2.1 சைவத்திருமுறைகள்
E


 

சைவ சமயம் குறித்து அருளாளர்கள் பலர்
வெவ்வேறு இடங்களில் சென்று இறைவனைப்
பாடிய     அரும்பாடல்கள்     ஆங்காங்கே
பாதுகாத்து வைக்கப்பட்டிருந்தன. ஒரு காலத்தில்
இவற்றை எல்லாம் திரட்டி அருளாளர் சிலர்
வகுத்து வைத்தனர். அவ்வாறான பல சைவசமய
நூல்களின் தொகுப்பினையே சைவத்திருமுறைகள்
என்று பெயரிட்டு வழங்கினர். இவை சமயம்
சார்ந்த பாடல்கள் அழிந்துவிடாமல் காக்கும்
ஒருவகையான பாதுகாவல் ஆயின.

திருமுறைக் கோயில்


 

2.1.1 திருமுறை - தொடர்விளக்கம்

திருமுறைத் தொகுப்பில் இடம் பெற்றுள்ள தனிப்பாடல்களுக்கும்
சிறுநூல்களுக்கும் தனித்தனியே பெயர்கள் அமைந்துள்ளன.
ஆயினும் இவை அனைத்தையும் உள்ளடக்கி நிற்கும் ஒரு
பொதுக் குறியீடாகத் திருமுறை என்ற சொல் வழங்கப்பட்டு
வருகிறது. திருமுறை என்ற சொற்றொடரைத் திரு + முறை என்று
பகுக்கலாம். முன்னே அமைந்துள்ள 'திரு' என்ற சொல்லுக்குத்
தெய்வத்தன்மை என்பது பொருள். 'முறை' என்ற சொல்லுக்குப்
பல பொருள்களை நிகண்டுகளும், தமிழ் அகராதிகளும்
கூறுகின்றன. முறை என்ற சொல்லுக்கு நூல் என்று ஒரு பொருள்.
கந்தபுராணம் பாடிய கச்சியப்ப சிவாசாரியார் என்பவர் தம்
நூலுள் அவையடக்கம் கூறும்போது,
 

  இறைநிலம் எழுதுமுன் இளைய பாலகன் முறைவரை வேன்என முயல்வது ஒக்குமால்
 
(கந்தபுராணம் - அவையடக்கம்)

இதன் பொருள் : கல்வி கற்கத் தொடங்கும் இளைய குழந்தை
ஒருவன், தரையில் எழுதிப் பழகுவதற்கு முன்னரே, நான் ஒரு
நூல் எழுதப் போகிறேன் என்று கூறுவதை ஒத்தது என்று
பாடியுள்ளார். இத்தொடர்களுள் முறை என்பது நூல் என்ற
பொருள் தருதலைக் காணலாம். எனவே, திருமுறை என்ற
சொல் தெய்வநூல் அல்லது தெய்வத்தன்மை உடைய நூல்
என்று பொருள் தரும். முறை என்பதற்கு, ஒழுங்கு, வரிசை,
உறவு, முறையீடு என்ற வேறு பொருள்களும் உள்ளன.

2.1.2 திருமுறை கண்டமை
 

தஞ்சாவூரைத் தலைநகராகக் கொண்டு ஆண்டிருந்த
பிற்காலச் சோழர்களில் ஒருவன் அபயகுலசேகரன்
என்பான். இவன் முயற்சியால், நம்பியாண்டார் நம்பிகள்
என்ற சிவ வேதியர் திருமுறைகளைத் தொகுத்து
அளித்தார்     என்று     கூறப்படுகிறது. தில்லைத்
திருக்கோயிலில் திருமுறை ஏட்டுச் சுவடிகள் இருந்தன.
அவற்றுள் கரையானால் அழிக்கப்பட்ட ஏடுகள் போக
மீதமுள்ள ஏடுகளே தொகுத்து வைக்கப்பட்டன.


 

ஒன்று முதல் பதினொன்று வரையிலான திருமுறைகளை நம்பி
தொகுத்தார் என்றும், அவர் காலத்துக்குப்பின் சேக்கிழாரின்
பெரியபுராணம் பன்னிரண்டாம் திருமுறையாக இணைத்துக்
கொள்ளப்பட்டது என்றும் தெரிகிறது. இவற்றுக்குத் திருநீலகண்ட
யாழ்ப்பாணர் மரபில் வந்த பெண் ஒருத்தி பண்முறை கண்டு
இசை அமைத்தார். சோழர்கள், திருமுறைகள் அழியாது இருக்க
அவற்றைச் செப்புப் பட்டயங்களில் பொறித்துப் பாதுகாத்தனர்
என்று தெரிகிறது. முன் குறித்தவாறு திருமுறைகளின் காலம்
கி.பி. ஏழாம் நூற்றாண்டிற்கும் பன்னிரண்டாம் நூற்றாண்டிற்கும்
இடைப்பட்ட காலமாகும். திருமுருகாற்றுப்படை கடைச்சங்க
காலத்தது. காரைக்கால் அம்மையார் தேவார ஆசிரியர்களுக்கு
முற்பட்டவர். மாணிக்கவாசகர், திருமூலர் ஆகியோர் காலம்
குறித்துச் சர்ச்சைகள் உள்ளன.


