1.1 நாட்டுப்புறவியல் மரபுகள்    மனித சமூகம் எதைக் கற்றதோ, எத்தகைய செயல்களை
மேற்கொண்டதோ, எதில் பயிற்சி பெற்றதோ அந்த அனுபவங்களை
எல்லாம் பதிவு செய்து வைத்திருக்கும் ஆவணக் காப்பகம்
நாட்டுப்புறவியல் (Folklore) என்னும் கல்விப் புலம் ஆகும்.
இந்நாட்டுப்புறவியல் வாய்மொழி மரபு. நிகழ்த்துதல் மரபு, சடங்கியல்
மரபு, தொழில்சார் மரபு, பொருள்சார் மரபு என்னும் பல கூறுகளாக
நாட்டுப்புற மக்களின் பண்பாட்டில் நிலைகொண்டு உள்ளது. தமிழர்
பண்பாடு என்பது தமிழ் இலக்கியங்கள் எடுத்துரைக்கும் பண்பாடு
மட்டுமன்று: நாட்டுப்புறவியல் மரபுகளோடு இணைந்த ஒன்றே ஆகும்.
நாட்டுப்புறவியல் மரபுகளைக் கணக்கில் எடுக்காமல் தமிழர்
பண்பாட்டைக் கட்டமைக்கவோ, புரிந்து கொள்ளவோ இயலாது
என்பது பண்பாட்டு ஆய்வாளர்களின் கருத்தாகும்.

தமிழில்     எழுத்திலக்கிய மரபில் கவனம் செலுத்தப் பட்ட அளவிற்கு
நாட்டுப்புறப் பண்பாட்டு மரபில் கவனம் செலுத்தப் படவில்லை
என்பதே உண்மை. நாட்டுப்புறவியல் மரபுகள் வாழும் மரபுகளாகும்;
நாட்டுப்புற மக்களால் வளர்த்து எடுக்கப்படும் மரபுகளாகும். இவை
அறிவு நிலைக்கு அப்பாற் பட்டு உணர்வு நிலையில் வடிவமைக்கப்
பெற்றவை. இம்மரபுகள் எழுதப்படாத சட்டங்களாக நின்று நிலைத்து
நாட்டுப்புற மக்களை வழி நடத்தி வருகின்றன.

1.1.1 மரபு - விளக்கம்


     நாட்டுப்புறவியல் மரபுகளைப் பற்றி அறிவதற்கு முன் மரபு என்றால்
என்ன என்பதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். இது
நாட்டுப்புறவியல் மரபுகளைப் புரிந்து கொள்வதற்குத் துணை புரியும்.


     மரபு என்பதை,

எப்பொருள் எச்சொல்லின் எவ்வாறு உயர்ந்தோர்
செப்பினர் அப்படிச் செப்புதல் மரபே


(நூற்பா எண் : 387)    

என்கிறது நன்னூல். ‘அறிவுடையோர் எந்தப் பொருளை எந்தச்
சொல்லால் எந்த முறைப்படி குறிப்பிட்டார்களோ அதே முறைப்படி
வழங்குதல் மரபாகும்’ என்பதே இதன் பொருள். சொல்லையும்
பொருளையும் மட்டும் அல்லாது அவர்கள் மேற்கொண்ட
செயல்களையும் அவ்வாறே பின்பற்றுவதும் மரபே. ‘பண்பாட்டின்
எல்லா நிலைகளிலும் மக்களால் பின்பற்றப் பட்டு ஏற்றுக்
கொள்ளப்பட்ட நியதியே மரபு’ (Tradition) என்கிறது தமிழ் அகராதி.
ஒரு காலத்தில் செய்யப்படுகின்ற செயல்களில் உண்மையும்
நன்மையும் இருப்பின் அவை பின்வரும் தலைமுறையினரால்
அப்படியே ஏற்றுக் கொள்ளப்பட்டு வழிவழியாகக் கடைப்பிடிக்கப்
படுகின்றன. இவையே பின்னாளில் மரபாக நிலைத்துவிடுகின்றன.
பழைமையைப் பேணுவதும் முன்னோர் வழியைப் பொன்னே
போல் போற்றுவதும் மரபின் முக்கியக் கூறுகள் ஆகும்.
ஊர்தோறும் நாடுதோறும் மக்களினம் வாழும் இடந்தோறும்
இம்மரபுகள் நீக்கமற நிறைந்துள்ளன.


     மரபு என்ற சொல் இன்று மரபியல், மரபினம், மரபுக் கூறு, மரபுக்
கலை, மரபுத் தொடர், மரபு நோய், மரபணு என்று பல்வேறு
துறைகளில் பயன்பட்டு வருவதை நீங்கள் அறியலாம். இதில்
நாட்டுப்புற மரபு என்பது சடங்குகள், நம்பிக்கைகள், வழிபாடுகள்,
பழக்க வழக்கங்கள் ஆகியவற்றால் பாதுகாக்கப்படும் ஒரு குறிப்பிட்ட
மக்களின் பண்பாடாகும்.


    இந்த நாட்டுப்புற மரபுகள் நாட்டுப்புற மக்களால் பாதுகாக்கப் பட்டு
வளர்த்து எடுக்கப்படுபவை. மனிதன் என்று தோன்றினானோ அன்றே
நாட்டுப்புற மரபுகளும் தோற்றம் பெற்றுவிட்டன என்றுதான் கூற
வேண்டும். நீண்ட கால வரலாற்றைக் கொண்ட இந்நாட்டுப்புற
மரபுகள் பரந்து விரிந்தவை. நீண்ட பாரம்பரியம் உள்ளவை.
இம்மரபுகளைப் பற்றிய அறிமுகமாகவே இத்தொகுதியில் உள்ள
பாடங்கள் அமைந்துள்ளன.