2.6 விழாக்கள்


    ‘கோயில் என்றாலே திருவிழா ; திருவிழா என்றாலே கோயில்’
என்ற நினைவு அனைவருக்கும் வரும். விழைவு : விழை என்றால்
விருப்பம் என்று பொருள்படும். விழாக்கள் மகிழ்வை அடிப்படையாகக்
கொண்டு மக்களால் விரும்பி நடத்தப் படுபவையாகும்.


    கொண்டாட்டமும் மகிழ்ச்சியும், பொழுது போக்கும் நல்லுறவுமே
விழாக்களின் நோக்கமாகும்.


    தமிழர்களின் நாகரிகத்தையும் பண்பாட்டையும் விளக்குவனவற்றுள்
திருவிழாக்கள் சிறப்பிடம் பெறுகின்றன. பண்டைக் காலத்திலிருந்தே
விழாக்கள் நிகழ்ந்ததை மடியா விழாவின் யாணர் நன்னாடு என்று
புறநானூறு கூறுகின்றது. மடியா என்பது ஆண்டு தோறும் என்று
பொருள்படும்.


    தை, மாசி, பங்குனி, சித்திரை, வைகாசி, மாதங்களே விழா எடுக்கச்
சிறந்த மாதங்களாகக் கருதிப் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்
படுகின்றன.


    சிறுதெய்வ விழாக்களோடு அன்னக்கொடி விழா, பொங்கல் விழா,
சித்திரைத் திருவிழா, தேர்த் திருவிழா போன்ற சிறப்பு விழாக்களும்
நாட்டுப்புற மக்களால் கொண்டாடப் படுவதுண்டு.

2.6.1 அன்னக்கொடி விழா


    பல்வேறு வகையான தானங்களில் பாமர மக்கள் அறிந்த தானம்
அன்ன தானமாகும். பசிப்பிணி போக்குதலே நாட்டுப்புற மக்கள் அறிந்த
நல்லறமாகும். வளோண்மை செய்வோர் ‘விருந்திருக்க உண்ணாத’
மனித நேயம் கொண்டவர்கள். கிராம மக்கள் தங்கள் வீட்டுக்கு
வருவோரிடம் கேட்கும் முதல் வார்த்தை ‘சாப்புட்டீங்களா? என்பதே
ஆகும். சாப்பிட்டோமென்று அவர்கள் கூறினாலும் ‘இந்தாங்க ஒருவாய்
நீராகாரமாவது சாப்பிடுங்க’ என்று அன்பாய் உபசரிக்கும் தாராள
மனமும்     வெள்ளை     உள்ளமும் கொண்டவர்கள். இதன்
தொடர்ச்சியாகவே அவர்கள் ஆண்டு தோறும் சித்திரைப் பரணியில்
அன்னக்கொடி ஏற்றி அனைவருக்கும் அன்னமிடுதலை ஒரு சமுதாயப்
பணியாக, விழாவாக மேற்கொண்டு வருகின்றனர்.


    அன்ன தானத்தை அன்றாட வாழ்க்கைச் செயல்பாடாகக்
கொண்டுள்ள பாமர மக்கள் மனதில் அன்னக் கொடிகட்டிப்
பரதேசிகளுக்கும் பசித்து வந்தவர்களுக்கும் அன்னமிட்டு மகிழ்ந்த
சிறுத்தொண்டர் (பெரியபுராணம்) நீங்கா இடம் பிடித்துள்ளார் என்றே
கூறவேண்டும்.


    சிறுத்தொண்டரின் அன்னதான விரதத்தைச் சிறப்பிக்கும் வகையில்
அவர் பிறந்த நாளாகக் கருதப்படும் சித்திரை மாதம் பரணி நட்சத்திர
நாளன்று அன்னக்கொடி ஏற்றுதலும் அமுது படையல் விழாவும், திருச்சி,
தஞ்சாவூர், தருமபுரி, சேலம், வடஆர்க்காடு, தென்ஆர்க்காடு மாவட்டக்
கிராமங்களில் வெகுசிறப்பாக நடத்தப்பட்டு வருகின்றன. இந்த
அன்னக்கொடி விழா சோழர் காலந்தொட்டு நடைபெறுவதாகக்
கூறப்படுகிறது.


    சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற பேதமின்றி அனைத்துத்
தரப்பு மக்களும் விழாவிற்குத் தேவையான பொருளுதவி அளித்து
விழாவில் கலந்து கொள்கின்றனர்.


