3.1 தேவாரத் திருவாசகங்கள¢
E


 

பன்னிரு திருமுறைகளுள் முதல் எட்டுத் திருமுறைகளைத்
தேவாரத் திருவாசகங்கள் என்று கூறுவது சைவ மரபு. முதல்
ஏழு திருமுறைகளைப் பாடியவர் மூவர். காலவரிசைப்படி
திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள்
திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி சுவாமிகள்
என அவர்களைக் குறிப்பர். இவர்களைத்
‘தேவார மூவர்’ என்றும், ‘மூவர்’ என்றும்,
‘மூவர் முதலிகள்’ என்றும் குறித்தல் வழக்கு
(முதலிகள் -முதன்மையானவர்).

மூவர்


 

இவர்கள் பாடிய பாடல்களின் தொகுப்பை மூவர் தேவாரம்
எனப்போற்றுவர்.     முதல்     மூன்று     திருமுறைகளைத்
திருஞானசம்பந்தரும், அடுத்த மூன்று திருமுறைகளைத்
திருநாவுக்கரசரும், ஏழாம் திருமுறையைச் சுந்தரமூர்த்தி
சுவாமிகளும் பாடி அருளியுள்ளனர். எட்டாம் திருமுறை
திருவாசகம். இதன் ஆசிரியர் மாணிக்கவாசகர். இவர் பாடிய
திருச்சிற்றம்பலக் கோவையார் என்ற அகப் பொருள் நூலையும்
எட்டாம் திருமுறையில் இணைத்துள்ளனர். தேவாரத் திருவாசக
ஆசிரியர்களை ’நால்வர்’ என்றும், ‘நால்வர் பெருமக்கள்’
என்றும் ‘சமயக்குரவர்’ என்றும் சைவச் சமயத்தினர்
குறிப்பிடுவர்.

3.1.1 தேவாரம் தொகுக்கப்பட்டமை
 

தேவாரத் திருமுறைகளைத் தொகுத்து முறைப்படுத்தியவர்
நம்பியாண்டார் நம்பிகள் என்பவர். இவர் தில்லையை
 
(சிதம்பரம்) அடுத்த     திருநாரையூரில்
வாழ்ந்தவர். தேவார ஆசிரியர்கள் சைவத்
தலங்களுக்கெல்லாம் சென்று பாடிய இசைப்
பாடல்கள் வெவ்வேறு இடங்களில் தொகுத்து
வைக்கப்பட்டிருந்தன.

திருநாரையூர்

அபய குலசேகரன் என்ற சோழ மன்னனின் வேண்டுகோளை
ஏற்று, விநாயகர் வழி காட்ட, தில்லையில் இருந்த தேவார
ஏடுகளைக் கண்டெடுத்து நம்பியாண்டார் நம்பிகள் முதல்
ஏழுதிருமுறைகளைத் தொகுத்து வழங்கினார். திரு எருக்கத்தம்
புலியூரில் வாழ்ந்து வந்த, திருநீல கண்ட யாழ்ப்பாணர் மரபில்
வந்த, இறையருள் பெற்ற பெண் ஒருத்தி தேவாரப்
பாடல்களுக்குப் பண்களை வகுத்து வழங்கினார். தேவாரப்
பண்களின் பெயர்களையும், அவற்றின் உட்பட்ட சந்த
வேறுபாடுகள் குறித்த கட்டளைகளையும், உமாபதி சிவசாரியார்
இயற்றிய திருமுறைகண்ட புராணம் விரித்து உரைக்கிறது.

