும் பாதி திறந்தும் யோக
  நிலையில் உள்ளது போல் அமைந்திருக்கின்றன. கழுத்தில் உள்ள
  மணிமாலையும், பூவேலைப்பாட்டுடன் ஓரத்தில் கட்டங்களுடன்
  காணப்படும் மலோடையும் கண்ணைக் கவருவனவாய்
  அமைந்துள்ளன.

  முகம் மஞ்சள் வண்ணத்திலும், உடல் இளஞ்சிவப்பு நிறத்திலும்,
  மணிமகுடத்தின்     ஓரங்கள்     கறுப்பு     வண்ணத்திலும்
  காட்டப்பட்டுள்ளன.     மென்மையான     கோடுகளால்
  வரையப்பட்டுள்ளதால் உமையின் உருவம் மிகவும் அழகுபெற்று
  விளங்குகிறது. அருகில் சிவபெருமானின் நடனக் காட்சி
  இருந்தமைக்கான சுவடு தெரிகிறது.

 • ஆர்மா மலை ஓவியம்


 • வட ஆர்க்காடு மாவட்டம் ஆம்பூருக்கு     அருகில்
  மலையாம் பட்டு என்னும் ஊர் உள்ளது. அதனருகில் ஒன்றரைக்
  கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது ஆர்மா மலை. இம்மலையில்
  குகைத் தளம் உள்ளது. இதில் சில ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. கைலாச நாதர் கோயிலிலும் பனைமலை தாலகிரீசுவரர் கோயிலிலும் இருக்கும் ஓவியங்கள் இந்து சமயப் புராணத்தை அடிப்படையாகக் கொண்டு வரையப்பட்டவை. ஆனால் ஆர்மா மலைக் குகையில் சமண சமயத்தை சார்ந்த ஓவியமும், இந்து சமயத்தைச் சார்ந்த ஓவியமும் இடம் பெற்றுள்ளன. இவை இராச சிம்மன் காலத்துக்குப் பிந்தியவை (கி.பி. 9-ஆம் நூற்றாண்டு) ஆகும்.

  குகைத் தளத்தின் மேல் விதானத்தில் சுதை பூசி வண்ணம்
  தீட்டியுள்ளனர். இதில் ஒரு பகுதியில் வளைந்து செல்லும்
  கொடிகளும் இலை, தளிர்களும் காணப்படுகின்றன. அன்னங்கள்
  இறக்கையை     விரித்துத் தலையைத் திருப்பி உயிர்த்
  துடிப்பு உள்ளவையாக உள்ளன. சதுரமான எட்டுக் கட்டங்களில் சில உருவங்கள் வரையப்பட்டுள்ளன. பெரும்பகுதி அழிந்து விட்டது. இரண்டு கட்டங்களில் உள்ள உருவங்கள் மட்டும் எஞ்சியுள்ளன. அக்னி தேவன் நீண்டதாடி, தீப்பிழம்பு போன்ற சடை முடி, மார்பில் பூணூல் ஆகியவற்றுடன் தமது வாகனமாகிய
  வெள்ளாட்டில் தமது தேவியுடன் அமர்ந்த கோலத்தில்
  காணப்படுகிறார். மற்றொரு கட்டத்தில் எருமைக் கிடா ஒன்று
  இடம் பெற்றுள்ளது. இதன் தலைப்பகுதி அழிந்து விட்டது. இது
  எமனின் வாகனமாகும். இது எமனுக்குரிய தெற்குத் திசையில்
  அமைந்துள்ளது. இவற்றை வைத்துப் பார்க்கின்றபோது
  கட்டங்களில் இருந்தவை. திசைக்காவலர் எண்மரின் ஓவியங்கள்
  என்பதை உணரலாம். இக்கட்டங்களை அடுத்துத் தடாகம் ஒன்று
  அமைந்துள்ளது. அதில் இலைகளும் மலர்களும் காணப்படுகின்றன.