|
இப்பாடப் பகுதியில் நாட்டுப்புறவியல், கோட்பாடுகள்
என்ற இரு பகுதிகள் உள்ளன. இதில் நாட்டுப்புறவியல் குறித்த
விளக்கங்களை முந்தைய ஐந்து பகுதிகளும் விளக்கியுள்ளன.
எனவே கோட்பாடு என்ற சொல்லாட்சி விளக்கத்தோடு,
நாட்டுப்புறவியலில் இக்கோட்பாடு எங்ஙனம் பொருந்தியுள்ளது
என்பதையும் எடுத்துரைப்பது இப்பாடப் பகுதியாகும்.
கோட்பாடு என்பதை ஒரு கருத்தாக்கம் (ideology) என்பர்
அறிஞர்கள். கொள்கையின் தன்மையினைக் கொண்டதே
கோட்பாடு.
சொல்லாட்சி
‘கற்பு’ என்பது ஒரு கோட்பாடு. நடைமுறை வாழ்வில் நாம்
ஏற்றுக் கொண்டுள்ள கோட்பாடு. இதன் வாழ்வியல் நெறிமுறை
(Standard of life) என்னவென்றால்.
‘ஒருவனுக்கு ஒருத்தி’
என்பதாகும். எனவே ஓர் ஆணும், ஒரு பெண்ணும் மட்டுமே,
சமுதாய நிகழ்வாகிய திருமணச் சடங்கின் மூலம் இணைந்து
வாழும் வாழ்க்கையே கற்புக் கோட்பாட்டினைக் கொண்டது
என்று கூறப்படுகிறது. இவ்வாறு ஒவ்வொரு கொள்கையின்
சிந்தனைத் தெளிவினாலும் - ஏற்றுக் கொள்ளல்
என்பதாலும் - சமுதாய நிலைப் பாட்டினாலும் கோட்பாடுகள்
உருவாகின்றன.
|