5.4 கலைஞர்கள் உருவாக்கம்

தமிழகத்தில் இக்கால கட்டத்தில் ஏற்பட்ட கலையின்
புத்துணர்ச்சியும் மேடையின் புதுப்பொலிவும் பல புதிய நாடகக்
குழுக்களை உருவாக்கிய நிலையில், அக்குழுக்களின் வழி பல
புதிய கலைஞர்களும் தோன்றலாயினர். குழுக்களில் பேணப்பட்ட
ஒழுக்கம், கட்டுப்பாடு மற்றும் பிற பயிற்சிகள் நல்ல நடிகர்களை
உருவாக்கத் தொடங்கின.
5.4.1 நடிப்புப் பயிற்சி

இக்காலக் கட்டத்தில் நாடகக் குழுக்கள் நடிகர்களுக்கான
நடிப்புப் பயிற்சிக்கு மிக்க முக்கியத்துவம் அளித்தன. சங்கரதாசு
சுவாமிகள்     மற்றும்     எம். கந்தசாமி     முதலியார்.
தெ.பொ. கிருட்டினசாமிப் பாவலர் ஆகியோர் சிறந்த
நடிப்புப்பயிற்றுவிப்பாளராகத் திகழ்ந்தார்கள்.     இவர்களில்
கந்தசாமி முதலியார்     பல     நாடகக் குழுக்களில்
பயிற்றுவிப்பாளராகப் பணியாற்றியுள்ளார்.

  • சங்கரதாசு சுவாமிகள்


  • சங்கரதாசு சுவாமிகள் மிகச் சிறந்த நாடக ஆசிரியராகவும்
    நடிகராகவும், பயிற்றுவிப்பாளராகவும் விளங்கினார். எமதருமன்,
    இரணியன், கடோற்கசன் முதலிய வேடங்களுக்கு அவர்
    பயிற்சியளிப்பார். நாடகப் பயிற்சிக்கேற்ற நாடகங்களையும்
    சுவாமிகள் ஆக்கியளித்தார்.

  • தெ.பொ. கிருட்டினசாமிப் பாவலர்

  • தெ.பொ. கிருட்டினசாமிப் பாவலர் சிறுவர்களுக்கு
    அவர்களின் மனநிலையறிந்து பயிற்சியளிப்பதில்
    தேர்ந்து விளங்கினார். நடிப்புத் திறன் மிக்க
    சிறுவர்களை தேர்ந்து எடுத்துப் பயிற்சி அளித்து
    வந்தார். பாவலர் நாடக சபையில் 10 - வயது
    டி.கே.சண்முகம்     மனோகரன்     வேடத்தில்
    மிகவும் சிறப்படையப் பாவலரின் நடிப்புப் பயிற்சியே முக்கிய
    காரணம் எனலாம்.

  • இசையும் இலக்கியமும்


  • குழுக்களில் நடிப்புப் பயிற்சியோடு இசைப் பயிற்சி மற்றும்
    இலக்கியப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. நடிகர்கள் தங்கள்
    புலமையை விருத்தி செய்ய இதன் வழி வகைசெய்யப்பட்டது.
    தங்களது நடிப்புப் பயிற்சியினைச் சிறப்பாக மேற்கொள்ள
    இப்பயிற்சி பயன்பட்டது.

    இலக்கியங்கள் மற்றும் நாவல்கள் ஆகியவற்றை நாடகமாக்கி
    வழங்கும் நிலை அப்போது இருந்து வந்தது. கந்தசாமி முதலியார்
    இவ்வகை நாடகமாக்குதலில் மிகவும் சிறந்து விளங்கினார்.

  • மேடை அச்சமும் பயிற்சியும்


  • நடிகர்களுக்கு மேடை அச்சம் (Stage Fear) ஏற்படாதிருக்க
    வேண்டி, சிறிய வேடங்களுக்கான நடிப்புப் பயிற்சி முதலில்
    அளிக்கப்பட்டது. பின்பு     முக்கியமான வேடங்களுக்கான
    பயிற்சியளிக்கப் பெற்றது. படிப்படியாக அரசவையில் தடி
    பிடிப்பவன், தோழன், மந்திரி, மன்னன் எனப் பாத்திரங்கள் ஏறு
    முகமாக மாற்றம் செய்யப் பெறும் நிலை மேற்கொள்ளப் பெற்றது.
    இவ்வகை மாற்றம் செய்வதன் மூலம் மேடைக் கூச்சம் இல்லாமல்
    செய்யப்பட்டது.

  • குரல் பயிற்சி


  • இவ்வாறு நடிப்புப் பயிற்சி மேற்கொள்ளப் பெறும் நிலையில்
    குரல் பயிற்சியும் கூடவே மேற்கொள்ளப் பெற்றது. ‘நல்ல
    நடிகனுக்கு வளமான நல்ல குரல் தேவை’ என்பது
    உணரப்பட்டிருந்தது. இதற்காகத் தனிப் பயிச்சி மேற்கொள்ளப்
    பெற்றது. குரல் பயிற்சிக்காக அதிகாலையில் எழுந்து பாடி,
    சாதகம் செய்வார்கள். ஆண் வேடம் ஏற்பவர்கள் கம்பீரமான
    குரலுடனும், பெண் வேடம் ஏற்பவர்கள் இனிமையான குரலுடனும்
    பேசச் செய்யும் பயிற்சி மேற்கொள்ளப் பெற்றது.

