5.1 நாட்டுப்புற விளையாட்டுகள்

நாட்டுப்     புறவியல் என்ற பெரும் நிலப்பரப்பில் நாட்டுப்புற
விளையாட்டுகள் முக்கியப் பகுதியாகத் திகழ்கின்றன.     நாடோடி
வாழ்க்கையின் எச்சங்களும் அவற்றால் விளைந்த சிந்தனைகளுமே
நாட்டுப்புற விளையாட்டுகளின் தோற்றத்திற்கு அடிப்படை என்று
கூறுவர்.

நாட்டுப்     புறங்களில் வாழும் மக்களால் தொன்று தொட்டு, மரபு
வழியாக ஆடப்பட்டு வரும் விளையாட்டுகளை     நாட்டுப்புற
விளையாட்டுகள் எனலாம்.

நாட்டுப்     புறங்களில் மட்டும்தான் விளையாட்டுகள் இருக்கின்றனவா
நகர்ப் புறங்களில் இதுபோன்ற விளையாட்டுகள் ஆடப்படுவது
இல்லையா என்று உங்கள் மனத்தில் எழும் வினா கேட்கிறது. உங்கள்
ஐயத்தையும் இப்பொழுதே தீர்த்து வைத்துவிடலாம். தொன்று தொட்டு,
மரபு வழியாக என்று     கூறினேனல்லவா, இது நகர்ப்புற
விளையாட்டுகளுக்குப் பொருந்தாது; நாட்டுப்புற விளையாட்டுகளுக்கு
மட்டுமே பொருந்தும். இப்பொழுது புரிந்து கொண்டீர்களா? இந்த
நாட்டுப்புற விளையாட்டுகள் அந்தந்தப் பகுதி மண்ணின் மணத்தோடும்
மரபோடும் இன்றுவரை ஆடப்பட்டு வருவது குறிப்பிடத் தக்கதாகும்.
கண்டும் கேட்டும் ஆடியும் பாடியும் குரு இல்லாத, சீடரைப்போல்
வளர்ந்து, இடம்விட்டு இடம் நகர்ந்தும் மணம் பரப்பியும் இவை
வந்துள்ளன. இந்த விளையாட்டுகள், என்று பிறந்தவை? யாரால்
உருவாக்கப்பட்டவை? - என்பது போன்ற வினாக்களுக்கு விடை
காண முடியாத தொன்மை உடையவை.

உள்ளடக்கம்

நாட்டுப்புற     மக்களின் வாழ்க்கை நிலை, சமூக உணர்வு, குழு
மனப்பான்மை, பண்பாடு, பழக்க வழக்கங்கள் போன்ற அனைத்தையும்
உள்ளடக்கியவையாக, மக்களின் வாழ்க்கை முறையைப் பிரதிபலிக்கும்
நிலைக்களன்களாக, நாட்டுப்புற விளையாட்டுகள் விளங்குகின்றன.
காலங்களைத் தாண்டித் தம் இருப்பைக் காட்டிவரும்     நாட்டுப்புற
விளையாட்டுகளில் பொதுக் கூறுகள் சில இயல்பாகவே அமைந்துள்ளன.

5.1.1 பொதுக் கூறுகள்

நாட்டுப்புற     விளையாட்டுகளில் பங்கு பெறுவதற்கு எந்தவிதக்
கட்டுப்பாடும் இல்லை. கூடி மகிழும் ஆர்வமுடைய எவரும்
கலந்துகொண்டு விளையாடலாம். கட்டுப்பாடற்ற சுதந்திரமான
எல்லையற்ற மகிழ்ச்சியே விளையாட்டின் அடிப்படையாகும். ஆனால்,
ஒவ்வொரு விளையாட்டிற்கும் என்று எழுதப்படாத சில விதிமுறைகள்
வகுக்கப்பட்டுள்ளன. இவ்விதிமுறைகள் எல்லாராலும் ஏற்றுக்கொள்ளத்
தக்கவையாக, பொதுக் கூறுகளைக் கொண்டவையாக, விளையாட்டுகளை
நெறிப்படுத்துவனவாக உள்ளன.     இத்தகைய     விதிமுறைகளே
விளையாட்டுகளை ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுத்திக் காட்டுகின்றன.
நாட்டுப்புற விளையாட்டுகளில் அமைந்துள்ள சில பொதுக் கூறுகளை
இங்குக் காண்போம்.


பட்டு வருபவரைத் தேர்ந்தெடுத்தல்

விளையாடக்     கூடிவிட்டனர் வேடிக்கைச்     சிறுவரெல்லாம்.
பட்டு(தொட்டு) வருவது யார்? அதையும்தான் பார்த்துவி்டுவோமே.

தப்பா ஒண்ணு
தவளை ரெண்டு
குச்சி மூணு
பிஸ்கோத்து நாலு
தேளு அஞ்சு
தேளுக்குட்டி ஆறு
வைக்கக் கடலை
வாழைத் தோப்பு
சுண்டக் கடலை
சுருங்கி விழு !