    அன்னதான விழாவில் ‘பிள்ளைக்கறி அமுது’ என்ற பிரசாதம்
வழங்கப்படுகிறது. இதை வாங்கி உண்டால் குழந்தைப் பேறு கிட்டும்
என்று நம்பப்படுகிறது. இது ஒரு சமய நிகழ்வாக அல்லாமல் சமுதாய
நிகழ்வாக, பசிப்பிணி போக்கும் பெருவிழாவாக நிகழ்த்தப் படுகிறது.
இவ்விழா தமிழர்களின் மனித நேயப் பண்பாட்டை உலகிற்கு
உணர்த்தும் திருவிழாவாக விளங்குகிறது.

2.6.2 பொங்கல் திருவிழா


    தமிழர் பண்பாட்டின் அடையாளமாகப் பொங்கல் திருநாள்
விளங்குகிறது. ‘தை பிறந்தால் வழி பிறக்கும் ; வாழ்க்கை செழிக்கும்’,
என்பது தமிழரது நம்பிக்கையாகும். தைத்திருநாள் ஓர் இயற்கைத்
திருநாள். ‘சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம்’ என்ற வள்ளுவரின்
வாக்கினை மெய்ப்பித்து உழவின் சிறப்பை உலகுக்குப் பறைசாற்றும்
வளோண்மைத் திருநாள், போகிப் பண்டிகை, மணப் பொங்கல்,
மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்களும்
ஒரே திருவிழாக் கோலம்தான்.


    ‘பழையன கழிதலும் புதியன புகுதலும்’ என்பதற்கேற்ப வீடுகளைப்
புதுப்பொலிவு பெறச் செய்வது போகிப் பண்டிகையின் நோக்கமாகும்.
சிலப்பதிகாரம் குறிப்பிடும் இந்திர விழாவே போகிப் பண்டிகை
என்றும் கூறப் படுவதுண்டு. வீட்டு முற்றத்தில் கோலமிட்டுப்
பொங்கல் பானையில் புத்தரிசி போட்டுப் பொங்கல் வைத்துப்
‘பொங்கலோ பொங்கல்’ என்று மகிழ்ச்சி ஆரவாரமிட்டு, மஞ்சளும்
செங்கரும்பும் வைத்துப் படையல் இட்டு, இயற்கையை வழிபடுவது
பொங்கல் திருநாளாகும்.


    தன்னோடு தோளோடு தோள்நின்று உழைத்த கால்நடைகளுக்கு
நன்றி செலுத்தும் திருநாளாக மாட்டுப் பொங்கல் அமைகிறது.
எருதுகளைக் குளிப்பாட்டி, பொட்டிட்டு, கொம்புகளுக்கு வண்ணம்
தீட்டி, பொங்கல் ஊட்டி, வீதி உலாவரச் செய்து மகிழும் இனிய
திருநாளாக இது கொண்டாடப் படுகிறது. மாட்டுப் பொங்கலன்று
நடைபெறும் தமிழரின்     வீர விளையாட்டான     சல்லிக்கட்டு
உலகப் பிரசித்தி பெற்றதாகும். (மாடுபிடி விழா)

கொல்லேற்றுக் கோடஞ்சு வானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்.

என்று கலித்தொகை கூறுவதன் வாயிலாக இந்த வீர மரபு தொன்று
தொட்டு இருந்து வருவதை அறியலாம். தமிழ்த் திரைப்படங்களில்
இவ்வீர விளையாட்டை நீங்களும் கண்டு வியந்திருக்கலாம்.



    பொங்கல் திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக நடைபெறுவது காணும்
பொங்கல் ஆகும். மணமாகாத பெண்கள் நல்ல கணவன் வாய்க்கப்
பெற வேண்டும் என்பதற்காகப் பொங்கல் வைத்து வழிபடுவதால் இது
கன்னிப் பொங்கல் என்றும், தை நாளில் உறவினர்களை எல்லாம்
ஒன்றாக வைத்துக் காண்பதால் காணும் பொங்கல் என்றும் பெயர்
பெறுவதாயிற்று.


     இவ்வாறு பொங்கல் திருவிழா உழைப்பின் உயர்வை, உழவின்
சிறப்பை, உறவின் பெருமையை எடுத்துக் கூறி உலகனைத்தும்
பரவியிருக்கின்ற தமிழர்களை ஒன்றிணைக்கும் அற்புதத் திருவிழாவாகக்
கொண்டாடப் பட்டுவருகிறது.


    எங்கெங்கெல்லாம் தமிழினம் பரவி இருக்கின்றதோ, அங்கெல்லாம்
தமிழ் மணம் பரப்பும், தமிழர் பண்பாட்டைப் பறைசாற்றும் விழாவாகப்
பொங்கல் திருநாள் கொண்டாடப் படுவது தமிழ்ப் பண்பாட்டிற்குக்
கிடைத்த பெருமையாகும்.


