6.5 பிற உரைநடை வகைகள்

    மேற்குறிப்பிட்ட பழங்கதைகள், புனைகதைகள் நீங்கலாகக்
கீழ்க்காணும் பிற உரைநடைகளும் இஸ்லாமிய அறிஞர்களால்
படைக்கப்பட்டுள்ளன.

6.5.1 உரை நூல்கள்

    திருக்குர்ஆன், சீறாப்புராணம் போன்றவற்றிற்குச் சிறந்த
உரைநூல்கள், இசுலாமிய அறிஞர்களால் எழுதப்பட்டன.

¥ சதாவதானி செய்கு தம்பிப் பாவலர்

    நாம் முன்பே பார்த்துள்ள செய்கு தம்பிப் பாவலர் சிறந்த
நாவலாசிரியர், உரையாசிரியர்.

    சீறாப்புராணத்தில் திருவுருவாய் எனத் தொடங்கும்
செய்யுளுக்கு இவர் எழுதிய உரை, இருபதாம் நூற்றாண்டின்
நச்சினார்க்கினியர் என்னும் புகழைத் தந்தது.

¥ கவி. கா. மு ஷெரீப்

    சீறாப்புராணத்தின் ஒவ்வொரு காண்டத்திற்கும் தனித்தனியே
சிறந்த உரை எழுதியவர் கவி. கா. மு. ஷெரீப்

¥ பா. தாவூத்ஷா

    பா. தாவூத்ஷா திருச்சியைச் சேர்ந்தவர். இஸ்லாமிய
மறுமலர்ச்சி உரைநடையின் தந்தை எனப் போற்றப்படுபவர்.
தாருல் இஸ்லாம் என்ற இதழ் மூலம் இவர் தமி்ழ் - இஸ்லாமியத்
தொண்டு ஆற்றியது மறத்தற் கரியது. திருக்குர் ஆன்
விளக்கவுரை முதல் ஆயிரத்தோர் இரவுகள் வரை இவர் எல்லாத்
துறையிலும் தமிழ்த் தொண்டாற்றியுள்ளார். நபிகள் நாயகம்
வரலாற்றை ‘நபிகள் நாயக மான்மியம்’ எனவும் முகம்மது நபி
(ஸல்) எனவும் இரு நூல்களாகப் படைத்துள்ளார்.

¥ எம். ஆர். எம். அப்துற்றஹீம்

    இவர் இஸ்லாம் சமயம் பற்றி மட்டுமல்லாது பொதுவகையில்
வாழ்க்கை முன்னேற்ற நூல்கள் ஐம்பதிற்கு மேல் படைத்தவர்;
தமிழக வாசகர்கள் மனங்களில் சிறப்பிடம் பெற்றவர். முகவை
மாவட்டத்தில் உள்ள தொண்டி என்னும் ஊரினர்.

    வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பதற்கு வழிகாட்டக் கூடிய
வகையில் முதன்முதலில் வாழ்க்கையில் வெற்றி என்னும் நூல்
படைத்தார். அதனைத் தொடர்ந்து, முன்னேறுவது எப்படி,
கவலைப்படாதே, வாழ்வைத் துவங்கு, சுபிட்சமாய் வாழ்க,
வாழ்வது ஒரு கலை
போன்ற பல நூல்கள் வெளியிட்டார்.

    நபிகள் பெருமானாரின் வாழ்க்கை வரலாற்றை நபிகள்
நாயகம்
என நல்ல தமிழ் நடையில் நூலாக எழுதினார். வலிமார்
வரலாறு, அல்ஹதீஸ் பொன்மொழிப் பேழை, முஸ்லிம்
தமிழ்ப் புலவர்கள், இஸ்லாமியக் கலைக் களஞ்சியம்
(மூன்று
தொகுதிகள்) ஆகியனவும் இவர் படைப்புகளாகும்.

¥ பிற உரையாசிரியர்கள்

    இஸ்லாமிய வேத நூலான அல்குர்ஆன் மற்றும் நபிகள்
பெருமானார் நவின்ற நல்லுரைகளான அல்ஹதீஸ் ஆகியவற்றை
மொழி பெயர்த்து உரைவகுக்கும் பணியும் இக்காலத்தில்
மேற்கொள்ளப்பட்டது.

