5.3 பெயரெச்ச வகைகள்

     பெயரெச்சத்தைக்     காலம்காட்டும்     முறையின்
அடிப்படையில், ‘தெரிநிலைப் பெயரெச்சம்’,     ‘குறிப்புப்
பெயரெச்சம்’ என இருவகைப்படுத்துவர்.

5.3.1 தெரிநிலைப் பெயரெச்சம்

    காலத்தை வெளிப்படையாகக் காட்டும் பெயரெச்சம்,
‘தெரிநிலைப் பெயரெச்சம்’
எனப்படும். இடைநிலை
அல்லது விகுதியைக் கொண்டு பெயரெச்சம் காலம்காட்டும்.

    அ, உம் ஆகிய இரண்டு விகுதிகள் தெரிநிலைப்
பெயரெச்சத்தில் இடம்பெறுகின்றன.

(எ.கா)
இறந்த காலப்
பெயரெச்சம்
- கேட்ட பாட்டு
('ட்' இறந்தகால இடைநிலை)
நிகழ்காலப்
பெயரெச்சம்
- கேட்கின்ற பாட்டு
('கின்று' நிகழ்கால இடைநிலை)
எதிர்காலப்
பெயரெச்சம்
- கேட்கும் பாட்டு
('உம் பெயரெச்ச விகுதி)

இறந்தகாலத்தையும்,     நிகழ்காலத்தையும்     இடைநிலைகள்
உணர்த்துகின்றன. எதிர்காலத்தை விகுதி உணர்த்துகிறது

5.3.2 குறிப்புப் பெயரெச்சம்

    பெயர் அடியாகப் பிறந்து, காலத்தைக் குறிப்பாக
உணர்த்தும் பெயரெச்சம், ‘குறிப்புப் பெயரெச்சம்’ எனப்படும்.

    குறிப்புப் பெயரெச்சம், ‘அ’ என்னும் விகுதியைப் பெற்று
வரும்.

(எ.கா) சிறிய பையன்
புதிய பாடம்
அழகிய கவிதை

    இவை முறையே சிறுமை, புதுமை, அழகு ஆகிய
பெயர்களின் அடியாகப் பிறந்தவை. நேற்றுச் சிறிய பையன்,
இன்று சிறிய பையன், நாளை சிறிய பையன் எனச் சூழ்நிலைக்
கேற்பக் குறிப்புப் பெயரெச்சம் காலத்தைக் குறிப்பாக
உணர்த்தும்.