    என்ன மாணவர்களே, பொங்கல் கொண்டாட்டத்தைக் கண்டு
மகிழ்ந்தீர்களா?

சித்திரைத் திருவிழா


    மதுரை     மாநகரில் ஆண்டு தோறும்     வெகுவிமரிசையாகக்
கொண்டாடப்படுவது சித்திரைத் திருவிழா ஆகும். மீனாட்சி
திருக்கல்யாணம், அழகர் வைகை ஆற்றில் இறங்குதல் என்ற
இரு நிகழ்வுகளை     அடிப்படையாகக்     கொண்டு     இவ்விழா
கொண்டாடப் படுகிறது. புராண அடிப்படையில் நிகழும் பெருந்தெய்வ
விழாவாக இருந்தாலும் நாட்டுப்புற மக்களின் பங்கேற்பும் பங்களிப்பும்
இவ்விழாவின் சிறப்பம்சமாகும். அழகர் கோயிலிலிருந்து மதுரை
வரையுள்ள கிராமங்களில் பெருந்தெய்வக் கடவுளான அழகர்
சிறுதெய்வமாகவே கருதி வணங்கப்படுகின்றார்.     சிறுதெய்வக்
கோயில்களில் மேற்கொள்ளப்படும் பலியிடல், மொட்டை போடுதல்,
நேர்த்திக் கடன் செலுத்துதல் போன்றவை அழகர் கோயிலிலும்
மேற்கொள்ளப் படுகின்றன. சைவ, வைணவச் சமய ஒற்றுமையின்
குறியீடாகச் சித்திரைத் திருவிழாக் கொண்டாடப்பட்டு வருவது
குறிப்பிடத் தக்கதாகும்.

தேர்த்திருவிழா


    நாட்டுப்புற வழிபாட்டில் தேரோட்டம், தேர் இழுத்தல் என்பது
மிகமிகக் குறைவாகும். பெரும்பாலும் பெண் தெய்வங்களையே
(மாரியம்மன், காளியம்மன், அங்காளம்மன்) தேரில் வைத்து ஊர்வலமாக
அழைத்து வரும் வழக்கம் காணப்படுகிறது. ஆண் சிறு
தெய்வங்களுக்குத் தேர்த்திருவிழாக் கொண்டாடும் வழக்கம் இல்லை.
மக்கள் அனைவரும் இறையருள் பெற வேண்டும் என்பதற்காகத்
தெய்வங்களைத் தேரில் அலங்கரித்து அழைத்து வரும் வழக்கம்
கிராமப் புறங்களிலும் நகர்ப் புறங்களிலும் காணப்படுகிறது.

2.6.3 மேல்நிலையாக்கம்


    நாட்டுப்புறச் சிறுதெய்வ வழிபாடுகளில் நிகழ்ந்து வரும் மாற்றங்களே
இங்கு மேல்நிலையாக்கம் (sanskritization) எனச் சுட்டப் படுகிறது.
சிறுதெய்வ வழிபாட்டில் பெருந்தெய்வ வழிபாட்டு முறைகள்
புகுத்தப்பட்டுச் சிறுதெய்வங்கள் மேல்நிலையாக்கம் பெற்றுவருகின்றன.

தெய்வப் பெயர்கள் மேல்நிலையாக்கம் பெறுதல்:

மாரியாயி மாரியாத்தா ஸ்ரீகௌமாரியம்மன்

காளியாயி காளியாத்தா ஸ்ரீகாளீஸ்வரி

சிறுதெய்வக் கோயில்கள் பெருந்தெய்வக் கோயில்களைப் போன்று
    கருவறை, கோபுரம் எழுப்பிக் கட்டப்படுதல்.

சிறுதெய்வ உருவங்கள் பெருந்தெய்வ வடிவங்களாக மாற்றப்படுதல்.

பிராமணர்கள் பூசாரிகளாக நியமிக்கப் பட்டு, சைவப் பூசைகள்
    நடைபெறுதல்.

ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்குரிய தெய்வம் வெகுசனத் தெய்வமாக
    மாற்றப்படுதல்.

போன்ற செயல்பாடுகள் சிறுதெய்வங்கள் மேல்நிலையாக்கம் பெறுவதை
உணர்த்தி நிற்கின்றன.

1. சிறுதெய்வம் 2. வெகுசனத் தெய்வம் 3. பெருந்தெய்வம்