4.2 அடி இலக்கணம்

    செய்யுள்கள் யாவும் பல அடிகளால் ஆனவையே. செய்யுள்
உறுப்பாகிய இதனை ‘அடி’ என்னும் சொல்லால்தான் எங்கும்
குறிப்பிட வேண்டும். வரி எனச் சுட்டுதல் கூடாது.

    அடிகள் ஐந்து வகைப்படும். அவற்றுக்கான பெயர்கள்
வருமாறு :

(1)

குறளடி
(2) சிந்தடி

(3)

அளவடி
(4) நெடிலடி

(5)

கழிநெடிலடி

    சீர்களின் எண்ணிக்கை அடிப்படையில்தான் அடி இலக்கணம்
கூறப்பட்டுள்ளது.

அ)
இரண்டு சீர்கள் ஓர் அடியில் இருந்தால் அந்த
அடிக்குக் குறளடி என்று பெயர்.
ஆ)
மூன்று சீர்கள் ஓர் அடியில் இருந்தால் அதற்குச்
சிந்தடி என்று பெயர்.
இ)
நான்கு சீர்கள் இருக்கும் அடிக்கு அளவடி அல்லது
நேரடி
என்று பெயர்.
ஈ)
ஐந்து சீர்கள் இருக்கும் ஓர் அடிக்கு நெடிலடி என்று
பெயர்.
உ)
ஆறு சீரும் அதற்கு மேற்பட்ட சீர்களும் இருக்கும்
அடிக்குக் கழிநெடிலடி என்று பெயர்.

4.2.1 அடி வகைகள்

    அடி வகைகளாக மேற்கண்ட செய்திகளை எளிதில்
நினைவுபடுத்திக் கொள்ளக் கீழ் வருமாறு எழுதிப் பார்த்துப் பயன்
பெறலாம்.

இரண்டு சீர்கள் உள்ள அடி - குறளடி
மூன்று சீர்கள் உள்ள அடி - சிந்தடி
நான்கு சீர்கள் உள்ள அடி - அளவடி
ஐந்து சீர்கள் உள்ள அடி - நெடிலடி
ஆறு சீர்கள் உள்ள அடி - கழிநெடிலடி

சான்றுகள்

குறளடி -
நாண மேவடி
- இரண்டு சீர்கள்
வான ஓர்மகள்

    இவ்வாறு வரும் வஞ்சித்துறைப் பாக்களில் அடிதோறும்
இரண்டு சீர்கள் இருப்பதைப் பார்க்கலாம்.     

சிந்தடி -
இரந்து நிற்றல் இலாமையும்
- மூன்று சீர்கள்
கரந்து நிற்றல் கலாமையும்

    என்பன போன்ற வஞ்சி விருத்தப் பாடலடிகள் சிந்தடிகளாக
அமையும்.     

அளவடி - சாதி இரண்டொழிய வேறில்லை சாற்றுங்கால்
நீதி வழுவா நெறிமுறையில் -
மேதினியில்
இட்டார் பெரியோர் இடாதார்
இழிகுலத்தோர்
பட்டாங்கில் உள்ள படி

    இவ்வெண்பாவில் உள்ள முதல் மூன்றடிகளும் அளவடிகளாக
அமைந்தன.     ஒவ்வோர்     அடியிலும் நான்கு சீர்கள்
அமைந்துள்ளமையைக் காண்க.

நெடிலடி -

குறிலே நெடிலே குறிலிணை ஏனைக்
         குறினெடிலே

நெறியே வரினும் நிரைந்தொற் றடுப்பினும்
            நேர்நிரையென்
றறிவேய் புரையும் மென்றோளி உதாரணம்
            ஆழிவெள்வேல்
வெறியே சுறாநிறம் விண்டோய்
     விளாமென்று வேண்டுவரே

    (யாப்பருங்கலக் காரிகை : 5)

    இக் கட்டளைக் கலித்துறை எனும் செய்யுளில் உள்ள நான்கு
அடிகளும் ஐந்து சீர் உள்ள நெடிலடிகளாகும்.

கழிநெடிலடி - திருமண மக்கள் நல்ல திருவேந்திப்
        புகழும் ஏந்திப்
பருதியும் நிலவும் போலப் பல்லாண்டு
        வாழ்நாள் ஏந்திக்
கருவிலே தமிழ்ப்பண் பாடு கமழ்மக்கள்
        பேரர் ஏந்திப்
பெருவாழ்வு வாழ்க உற்றார் பெற்றோரும்
        தமிழும் வாழ்க

    என்னும் இப்பாடல் ஓர் ஆசிரிய விருத்தமாகும். இதன் கண்
ஒவ்வொரு அடியிலும் ஆறு சீர்கள் உள்ளன. எனவே இதனை,
அறுசீர்க கழிநெடிலடி ஆசிரிய விருத்தம் என்றும் கூறுவர்.
இதுபோல் ஏழு சீர்கள் மற்றும் எட்டு சீர்கள் வரை கழிநெடிலடி
அமைவது சிறப்பு. பன்னிரண்டுக்கு மேல் சீர்கள் ஓர் அடியில்
வரினும் அதற்கும் கழிநெடிலடி என்றே பெயர். ஆயினும்
பன்னிரண்டு சீர்க்கு மேல் வருவன சிறப்பில என்பர்.

பயில்முறைப் பயிற்சி - 1

1.


குறளடிகள் வரும் செய்யுள்கள் நான்கை எழுதி, வைத்து
இலக்கணத்தைப் பொருத்தி அறிக.


2.

சிந்தியல் வெண்பாக்கள், வெண்பாவின் ஈற்றடி, முதலிய
இடங்களில் முச்சீரடி வருவதைக் கண்டு தெளிக.

3.

யாப்பருங்கலக் காரிகை எனும் நூலில் உள்ள இலக்கணம்
கூறும் செய்யுள்களில் எல்லாம் ஐந்து சீர்கள் இருப்பதைப்
பார்த்துத் தெரிந்து கொள்க.

4.


கழிநெடிலடிகள் ஆறு சீர் முதல் எண் சீர் வரையிலும்
வருவதற்குச் சான்றுகளைப் பல்வேறு இலக்கியங்களில்
பார்த்து ஓரிரு சான்றுகளை எழுதி வைத்துக் கொள்க.