5.4 ஆடவர் விளையாட்டுகள்

தனி     நிலையிலும் குழு நிலையிலும் அமைந்த புற விளையாட்டுகளாக
ஆடவர் விளையாட்டுகள் அமைந்துள்ளன. உடல் திறன், அறிவுத்
திறன், வீரப் பண்பு ஆகிய மூன்று கூறுகளில் ஏதேனும் ஒன்றை
அடிப்படையாகக் கொண்டு இவ்விளையாட்டுகள் ஆடப் படுகின்றன.
போட்டி மனப் பான்மையைத் தூண்டுபவையாகவும் வெற்றி தோல்வியை
நிர்ணயிக்கும் வாய்ப்பு நிலை விளையாட்டுகளாகவும் உள்ளன. ஒரு
சமுதாயத்தில் போட்டி விளையாட்டுகள் அதிக எண்ணிக்கையில்
காணப்பட்டால் அது அந்தச் சமுதாயத்திற்குச் சிறப்புச் சேர்க்கும் என்று
கூறுவதுண்டு. ஏனையோர் ஆடும் விளையாட்டுகளை விட ஆடவர்
விளையாட்டுகளில் பார்வையாளர் மிகுதி. ஆடவர் இருவராகவோ, இரு
அணிகளாகவோ பிரிந்து ஆடும் நிலையில் பார்வையாளர்களும் இரு
அணியினராகப் பிரிந்து, ஆடுவோருக்கு உற்சாக மூட்டுவதைக்
காணலாம்.

கபடி,     சிலம்பம், சல்லிக் கட்டு, உறியடி, வழுக்கு
மரம், வண்டிப் பந்தயம், புலியாட்டம், ஆடுபுலியாட்டம்,
மான்கொம்பாட்டம், சுருள்கத்தி சுழற்றுதல், வடம் இழுத்தல்
போன்ற விளையாட்டுகள் ஆடவர் விளையாட்டுகளாக நாட்டுப்புற
மக்கள் மரபில் இன்றும் ஆடப்பெற்று வருகின்றன.

கபடி விளையாட்டு

சடுகுடு,     பலிஞ்சடுகுடு, கபடி என்றெல்லாம் கபடி விளையாட்டு
அழைக்கப்படுகிறது. இது இளைஞர்களும், சிறுவர்களும் விரும்பி ஆடும்
போட்டி விளையாட்டு ஆகும்.

கிராமத்து     மந்தைகளிலும் ஆற்று மணலிலும் இவ்விளையாட்டு
ஆடப்படும். இது விதிமுறைகளுடன் கூடிய விளையாட்டு ஆகும்.
ஆடுவோர் இரு அணியினராகப் பிரிந்து அணிக்கு ஏழு பேராகவோ,
ஒன்பது பேராகவோ, சேர்ந்து ஆடுவர். பாடிச் செல்வது கபடி
விளையாட்டின் அடிப்படையாகும். முதல் அணியைச் சேர்ந்தவர் பாடிக்
கொண்டே இரண்டாம் அணியினர் இருக்கும் பகுதிக்குச் சென்று,
ஒருவரையோ, இருவரையோ தொட்டு வெளியேற்றி வரவேண்டும்.
அதேபோல் இரண்டாம் அணியினரும் செய்ய வேண்டும். எந்த அணி
அதிகப் புள்ளிகள் எடுக்கின்றதோ அது வெற்றி பெற்றதாகக்
கருதப்படும். கபடி விளையாட்டு இன்று உலகம் முழுவதும் பரவி
ஒலிம்பிக்கில் இடம்பெறும் அளவிற்கு வளர்ச்சி பெற்றுள்ளது.

எல்லைக்கோடு
ஏறுகோடு
நடுக்கோடு
ஏறுகோடு
எல்லைக்கோடு

கபடிப் பாடல்கள்

நாந்தான் வீரன்டா
நல்லமுத்து பேரன்டா
வெள்ளிச் சிலம்பெடுத்து
விளையாட வாரன்டா
தங்கச் சிலம்பெடுத்துத்
தாலிகட்ட வாரன்டா
சடுகுடு சடுகுடு சடுகுடு
சடுகுடு.

கீத்து கீத்துடா
கீரைத் தண்டுடா
நட்டு வச்சன்டா
பட்டுப் போச்சுடா
போச்சுடா போச்சுடா.....

