2.4 இடம்

நாம் உரையாடும்போது பேசுகின்ற நாமும் கேட்கின்றவர்களும் பேசப்படும் பொருளும் என்று மூன்று நிலைகள் உள்ளன. இதையே இடம் என்று குறிப்பிடுவர்.

இடம் மூன்று வகைப்படும். எனவே இதை மூவிடம் என்றும் கூறுவார்கள்.

1) தன்மை 2) முன்னிலை 3) படர்க்கை

2.4.1 தன்மை

பேசுபவர் தன்னைக் குறிப்பது தன்மை எனப்படும். இது இரண்டு வகைப்படும்.

1) தன்மை ஒருமை 2) தன்மைப் பன்மை

  • தன்மை ஒருமை

  • தன்மை இடத்தில் ஒருவரைக் குறிப்பது தன்மை ஒருமை எனப்படும்.

    (எ.கா) நான் பேசினேன் யான் பேசினேன்

  • தன்மைப் பன்மை

  • தன்மை இடத்தில் பலரைக் குறிப்பது தன்மைப் பன்மை எனப்படும்.

    (எ.கா) நாம் படித்தோம் யாம் படித்தோம்

    2.4.2 முன்னிலை

    முன்னால் இருப்பவரைக் குறிப்பது முன்னிலை எனப்படும். முன்னிலையும் இரண்டு வகைப்படும்.

    1) முன்னிலை ஒருமை 2) முன்னிலைப் பன்மை

  • முன்னிலை ஒருமை

  • முன்னிலை இடத்தில் ஒருவரைக் குறிப்பது முன்னிலை ஒருமை எனப்படும்.

    (எ.கா) நீ வந்தாய்

  • முன்னிலைப் பன்மை

  • முன்னிலை இடத்தில் பலரைக் குறிப்பது முன்னிலைப் பன்மை எனப்படும்.

    (எ.கா) நீர் வந்தீர் நீவிர் வந்தீர் நீங்கள் வந்தீர்கள்

    2.4.3 படர்க்கை

    தன்மையும் முன்னிலையும் அல்லாத பிறர் அல்லது பிற பொருளைக் குறிப்பது படர்க்கை எனப்படும். படர்க்கையும் இரு வகைப்படும்.

    1) படர்க்கை ஒருமை 2) படர்க்கைப் பன்மை

  • படர்க்கை ஒருமை

  • படர்க்கையில் ஒருவர் அல்லது ஒரு பொருளைக் குறிப்பது படர்க்கை ஒருமை எனப்படும்.

    (எ.கா) அவன் வந்தான் அவள் வந்தாள் அது வந்தது

  • படர்க்கைப் பன்மை

  • படர்க்கையில் பலர் அல்லது பல பொருளைக் குறிப்பது படர்க்கைப் பன்மை எனப்படும்.

    (எ.கா) அவர் வந்தார் அவை வந்தன.

    தன்மை, முன்னிலை ஆகியவற்றைக் குறிக்கும் இடப்பெயர்களில் ஆண்பால், பெண்பால் என்னும் பிரிவுகள் தெரிவதில்லை. ஆனால் படர்க்கைச் சொல்லில் மட்டும் ஆண்பால், பெண்பால், பலர் பால், ஒன்றன் பால், பலவின் பால் என்னும் பிரிவுகள் தெரியும்.

    தன்மை, முன்னிலை, படர்க்கை மூ இடனே

    (நன்னூல் : 266)

    தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகியவை மூன்று இடங்கள் என்பது இந்த நூற்பாவின் பொருள்.

    2.4.4 மூவிடப் பொதுப்பெயர்

    தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்று இடங்களுக்கும் பொதுவாய் வரும் பெயர் மூவிடப் பொதுப்பெயர் எனப்படும்.

    எல்லாம் என்னும் பெயர்கள் மூன்று இடங்களுக்கும் பொதுவாய் வரும்.

    யாம் எல்லாம் நீவிர் எல்லாம் அவர் எல்லாம் அவை எல்லாம்

    ‘எல்லாம்’ என்னும் பெயர் பன்மைக்கு உரியது.