    1908ஆம் ஆண்டு கா.மி. அப்துல் காதர்ராவுத்தர்
முதன்முதலில் அல்குர் ஆன் விளக்கவுரை வெளியிட்டார்.
அதனைத் தொடர்ந்து ஆ.கா அப்துல் ஹமீது பாக்கவி 1929இல்
தர்ஜுமதுல்குர்ஆன் எனவும் எஸ்.எஸ். அப்துல்காதர் பாக்கவி,
திருமறைத் தமிழுரை எனவும், ஈ.எம். அப்துல் ரஹ்மான்,
அன்வாருல் குர்ஆன் (ஏழு பாகங்கள்) எனவும், பா.தாவூத்ஷா
குர்ஆன் மஜீத் பொருளுரை விளக்கவுரை
எனவும்,
பி.எஸ்.கே. முகம்மது இப்ராஹிம், தர்ஜுமதுல் குர்ஆன் எனவும்
திருக்குரான் மொழி பெயர்ப்பு, விளக்கவுரைகளை எழுதி
வெளியிட்டனர்.

    பி.எஸ்.கே. முகம்மது இப்ராஹிம் திர்மிதி எனும் நூலை
வெளியிட்டார். பா. தாவுத்ஷா, எம்.ஆர்.எம். அப்துற்றஹீம்,
ஆர்.பி.எம். கனி, செய்யிது இப்ராஹீம் முதலான பலரும் நபிகள்
பெருமான் நல்லுரைகளைத் தமிழில் வழங்கினார்.

6.5.2 மொழி பெயர்ப்பு நூல்கள்

    பிற மொழிகளிலிருந்து, சிறப்புப் பெற்ற பல நூல்களை
இக்கால இசுலாமிய எழுத்தாளர்கள் மொழி பெயர்த்து
எழுதியுள்ளனர்.

¥ திருச்சி சையித் இப்ராஹிம்

    திருச்சியில் 1898இல் பிறந்தவர் சையித் இப்ராஹிம் ஆவார்.
கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றியவர். எழுபத்தைந்திற்கும்
மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார். அபுல்கலாம் ஆஸாத்
எழுதிய ஜுனைத் பக்தாதி என்னும் நூலைத் தியாகம் என
மொழி பெயர்த்தளித்தார்.

¥ மணவை முஸ்தபா

    இன்றைய நிலையில் பல்துறை அறிஞராகத் திகழ்பவர்
மணவை முஸ்தபா, மொழி பெயர்ப்புத்துறைக்கு இவர் ஆற்றிய
தொண்டு மிகவும் சிறப்பானது.

யுனெஸ்கோ வெளியீடான கூரியர் இதழ், தமிழாக்கம் பெற்று
வெளி வருவது இவரது மொழி பெயர்ப்புப் பணிக்கு ஒரு சிறந்த
எடுத்துக்காட்டு.

    ஆங்கில மொழியில் மைக்கேல் ஹெச் ஹார்ட் எழுதிய
The Hundred எனும் நூலை நூறுபேர் என மொழி பெயர்த்து
வெளியிட்டுள்ளார் இது ஒரு சிறந்த மொழி பெயர்ப்பு நூலாகப்
போற்றப்படுகிறது.

¥ எஸ். எம். அப்துல் காதர் பாக்கவி

    எஸ்.எஸ். அப்துல் காதர் பாக்கவி நபிகள் பெருமானார்
நவின்ற நல்லுரைகளை (ஹதீஸ்கள்) ஸஹீஹுல் புகாரி என
மூன்று தொகுதிகளாக வெளியிட்டார்.

6.5.3 பிற உரைநடை நூல்கள்

    மேற்குறிப்பிட்ட நூல்களைத்      தவிர, மிகச்சிறந்த
உரைநடைகள் பலவற்றை      இஸ்லாமிய அறிஞர்கள் வெளியிட்டனர்.