2.1.3 திருமுறைகளின் பெருமை

 

திருமுறைகளுக்குப் பெருஞ்சிறப்பு உண்டு. சைவர்கள் இவற்றை
இறைவன் நூல் என்றும், தமிழ்வேதம் என்றும் கருதிப் போற்றி
வருகின்றனர். வேதம் மற்றும் சைவ ஆகமங்களின் சாரமாகவே
திருமுறைகள்     அமைந்துள்ளன.     இவை     சிவனின்
அடையாளங்கள்,     ஆற்றல்கள்,     அருள் செயல்கள்
முதலியவற்றை விளக்கி நிற்கின்றன. சைவ சித்தாந்த
சாத்திரங்கள் தோன்றுவதற்கு அடிப்படையான இறை, உயிர்,
தளை (பதி, பசு, பாசம்) இவற்றின் இயல்புகள் திருமுறைகளுள்
விரித்துரைக்கப்பட்டுள்ளன.     சில பதிகங்கள் அற்புத
நிகழ்வுகளோடு இணைந்தவை. (பதிகம் என்பது பத்துப்
பாடல்களைக் கொண்டது) அவற்றைப் பக்தியோடு ஓதினால்
உரிய     நன்மையை அவை தரும் என்ற நம்பிக்கை
சைவர்களிடையே நிலவி வருகிறது. தமிழ்நாட்டின் 500
ஆண்டுக்காலச் சமய-சமூக வரலாற்றை அறியத் திருமுறைகள்
துணையாகின்றன. தமிழ், இசை, கலை, பெண்மை ஆகியவை
உயர்ச்சி பெறத் திருமுறைகள் பெரும்பங்கு ஆற்றியுள்ளன.
சிவன் சந்நிதிகளில் பூசைக்காலங்களில் திருமுறை ஓதி வழிபடும்
வழக்கம் நிலவுகிறது. சிவன் சந்நிதியில் நின்று திருமுறை
பாடுவோரை ஓதுவார் என்று கூறுவர். கல்வெட்டுகள்
இவர்களைப் ‘பிடாரர்கள்’ என்று குறிக்கிறது.


2.1.4 திருமுறை ஓதப்படும் முறைகள்

 

திருமுறைகளை ஓதுவதில் சில நெறிமுறைகளைச் சைவம்
வகுத்துள்ளது. சிவ தீட்சை பெற்றவர்களே, நீராடித் தூய
ஆடை உடுத்து, வெண்ணீறு அணிந்து, உரிய பண்
அடைவோடு இறைவன் முன்பு திருமுறை ஓதுதல் வேண்டும்.
ஒவ்வொரு காலப் பூசையிலும் திருமுறை ஓதப்பட வேண்டும்.
அந்தத் தலத்துக்கு (தலம் - இடம்) உரிய பாடல்களைப்
பாடுவது சிறப்பு. திருமுறை விண்ணப்பிக்கத் தொடங்கும்
முன்பும், நிறைவு செய்த பின்பும் ‘திருச்சிற்றம்பலம்’ என
உச்சரித்தல் வேண்டும். தேவாரமாயின் பதிகம் முழுவதையும்
பாடவேண்டும். காலம் கருதி இயலாத போது பதிகத்தின்
முதற்பாடலையும், நிறைவுப் பாடலையும் பாடலாம். ஒவ்வோர்
திருமுறையிலிருந்தும் குறைந்தது ஒரு பாடலையாவது பாடுதல்
நலம். இயலாத நிலையில் ஒரு தேவாரப் பாடல், ஒரு
திருவாசகப்பாடல், ஒன்பதாம் திருமுறை திருவிசைப்பாவிலிருந்து
ஒருபாடல், திருப்பல்லாண்டில் ஒன்று, பெரியபுராணப் பாடல்
ஒன்று என்று ஐந்து பாடல்களைப் பாடும் மரபு உண்டு.
இதற்குப் பஞ்சபுராணம் பாடுதல் என்று பெயர். சிவன் திருவீதி
உலா வருகையில் திருமுறைகள் முன்னாகவும், வேதங்கள்
பின்னாகவும் ஓதப்படும் மரபு நிலவி வருகிறது. சிவ பூசையின்
நிறைவில் முதல் மரியாதை ஓதுவார்களுக்கே வழங்கப்பட்டு
வருதல் திருமுறைகளின் பெருமைக்குச் சான்றாக உள்ளது.
 


 

பட்டியல் 1
பஞ்சபுராணங்கள்

பஞ்சபுராணம்
பாடுதல்

 

தேவாரம்
திருவாசகம் திருவிசைப்பா திருப்பல்லாண்டு பெரியபுராணம்





 

இவற்றுள் ஒவ்வொரு
பாடலை முறை
தவறாது பாடுவது.