சிலம்பாட்டம்

தமிழக     நாட்டுப்புற மக்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக
விளங்கும் கருவி விளையாட்டு சிலம்பாட்டம் ஆகும். சிலம்பு
விளையாட்டு, குச்சி விளையாட்டு, கம்பு விளையாட்டு, சிலம்புக்கலை
என்றும் இது வழங்கப்படும். சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று
பொருள் உண்டு. கம்புகளை மாறிமாறி அடித்து ஒலி எழுப்புவதால்
சிலம்பம், சிலம்பாட்டம் எனப்பெயர் பெற்றது எனலாம். இது தற்காப்புக்
கலையாகவும் போர்க் கலையாகவும் விளங்குகிறது. சிலம்பாட்டத்தைக்
கற்றுக் கொள்ளக் குறைந்தது ஆறு மாதக் காலம் ஆகும். சிலம்பாட்டம்
கற்றுக் கொடுக்கச் சிலம்பாட்டக் கழகங்கள் பல தமிழகத்தில் உள்ளன.
சிலம்பாட்டம் ஆடுவதற்குக் குறைந்தது இருவர் வேண்டும். நன்கு
பயிற்சி பெற்ற ஆட்டக்காரர்கள் சிலம்பாட்டம் விளையாடும் போது,
பார்ப்பதற்கு ஆர்வமாகவும் வியப்பாகவும் இருக்கும். ஆண்கள்,
பெண்கள் என்று இருபாலரும் இன்று சிலம்பாட்டத்தைக் கற்று
விளையாடி வருகின்றனர்.

பொங்கல்     திருவிழா, கோயில் விழாக்கள், ஊர்வலங்கள் இவற்றில்
சிலம்பாட்டம் தவறாது இடம் பெறும்.

வழுக்கு மரம்
 

ஆடவரின்     உடல் திறனைச் சோதிப்பது வழுக்கு மரம்
விளையாட்டு ஆகும். நன்கு வழுவழுப்பாகச் செதுக்கப்பட்ட
உயரமான மரம் நடப்படும் அதனை மேலும் வழுவழுப்பாக்கப்
பலவிதமான எண்ணெய்கள் திரும்பத் திரும்பத் தடவப்படும்.
மரத்தின் உச்சியில் பண முடிப்பு வைக்கப்படும். வழுக்கு மரத்தில்
ஏறி அந்தப் பண முடிப்பை எடுக்கும் திறன் உள்ளவர் யார்
என்பதைக் கண்டறிவதுதான் போட்டி. அவ்வளவு எளிதாக அந்தப்
பண முடிப்பை     எடுத்துவிட முடியாது.    இளைஞர்கள்
முண்டியடித்துக் கொண்டு இப்போட்டியில் கலந்து கொள்வார்கள்.
ஊர் மக்கள் அனைவரும் திரண்டு மகிழ்ச்சி ஆரவாரத்தோடு
இவ்விளையாட்டைக் கண்டு களிப்பார்கள். வழுக்கு மரத்தில்
ஏறிப் பண முடிப்பை எடுக்கும் இளைஞர் சிறந்த வீரராகக்
கருதப்படுவார். அவருக்கு மேலும் பணமும் பாராட்டுகளும்
கிடைக்கும். தெய்வ வழிபாட்டின் ஒரு பகுதியாகக் கிராமப்
புறங்களில் இவ்விளையாட்டு நடத்தப்படும்.

வழுக்கு மரம்
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

ஆடுபுலி ஆட்டம்

ஆடவரால்     விளையாடப்படும் வரைபட ஆட்டம் ஆடுபுலி
ஆட்டம்
ஆகும். இது பதினைந்தாம் புள்ளி என்றும்
வழங்கப்படும். அறிவுத் திறனை வளர்க்கக் கூடிய இந்த
விளையாட்டிற்கு இருவர் வேண்டும்.

ஒருவர்     ஆடுகளின் சார்பாகவும், ஒருவர் புலியின் சார்பாகவும்
விளையாட வேண்டும். மண் தரையிலோ அல்லது கல், சாந்துத்
தரையிலோ ஆட்டத்திற்குரிய வரைபடத்தை வரைந்து கொள்ள
வேண்டும். ஆடுகளின் சார்பாக விளையாடுபவர் பதினைந்து
காய்களையும் (கற்கள் அல்லது புளியங் கொட்டை) புலியின் சார்பாக
விளையாடுபவர் மூன்று காய்களையும் வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது     ஆடுகளுக்குரிய காய்களை வைத்துக் கொண்டே
வரவேண்டும். அப்பொழுது புலி ஆடுகளி்ன் இருப்பு முறைக்கேற்ப
நகர்ந்து கொண்டும் ஆடுகளை வெட்டிக் கொண்டும் வரும். புலி நகர
முடியாத அளவிற்கு ஆடுகள் சுற்றி வளைத்துக் கொண்டால் புலி
தோற்றதாகக் கருதப்படும். ஆடுகள் அனைத்தையும் புலி
வெட்டிவிட்டால் புலி வெற்றி பெற்றதாகக் கருதப்படும். ஆடுவோரின்
திறமையைப் பொறுத்து ஆட்டத்தின் காலம் நீளும்.

