2.2 நொண்டி நாடகம்

சிற்றிலக்கிய நாடக வகைகளுள் நொண்டி நாடகம் ஒரு
வகையாகும். மேடையில் தனியொரு மனிதனாகத் தோன்றும்
கதைத் தலைவனின் தோற்றத்தை அடிப்படையாகக் கொண்டு
‘நொண்டி’ எனப் பெயர் பெற்றது. இதனை ‘ஒற்றைக்கால்
நாடகம்’ என்றும் அழைப்பர்.

திருச்செந்தூர் நொண்டி நாடகம், சீதக்காதி நொண்டி நாடகம்,
சாத்தூர் அய்யன் நொண்டி நாடகம், திருவிடைமருதூர் நொண்டி
நாடகம், ஞான நொண்டி நாடகம் போன்றவை குறிப்பிடத்தக்க
நொண்டி நாடகங்களாகும்.

2.2.1 தோற்றம்

நொண்டி நாடகத்தின் தோற்றம் கி.பி 17 ஆம் நூற்றாண்டு
ஆகும். சாதாரண மக்களுக்காக நடத்திக்காட்டப்பெறும் வண்ணம்
இந்நாடகம் மேடையில் நடித்துக்காட்டப்பட்டது. மக்களுக்கு
அறவொழுக்கத்தினை வலியுறுத்துவதே இந்நாடகத்தின் நோக்கம்.
17, 18 ஆம் நூற்றாண்டுகளில்     தமிழகத்தில் மிகவும்
செல்வாக்குடன் இந்நாடகம் விளங்கியது.

2.2.2 வடிவம்

நொண்டி நாடகம் இசை கலந்த இலக்கிய நாடகம் ஆகும்.
வெண்பாவும், ஆசிரியப்பாவும் கலந்து சிந்து, ஆனந்தக்களிப்பு
ஆகிய பாவினங்களால் இது ஆக்கப்பட்டிருக்கும்.

பெரும்பாலும் மக்களிடையே வழக்கில் இருந்து வந்த வழக்குச்
சொற்களைக் கொண்டு நொண்டி நாடகம் ஆக்கப்பட்டிருக்கும்.
இது தமிழ் நாடகப்போக்கில் குறிப்பிடத்தக்க மாற்றமாகும்.
மக்களிடையே கருத்துப்பரவுதல் செய்வதற்கு அவர்களின்
மொழியிலேயே நாடகம் ஆக்கப்பட்ட நிலையை இது
உணர்த்துகிறது. மக்களின் மத்தியில் நாடகத்தின் கருத்தை
எடுத்துச் சொல்லத்தக்க வகையில் நாடகம் எளிமைப்படுத்தப்
பெற்றது. மக்களும் இதனை விரும்பி ஏற்றுக்கொண்டனர்.
இவ்வகை நாடகங்கள் வடிவமைப்பில் மக்களை வெகுவாக
ஈர்த்தன.

அனைத்து வகை நொண்டி நாடகங்களும் ஒரே வகை
வடிவமைப்பையே கொண்டுள்ளன. அனைத்துத் தரப்பினரும்
எளிதில் புரிந்து கொள்ளத்தக்க வண்ணம் இவை எளிய பாடல்
வரிகளால் ஆக்கப்பட்டிருந்தன. சமுதாய அவலங்களை
நகைச்சுவை மூலம் நையாண்டி (கேலி) செய்வதற்கு எளிய நடை
இன்றியமையாததாகும்.

2.2.3 கதை

நொண்டி நாடகங்கள் யாவும் பொதுவான கதைக்கருவைக்
கொண்டவை. கதைத் தலைவன் தன்னுடைய பழைய வாழ்வை
நினைவு கூர்வதாக நொண்டி நாடகக் கதை அமையும். எனினும்
கதைத் தொடக்கத்தில் பெற்றோரிடம் அவன் வளர்வதாகவும்,
அவ்வாழ்வு பிடிக்காமல் வெளியேறுவதாகவும் நாடகக் கதை
தொடங்கும். தனது மகிழ்ச்சியான வாழ்வை நோக்கி வீட்டை
விட்டுச் சொல்லாமலேயே வெளியேறுவான் கதைத் தலைவன்.
சில நாட்களிலேயே பொருளனைத்தும் இழந்த நிலையில் திருடத்
தொடங்குவான். திருடிக் கிடைத்த பொருளில் இன்பம் அடைய
நினைப்பான். மதுவுக்கும், மாது (பெண்)வுக்கும் அடிமை ஆவான்.
பொருளை இழந்து துன்பத்திற்கு ஆளாவான். உதவிக்கு யாரும்
முன்வரக் காணாமல் துடிப்பான். பரத்தையரும் தன்னைத்
துரத்தியடிக்க, மேலும் தீய வழியில் செல்லத் துணிவான்.