இது பட்டு வருபவரைத் தேர்ந்தெடுப்பதற்காகப் பாடப் பெறும் பாடல்.
விளையாட்டில் கலந்து கொள்ளும் அனைவரையும் நெருங்கி வட்டமாக
நிற்க வைத்து ஒருவர் இந்தப்பாடலைப் பாடிக் கொண்டு,
ஒவ்வொருவராகத் தொட்டுக் கொண்டே வருவார். இறுதியில்
சுருங்கி விழு என்று சொல்லி யாரைத் தொடுகின்றாரோ, அவர்
பட்டுவர வேண்டும். இதே போன்று வேறு சில பாடல்களும் உள்ளன.
இந்த முறையில் மட்டுமின்றி சாட் பூட் திரி, காயா? பழமா?,
ஒத்தையா? ரெட்டையா? போன்ற வேறு முறைகளும் பட்டு
வருபவரைத் தேர்ந்தெடுப்பதற்கு வழக்கத்தில் உள்ளன.

கட்சி பிரித்தல்

குழு     விளையாட்டுகளில் கட்சி பிரித்து ஆடும் முறை
காணப்படுகிறது. உத்தி பிரித்தல், அணி பிரித்தல் என்றும் இது
கூறப்படுவது உண்டு. ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு தலைவர் நியமிக்கப்
படுவார். தங்கள் கட்சிக்கான விளையாட்டு உறுப்பினர்களைத்
தலைவர்களே தேர்ந்தெடுப்பர். தலைவர்கள் தவிர்த்த ஏனையோர்
உத்தி உத்தியாகப் (இருவர் இருவராக) பிரிந்து வந்து, சிங்கம்
வேண்டுமா? யானை வேண்டுமா?, தாமரைப் பூ வேண்டுமா? மல்லிகைப்
பூ வேண்டுமா? என்று தலைவர்களிடம் கேட்பர். தலைவர்கள்
எப்பெயரை விரும்புகின்றனரோ அப்பெயருக்கு உரியவர்கள் அந்தந்தத்
தலைவரின் கட்சியில் இடம் பெறுவர். இரு கட்சியாகப் பிரிந்த
பின்னர் விளையாட்டுத் தொடங்கப்படும்.

விளையாட்டினைத் தொடங்கும் முறை

இரு     கட்சியினராகப் பிரிந்த நிலையில் எந்தக் கட்சி முதலில்
விளையாடத் தொடங்குவது என்பதை முடிவு செய்வதற்குச் சில
தேர்வு முறைகள் பின்பற்றப் படுவதுண்டு. இதனையே தற்பொழுது
டாஸ் போடுதல் என்று கூறுகிறோம். உடைந்த ஓட்டில் எச்சில்
தடவி உயரே போட்டுப் பார்த்தல், நாணயத்தைச் சுண்டிவிட்டுப் 'பூவா?
தலையா?' பார்த்தல் ஆகிய முறைகள் பின்பற்றப் படுவதுண்டு. நவீன
விளையாட்டுகளிலும் இம்முறை பின்பற்றப் பட்டுவருவதைக் காணலாம்.

விளையாட்டினை இடையில் நிறுத்துதல
 

விளையாட்டு     நிகழும் போது இடையில் நிறுத்த வேண்டிய அவசியம்
ஏற்பட்டால் தூவாச்சி, பாஸ் என்று கூறி
ச் சிறிது இடைவெளி விட்டுப்
பின் மீண்டும் ஆட்டத்தைத் தொடருவதுண்டு. நவீன விளையாட்டுகளில்
Time Pass கேட்கும் முறை இருப்பதைக் காணலாம்.

தோற்றவரின் நிலை

விளையாட்டின் இறுதியில் யாராவது தோற்க நேர்ந்தால்

தோத்தான் தொம்பான்
சோறு போட்டாத் திம்பான்


      என்று கேலி செய்து பாடுவதுண்டு. சில விளையாட்டுகளில் தோற்றவர்
மேல் குதிரை ஏறுதல், தலையில் குட்டுதல், கோலிக் குண்டைக் கை
முட்டியால் தரை மீது தேக்கச் செய்தல், பாடிக் கொண்டே குறிப்பிட்ட
தூரம் வரை ஓடித் திரும்பச் செய்தல் போன்ற தண்டனைகள்
வழங்கப்படுவது உண்டு. இத்தகைய தண்டனைகள் இழிவாகக்
கருதப்படுவது இல்லை. தண்டனைகளே தனி விளையாட்டுப்போல்
அமைவதும் உண்டு.

நேர்மை, மதிப்பு, விதிமுறை

மேற்கூறியவை     தவிர விளையாட்டில் பங்கு பெறுவோர் நேர்மையாக
நடத்தல், உடன் ஆடுவோர், எதிர்த்து ஆடுவோர், நடுவர்,
பார்வையாளர் ஆகியோரை மதித்தல், விளையாட்டு விதிமுறைகளுக்குக்
கட்டுப்படுதல் போன்றவையும் விளையாட்டில் கடைப்பிடிக்கத்
தக்கவையாகும். விளையாட்டில் இவ்வளவு விசயங்கள் இருக்கின்றனவா
என்று கேட்கத் தோன்றுகின்றதா
? விளையாட்டு வேடிக்கையானது
மட்டுமல்ல; விவேகமானதும் கூட. இனி, விளையாட்டுகளைப்
பார்ப்போம்.