அறிவுக்     கூர்மைக்கும் சிந்தனையை ஒருமுகப் படுத்துவதற்கும்
இவ்விளையாட்டு சிறந்த பயிற்சியாகும். இந்தோனேசியா, இலங்கை,
மலேசியா போன்ற நாடுகளிலும் இவ்விளையாட்டு உள்ளது குறிப்பிடத்
தக்கதாகும்.

5.4.1 உடல் திறன் விளையாட்டு

ஆடவரின்         உடல்     அமைப்பு     வலிமையானதாகவும்
உறுதியுடையதாகவும் அமைந்திருப்பதால் அதற்கேற்ற வகையிலேயே
விளையாட்டுகளும்     வடிவமைக்கப்     பட்டுள்ளன.     ஆடவர்
விளையாட்டுகளில் உடல் திறனை வெளிக்காட்டும் வகையில் அமைந்த
விளையாட்டுகளே மிகுதி, கபடி, சிலம்பாட்டம், உறியடி, வழுக்கு மரம்,
வடம் இழுத்தல், இளவட்டக் கல் போன்ற விளையாட்டுகள்
இவ்வகைப்பாட்டில் அடங்கும்.

உறியடி

உறியடி     விளையாட்டில் ஆடவரின் உடல்திறன் எவ்வாறு
வெளிப்படுகிறது என்று காண்போம். வைணவக் கோயில்
திருவிழாக்களில் உறியடித்தல் என்னும் சடங்கு, வழிபாட்டின் ஓர்
அங்கமாக நிகழ்த்தப்பட்டு வருகின்றது. ஆயர் பாடியில் கண்ணன்
வெண்ணெய் திருடி விளையாடியதை நினைவு கூரும் வகையில்
உறியடித்தல் சடங்கு நடத்தப் படுவதாகக் கூறப்படுகிறது.


உறியடி
பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக

    வடிவில் மூங்கில் கழிகள் நடப்பட்டிருக்கும். கழியின்
மையப் பகுதியில் ஓர் உருளையும் அதன்வழி ஒரு கயிறும்
தொங்கவிடப்பட்டிருக்கும். கயிற்றின் ஒரு முனையில் ஒரு மண்
பானையைக்கட்டி,மறு நுனியை ஒருவர் பிடித்துக் கொள்வார். அந்தப்
பானையினுள் வண்ணக் கலவை நீர் நிரப்பப் பட்டிருக்கும்.
இப்பொழுது அந்தப் பானையைக் கம்பு கொண்டு அடித்து
உடைக்க வேண்டும்.இது எளிதான செயல்தானே என்ற எண்ணம்
உங்கள் மனதில் தோன்றும். அது அவ்வளவு எளிதான செயலன்று.
ஏனென்றால் பானையை உடைக்க முன்வருபவர் கண்ணைக் கட்டிக்
கொள்ள வேண்டும். கண்ணைக் கட்டி இரண்டு மூன்று முறை
அவரைச் சுற்றி விட்ட பின்பே கையில் கம்பைக் கொடுத்து
அனுப்புவர். இந்நிலையில் அவர் எந்தத் திசையில் நிற்கின்றார் என்று
அவருக்கே தெரியாது.

கண்ணைக்     கட்டிக் காட்டில் விட்டது போல என்று கூறுவார்களே
அந்த நிலைதான் அவருக்கு. அந்த நிலையையும் தாண்டி அவர்
பானை அருகில் வந்துவிட்டால் பானை மேலும் கீழும் இழுத்து
விடப்படும். இந்தத் தடைகளை எல்லாம் மீறி அவர் பானையை
உடைத்து வெற்றி பெற வேண்டும். வேறு சில இடங்களில் கண்ணைக்
கட்டாமல் ஒரு காலை மட்டும் மடக்கிக் கட்டி நொண்டியடித்துக்
கொண்டே பானையை உடைக்க வேண்டும். பானையை உடைக்க
விடாமல் சுற்றியிருப்போர் அவர் மீது மஞ்சள் நீரை ஊற்றுவர்.
இதுபோன்ற தடைகளை எல்லாம் மீறிப் பானையை உடைப்பவருக்குப்
பாராட்டுகளும் பரிசுகளும் வழங்கப்படும். உறியடி விளையாட்டின்
போது ஊரே திரண்டுவிடும். உற்சாகம் கரை புரண்டோடும்.