அவனுக்குச் சோதனை தொடரும். குதிரையொன்றைத் திருட
முயலுகையில் கையும் களவுமாகக் காவலாளியிடம் பிடிபடுவான்.
அவனது (அவயங்கள்) கால்கள், கைகள் துண்டிக்கப்படும்.
இவ்வேளையில் அவன் கடவுளை நினைத்துக் கூக்குரலிட்டு,
அழுவான். கடவுள் கருணையால் இழந்த கால்களை மீளப்
பெறுவான். கடைசி வரை கடவுளைப் போற்றி நல்லவனாகவே
வாழ்வான்.

இதுவே நொண்டி நாடகத்துக்கான பொதுவான கதையமைப்பு.
இந்நாடக வடிவத்தினைக் கைக்கொள்ளும் நாடகாசிரியர்கள்
தாங்கள் விரும்பும் நிகழ்வுகளை இக்கட்டமைப்புக்குள் மாற்றி
அமைத்துக் கொண்டனர்.

எடுத்துக்காட்டாக, திருச்செந்தூர் நொண்டி நாடகம் முருகனை
மையப்படுத்தி அமைவதையும், சீதக்காதி நொண்டி நாடகம்
இசுலாமிய நெறியை மையப்படுத்தி அமைந்துள்ளமையையும்
காணலாம்.

2.2.4 கருத்து வெளிப்பாடு

நொண்டி நாடகங்கள் யாவும் பொதுவான கதைக் கருவைக்
கொண்ட தன்மையை அறிந்தோம். கதாநாயகன் தீயவனாகக்
காமுகர் வலையில் வீழ்தல்; தண்டனைக்குள்ளாதல்; கால், கை
இழத்தல்; பெரியோர் வழிகாட்டுதலின் பேரி்ல் இறைவனை
வேண்டி இழந்த அவயங்களை மீண்டும் பெறல் - இதுவே
பொதுவான கதைக்கருவாக உள்ளது.

இதன் மூலம் என்ன செய்தி மக்களுக்குக் கிடைக்கிறது?
‘ஒழுக்கமற்ற வாழ்வு மேற்கொள்வோர் கடுமையான தண்டனைக்கு
ஆளாக நேரும்’ என்னும் கருத்து வெளிப்பட்டு நிற்கிறதல்லவா!

அக்காலச் சூழலில் விபச்சாரம், திருட்டு, ஏமாற்று போன்றவை
சமுதாயத்தில் கொடுஞ்செயல்களாகக் கருதப்பட்ட நிலையினை,
நொண்டி நாடக வடிவம் வெளிப்படுத்துகிறது.

2.2.5 வழங்கு முறை

நொண்டி நாடகமானது தனியொரு கதை மாந்தரை
முன்னிலைப் படுத்தி அமையும் நாடகமென்பதை அறிந்தோம்.
இந்நாடகப் பாத்திரங்களில் நொண்டி ஒருவனே மேடை மீது
தோன்றுவான். தனது வரலாறு முழுவதையும் தானே கூறிச்
செல்வான்.

கடவுள் வாழ்த்துடன் நாடகம் தொடங்கும். ‘நொண்டி’ நாடகக்
கதைக்கேற்ப அந்தந்த மதக்கடவுளரைப் போற்றும் வண்ணம்
இஃது அமையும்.

