6.1 ஐந்தாம் வேற்றுமை

ஐந்தாம் வேற்றுமைக்கு உரிய உருபுகள் இன், இல் என்பன ஆகும்.

இவ்விரண்டு உருபுகளும் பெயர்ப்பொருளை நீங்கல் பொருளாகவும், உவமைப்பொருளாகவும், எல்லைப்பொருளாகவும், ஏதுப்பொருளாகவும் வேற்றுமை செய்யும்.

நீங்கல்பொருள்

நீங்கல் பொருளாவது ஒரு பொருள் மற்றொன்றிலிருந்து விலகிச் செல்வது.

எடுத்துக்காட்டு

மரத்தின் உதிர்ந்த இலை நீங்கல்பொருள்
மலையின் வீழ் அருவி
தலையின் இழிந்த மயிர்

ஒப்புப்பொருள்

ஒப்புப்பொருளாவது, இரண்டு பொருள்களை ஒப்பிட்டுக் கூறுவது.

எடுத்துக்காட்டு

காக்கையின் கரியது யானை ஒப்பு
கண்ணின் சிறந்த உறுப்பு இல்லை
மதியின் குளிர்ந்த முகம்

எல்லைப்பொருள்

எல்லைப்பொருளாவது அறியப்படாத பொருளினது திசை, காலம், பண்பு முதலியவற்றைக் குறிப்பதற்கு எல்லையாக நிற்கும் பொருளாகும்.

எடுத்துக்காட்டு

சென்னையின் தெற்குச் சிதம்பரம் - திசை
கண்ணனின் இரண்டாண்டு சிறியவன் கந்தன் - காலம்
பசுவின் இழிந்தது எருமை - பண்பு
அன்பின் இழிந்தது சினம்

சென்னையின் தெற்குச் சிதம்பரம் - இதில் அறியப்படாத சிதம்பரத்தினது திசையைக் குறிப்பதற்கு எல்லையாக நிற்பது அறியப்பட்ட பொருளாகிய சென்னை. ஆதலால் சென்னை எல்லைப் பொருள் ஆகும்.

ஏதுப்பொருள்

ஒரு பொருளின் பெருமை, சிறப்பு முதலியவற்றுக்கு ஏதுவாகும் (காரணமாகும்) பொருள், ஏதுப்பொருள் ஆகும்.

(ஏது = காரணம்)

எடுத்துக்காட்டு

கல்வியில் பெரியவர் கம்பர் ஏதுப்பொருள்
இலக்கணத்தில் சிறந்தது தொல்காப்பியம்
அழகில் சிறந்தது மயில்
வீரத்தில் சிறந்தவர் தமிழர்

கல்வியில் பெரியவர் கம்பர் என்பதில், கம்பனுடைய பெருமைக்கு ஏது - (காரணம்) கல்வி. ஆதலால் கல்வி ஏதுப்பொருள் ஆகும்.

இவை போல, விட, காட்டிலும், பார்க்கிலும் என்னும் சொற்கள் வந்தும் ஐந்தாம் வேற்றுமைப் பொருளைத் தருகின்றன.

எடுத்துக்காட்டு

இரும்பை விடப்பொன் மதிப்புடையது - விட
பரங்கிமலையைக் காட்டிலும் இமயமலை உயர்ந்தது - காட்டிலும்
வேலனைப் பார்க்கிலும் முருகன் நல்லவன் - பார்க்கிலும்

மேற்கண்ட தொடர்களில் வந்துள்ள விட, காட்டிலும், பார்க்கிலும் ஆகிய சொற்களும் ஐந்தாம் வேற்றுமைப் பொருளையே தருவதால் இவை ஐந்தாம் வேற்றுமைச் சொல்லுருபுகள் ஆகும்.

ஐந்தாவதன் உருபு இல்லும் இன்னும்
நீங்கல் ஒப்பு எல்லை ஏதுப் பொருளே

(நன்னூல் : 299)