5.4.2 வீர விளையாட்டு

காதலும்     வீரமும் தமிழர் வாழ்வின் அடிப்படை. மல்லராகவும்
மறப்பண்பு உடையோராகவும் வீரப் பற்று மிக்கோராகவும் தமிழர்கள்
விளங்கியதைத் தமிழ் இலக்கியங்கள் எடுத்துக்காட்டும். இத்தகைய
மறப்பண்பை வளர்த்தெடுக்கும் வகையிலேயே இன்றும் வீர
விளையாட்டுகள் மரபாகவும், பண்பாட்டுச் செயல்பாடாகவும் நிகழ்த்தப்
பட்டுவருகின்றன.

சல்லிக் கட்டு

நாட்டுப்புற     மரபில் வீர விளையாட்டாகக் கருதிப் போற்றப்படுவது
சல்லிக் கட்டு்
ஆகும். தமிழர் திருநாளாம் தைத்திருநாளின் ஓர்
அங்கமாக ஊர்கள் தோறும் சல்லிக் கட்டு வெகு விமரிசையாக நடத்தப்
படுவதுண்டு.எருது கட்டு, மஞ்சு விரட்டு, ஏறு தழுவுதல்,மாடு
பிடித்தல்
என்று பல பெயர்களில் வழங்கப் பெறும்
இவ்விளையாட்டினைப் பார்ப்போம்.

முரட்டுக்     காளைகளை விரட்டிப் பிடித்து வீரத்தை வெளிப்படுத்தும்
போட்டி விளையாட்டாக, சல்லிக் கட்டு நிகழ்த்தப் படுகின்றது. சல்லிக்
கட்டில் பயன்படுத்துவதற்கு என்றே காளைகள் வளர்க்கப்பட்டு,
அவற்றிற்குப் பயிற்சி அளிக்கப் படுகின்றது. இவ்வாறு பயிற்சி பெற்ற
காளைகள் சல்லிக் கட்டு நடைபெறும் இடங்களுக்கு அழைத்து
வரப்பட்டு, போட்டிக்கு விடப்படுகின்றன. காளைகள் வாடி வாசல்
என்ற பகுதியிலிருந்து வெளிக்கிளம்பி எதிர்ப்பட்டோரை எல்லாம்
முட்டித் தள்ளியும் மிதித்தும் ஓடிவரும்.

காளைகளின்     போக்கை அறிந்த, காளைகளைப் பிடிக்கப் பயிற்சி
பெற்ற, காளைகளின் சாகசம் அறிந்த இளைஞர்கள் சீறிவரும்
காளைகளின் மீது துணிச்சலாகப் பாய்ந்து திமிலை இறுகப் பற்றியோ,
கொம்பைப் பிடித்து மடக்கியோ அடக்குவர். அனுபவமில்லாத சிலர்
காளைகளால்     காயப்படுவதுமுண்டு.     காளைகளைப் பிடித்து
அடக்கியோருக்குப் பலவிதமான பரிசுகள் வழங்கப் பெறும்.

தமிழகத்தின்     தென் மாவட்டங்களில் சல்லிக் கட்டு மிகவும் பிரபலம்.
பொங்கல் விழாவையொட்டி மதுரை மாவட்டத்திலுள்ள அலங்கா
நல்லூரில்
ஆண்டு தோறும் சல்லிக் கட்டு விழாவைத் தமிழக அரசே
ஏற்று நடத்துகிறது. உலகின் பல நாடுகளிலும் காளைகளோடு
தொடர்புடைய விளையாட்டுகள் நிகழ்த்தப்பட்டு வந்தாலும், தமிழரின்
மறப் பண்பாட்டைப் பறை சாற்றும் சல்லிக் கட்டு தனிச் சிறப்புடையது
என்பதைப் பார்த்தோர் அறிவர்.


சல்லிக் கட்டு

பெரிதாய்க் காணப் படக்காட்சியை அழுத்துக