நொண்டி தனக்குத்தானே கேள்வி எழுப்பிக் கொள்வதும்,
தனது நாட்டுவளம், கல்வி கற்ற முறை, மண நிகழ்வு, தனது
பயணம் போன்றவற்றை விவரித்தபின்னர், தீய நண்பர்களின்
சேர்க்கையால் தான் திருட நேர்ந்ததைக் குறிப்பிடுவான்.
திருட்டினால் விளைந்த தீய விளைவுகளைக் கூறுவதே
இந்நாடகத்தின் மையக் கருத்தாதலால் அந்நிகழ்ச்சி வலியுறுத்திக்
கூறப்படும்.

திருட்டுத் தொழிலும்,     பரத்தையர் உறவும் தனது
செல்வத்தையெல்லாம் கரைத்த நிலையையும், தொடர்ந்து
அரசனின் குதிரையையே திருட நேர்ந்ததையும், வேதனையோடு
வெளிப்படுத்துவான்.

அரண்மனைக் காவலாளிகளிடம் பிடிபட்டு, மாறுகால் மாறுகை
வெட்டப்படுவான். அவையவங்களை இழந்து, பெருந்துயருற்று
நிற்கும் போது நல்லவர் ஒருவரால் ஆதரவு அளிக்கப்பெற்று,
குறி்ப்பிட்ட இறைத் தலத்தை அடைந்து வழிபட்டு, கை கால்களை
மீளவும் பெறுகிறான். இத்துடன் நொண்டி நாடகக்கதை நிறைவு
பெறுகிறது.

எடுத்துக்காட்டாக திருவிடைமருதூர் நொண்டி நாடகம் இங்கே
தரப்படுகிறது. இந்நாடகத்தின் ஆசிரியர் அனந்த பாரதி ஆவார்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோன்றிய நாடகம் இது.

கடவுள்     வாழ்த்து,     தோடையம்     (நாடகத்தின்
முன்மொழிப்பாட்டு) ஆகியவற்றைத் தொடர்ந்து, கதைத்
தலைவனான நொண்டி மேடையில் தோன்றி நடிப்பதாக
இந்நாடகம் அமைந்துள்ளது.

பொன்னி நதியில் நீராடி, திருநீறு அணிந்து, சிவபஞ்சாக்கர
உருச் செபித்து, கையில் குளிசக் கயிறும், மார்பில் ரச மணியும் தரித்து, மார்பில் முத்துமாலைகள் ஒளி வீசும்படி நொண்டி தோன்றுவான்.

பொன் சரிகைப் புள்ளி உருமாலை - வாகைப்
பூவணிந்து கட்டியுள்ளே மேவுமிந்திர சாலை
விஞ்சை மூலி ஒன்றை வைத்துக்காலை - நொண்டி
விளம்பரஞ் சபையிலாட விருதுகட்டினேனே

(திருவிடை. நொண்டி. பக். 7)

நொண்டிச் சிந்திலும், விருத்தம் போன்ற பாக்களிலும்
பாடல்கள் பாடி நடிப்பான். நாடக முடிவில் இழந்த கால்களைப்
பெற்றுக் கொள்வதாகக் காட்டப்படுகிறது.

2.2.6 நாடகப் பங்களிப்பு

நொண்டி வடிவிலான நாடகமானது அக்கால கட்டத்துச்
சமுதாயத்துக்கு எத்தகைய     பங்களிப்புச் செய்திருக்க
முடியுமென்பதை எண்ணிப்பார்த்தல் வேண்டும்.

சமய நோக்கில் நகைச்சுவை மற்றும் அச்சுறுத்தல் உணர்வுடன்
சமயக் கருத்துகளைப் பரப்புவதற்கு இவ்வகை நாடகம்
பயன்பட்டிருக்கிறது.

மேலும், அறக்கருத்துக்களை மக்களிடையே கொண்டு
செல்லுதல் மற்றும் தம்மை ஆதரித்த வள்ளல்களின்
பெருமையைப் போற்றுதல் போன்றவற்றிற்கும் இவ்வகை நாடகம்
பங்களிப்புச் செய்திருக்கிறது.

நடிப்புக் கூறுகளை ஆழமாக வெளிப்படுத்திக் காட்டுவதில்
நொண்டி என்னும் தனிப்பாத்திரம், தனி நடிப்புப் ( Mono -
Acting) பாணியைத் தமிழுக்கு அறிமுகம் செய்திருக்கிறது
எனலாம்.