¥ நீதிபதி மு.மு. இஸ்மாயில்

    இவர் 1921ஆம் ஆண்டு பிறந்தவர். சென்னை
உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாகப் பணியாற்றினார்.
பேச்சாளர்; பன்னூலாசிரியர் ஆவார். அல்லாஹ்வின் அழகிய
திருநாமங்கள், இலக்கிய மலர்கள், இனிக்கும் இராஜநாயகம்,
நயத்தக்க நாகரிகம், மும்மடங்கு பொலிந்தான், தாயினும்,
உந்தும் உவகை
முதலான இருபதுக்கும் மேற்பட்ட
நூல்களை எழுதியுள்ளார். கம்ப இராமாயணத்தின் பெருமையை
உலகறியச் செய்ததில் இவர் பெரும் பங்கு வகிக்கிறார்.

¥ ம.மு. உவைஸ்

    இலங்கைத் தமிழறிஞராகிய இவர், மதுரை காமராசர்
பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியத் தமிழ் இலக்கியத் துறையின்
தலைவராகப் பணியாற்றியவர்.

இஸ்லாமியத் தமிழ் இலக்கிய ஆய்வில் மிக ஆழம் கண்டவர்
உவைஸ் ஆவார். தமிழ் இலக்கியத்திற்கு முஸ்லிம்களின்
பங்களிப்பு Muslim Contribution to Tamil Literature
என்ற ஆங்கில நூலை வெளியிட்டார். இஸ்லாமியர்களின் கலைப்
பண்பு குறித்த இவருடைய ஆய்வு நூல் கலையும், பண்பும்
ஆகும். இலக்கியத் தென்றல், இஸ்லாம் வளர்த்த தமிழ்,
மருதை முதல் வகுதை வரை முதலான எட்டு நூல்களை
இயற்றியுள்ளார்.

    மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் இவர் ஆற்றியுள்ள
தொண்டு சிறப்பானது. அறபு - தமிழ் சொல்லகராதி,
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய நூல் விவரக் கோவை,
இஸ்லாமியத் தமிழ் இலக்கிய வரலாறு
(தொகுதி ஒன்று,
இரண்டு, மூன்று) ஆகியவற்றை வெளியிட்டார்.

    தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மூன்று மொழிகளில்
எழுதும் திறம் பெற்ற இவர். எம்.ஆர்.எம். அப்துற்றஹீம் எழுதிய
நபிகள் நாயகம் என்னும் நூலைச் சிங்கள மொழியில் மொழி
பெயர்த்துள்ளார்.

¥ எம். அப்துல் வஹ்ஹாப்

    செங்கோட்டையில் 1920இல் பிறந்த இவர், முதுபெரும்
எழுத்தாளர். பிறை மாத இதழைப் பல்லாண்டுக் காலம் நடத்தி
வந்தார். தித்திக்கும் திருமறை, நான்மணி நால்வர்,
சுவர்க்கத்துக் கவிஞர், மாநபி மகளார்
முதலான நூல்களைப்
படைத்துள்ளார். குர்ஆன் தர்ஜுமா என அல்குர் ஆன்
பொருளுரையும் வெளியிட்டுள்ளார்.

¥ ஆர். பி. எம். கனி

    நெல்லை மாவட்டத்திலுள்ள ரவண சமுத்திரம் என்னும்
ஊரைச் சேர்ந்தவர். 1920இல் பிறந்தவர்.

    1940ஆம் ஆண்டு ஜனாப் ஜின்னா என்ற நூலை
வெளியிட்டுத் தமிழிலக்கிய உலகில் அறிமுகமானார். 1945-இல்
இவருடைய அல்லாமாஇக்பால் வெளிவந்தது. 1947 முதல்
சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த மலேயா நண்பன், தினசரி, வாரப்
பதிப்புகளின் ஆசிரியராக இருந்தார். பின்னர்ச் சென்னையில்
வெளியான முஸ்லிம் தினசரி இதழாசிரியரானார்.

இவருடைய இஸ்லாமியக் கருவூலம் மிகச் சிறந்த நூலாகும்.
இக்பால் கவியமுதம், முஸ்லிம் பெண்கள், பேரின்ப
ரசவாதம், பிழையிலிருந்து விடுதலை, மெய்ஞ்ஞானப்
பேரமுதம், பாரசீகப் பெருங்கவிஞர்கள்
போன்ற இருபது
நூல்களைப் படைத்துள்ளார்.