 
3.1.2 தேவாரம் - பண்முறை - தலமுறை

பத்துப்பாடல்கள் கொண்ட தொகுப்பைப் ‘பதிகம்’ என்று கூறுவர்.
இது முன்னரே விளக்கப்பட்டது. மூவர் தேவாரங்கள் பதிக
அமைப்பை உடையன. திருஞானசம்பந்தர் பதிகங்களில்
பதிகத்தை ஓதுவதால் விளையும் பயன் கூறும் ஒரு பாடலும்
பதிக     இறுதியில்     இடம்     பெற்றுள்ளது. இதனைத்
‘திருக்கடைக்காப்பு’ என்று கூறுவர். மற்றைய இருவர்
பதிகங்களில் சிலவற்றைத் தவிர ஏனைய பதிகங்கள்
பத்துப்பாடல்கள் கொண்டே அமைக்கப்பட்டுள்ளன. தேவார
மூவரும் பல சிவத்தலங்களில் சென்று பாடியிருந்தாலும்,
அவற்றை எல்லாம் தொகுத்துப் பண்களின் அடிப்படையில்
ஒழுங்கு செய்துள்ளனர். இதனைப் ‘பண்முறை’ என்று கூறுவர்.
மூவர் தேவாரங்களைத் தலமுறையிலும் தொகுத்துள்ளனர். ஒரே
தலத்தில் பலரும் பாடிய பாடல்களை ஒழுங்கு அமைத்தலைத்
'தலமுறை' என்றனர். ஏழு திருமுறைகள் என்ற தொகுப்புப்
பண்முறையிலேயே அமைந்தது. அதாவது, ஓர் ஆசிரியர்
வெவ்வேறு தலங்களில் பாடியிருந்தாலும், ஒரே பண்ணில்
அமைந்த பதிகங்கள் தொகுக்கப்பட்டுத் திருமுறைகள் ஒழுங்கு
செய்யப்பட்டுள்ளன.

3.1.3 தேவாரப்பண்கள்

தேவாரத்தில் இடம் பெற்றுள்ள பண்கள் இருபத்து ஒன்று.
இதனைப் ‘பந்தத்தால்’ என்று தொடங்கும் திருக்கழுமலம்
(சீகாழி) பதிகத்தில் திருஞானசம்பந்தர் குறித்துள்ளார்.
பின்வந்தோர் பண்களை இருபத்து நான்கு என்றும் இருபத்து
ஏழு என்றும் பிரித்துக் கூறினர். இவற்றைப் பகற்பண்கள்,
இராப்பண்கள், பொதுப் பண்கள் என மூன்றாகப் பிரிப்பர்.
பகற்பண்கள் பத்து. இராப்பண்கள் எட்டு. பொதுப்பண்கள்
மூன்று. (இவற்றைக் கீழே உள்ள அட்டவணையில் விரிவாகக்
காணலாம்.)
 


 

பகற்பண்கள்-10
இராப்பண்கள்-8
பொதுப்பண்கள்-3
1.
புறநீர்மை
2.
காந்தாரம் -
பியந்தைக் காந்தாரம்
3.
கௌசிகம்
4.
இந்தளம்
(திருக்குறுந்தொகை)
5.
தக்கேசி
6.
நட்டராகம் (சாதாரி)
7.
நட்டபாடை
8.
பழம் பஞ்சுரம்
9.
காந்தார பஞ்சமம்
10.
பஞ்சமம்
1. தக்கராகம்
2.
பழந்தக்கராகம்
3. சீகாமரம்
4.
கொல்லி
கௌவாணம்
திருநேரிசை
திருவிருத்தம்
 
5. வியாழக்குறிஞ்சி
6.
மேகராகக்
குறிஞ்சி
7. குறிஞ்சி
8. அந்தாளிக்
குறிஞ்சி
1. செவ்வழி
2. செந்துருத்தி
3. திருத்தாண்டகம்


 

இவற்றுள் செவ்வழிப்பண் திருஞான சம்பந்தரால் மட்டுமே
பாடப்பட்டுள்ளது. செந்துருத்தியைச் சுந்தரமூர்த்தி சுவாமிகள்
மட்டுமே     பாடியுள்ளார்.     திருநேரிசை, திருவிருத்தம்,
திருக்குறுந்தொகை,     திருத்தாண்டகம்     என்பவை
திருநாவுக்கரசரால் மட்டுமே பாடப்பட்டுள்ளன.