  • உரையாடல் பயிற்சி


  • குரல் பயிற்சியினைத்     தொடர்ந்து உரையாடல்களை
    உச்சரிப்பதற்கான பயிற்சியும் அளிக்கப் பெற்றது. ஆங்கில
    உரையாடல்களைக் கூடத் தேர்ந்த முறையில் பேசச் செய்யும்
    பயிற்சி மேற்கொள்ளப் பெற்றது. குரலின் ஏற்ற இறக்கங்கள்,
    வன்மை மென்மை இவை குறிப்பாகப் பேணப்பட்டன.
    5.4.2 நடிப்புச் சீர்த்திருத்தம்

    தொழில் முறை நாடகக் குழுக்களும், பயின் முறை நாடகக்
    குழுக்களும் நடிப்புச் சீர்திருத்தம் செய்வதில் முனைந்து
    செயல்பட்டன. தொழில் முறை நாடகக் குழுக்கள் பால பாடம்
    என்னும் பயிற்சி முறையை அறிமுகம் செய்தன. அடிப்படைப்
    பயிற்சிக்கான நாடகப் பாடமே பால பாடம் எனப்பட்டது.

    நாடக மேடையேறும் போது இப்பயிற்சி மிக்க பயனுள்ளதாக
    அமைந்தது.

    மேடையில் நடிக்க வேண்டிய பயிற்சி முறைகளை அனைத்து
    நாடகக் குழுக்களும் பேணி வந்தன. தொழில்முறை நாடகக்
    குழுக்களில் நடிகர்கள் அனைவரும் ஓரிடத்தில் வாழ்ந்ததால்
    இவர்களைக் கட்டுப்படுத்த, சட்டாம் பிள்ளை என ஒருவர்
    அமர்த்தப்பட்டிருந்தார். நாடகத்தை உருவாக்குமிடமே ஒத்திகை
    என்பது உணரப்பட்டது.

    பயின்முறை நாடகக் குழுக்களும் ஓய்வு நேரங்களை நாடக
    ஒத்திகைக்கென ஒதுக்கிக் கொண்டன. மேனாட்டு நாடக முறையை
    ஒட்டிய சில நடிப்புக் கொள்கைகளையும் உருவாக்கிக்
    கொண்டனர். இவ்வகையில்     நடிப்புச் சீர்த்திருத்தம்
    பேணப்பட்டது.
    5.4.3 கலைஞர்கள்

    பிற்காலத்தில் திரைப்படத் துறையில் மிகுந்த செல்வாக்குப்
    பெற்ற நடிகர்கள் உருவாவதற்கு இந்நாடகக் குழுக்கள்
    பெருந்துணை செய்தன.

  • முன்னோடிகள்


  • இக்கால கட்டத்தில் உருவாக்கம் பெற்ற சிறந்த நாடகக்
    கலைஞர்களாகப் பலரைக்     குறிப்பிடலாம். அவர்களில்
    முக்கியமானவர்களாக     தி.க. சண்முகம்,     தி.க. பகவதி,
    என்.எஸ். கிருட்டிணன், எம்.கே.இராதா, எஸ்.வி. சகஸ்ரநாமம்,
    டி.என். சிவதாணு,         எஸ்.எஸ். இராசேந்திரன்,
    எம்.ஜி. இராமச்சந்திரன்,     சிவாஜி கணேசன்,     நவாப் ராஜ
    மாணிக்கம்,     பி.எஸ். கோவிந்தன்,     எம்.எஸ். திரௌபதி,
    டி.வி. நாராயணசாமி,     ஏ.பி. நாகராசன்     போன்றோரைக்
    கொள்ளலாம். மேலும் பல சிறந்த நடிகர்கள் தொழில் முறை
    நாடகக் குழுக்களில் உருவானவர்கள்.

  • பெருமைகள்


  • நாடகக் கலைஞர்கள் பெற்ற நற்பெயரும், அவர்கள்
    மேற்கொண்ட மேடைத்தவமும், மேடை ஒழுக்கமும் தமிழ்
    நாடகக் கலைக்குப் பெருமை சேர்த்தது. அப்பெருமையால்
    நாடகக் கலைஞர்களும் சமுதாயத்தில் நன்மதிப்பைப் பெறத்
    தொடங்கினர். சமுதாயத்தின் உயர்நிலையில் அவர்கள்
    போற்றப்பட்டனர். இப்பெருமைக்கும் பெருமை சேர்ப்பதாய்
    அவர்கள் படைத்தளித்த நாடகக் கதைகளும் சிறப்பு மிக்கதாக
    அமைந்திருந்தன.