2.2 தமிழும் தமிழ்ப்பண்பாடும்

Audio

தமிழ் நாட்டில் ஆறுகோடி மக்களாலும், வடஇந்தியாவிலும்
அயல்நாடுகளிலும் மூன்று கோடி மக்களாலும் பேசப்படும் மொழி
தமிழ். திராவிட மொழிக் குடும்பத்தில் மூத்த முதல் மொழி தமிழ்.

தமிழ் மொழி இலக்கணம் ஐந்து பிரிவுகளை உடையதாக
வளர்ந்தது. எழுத்து, சொல், பொருள், யாப்பு (செய்யுள்
இலக்கணம்), அணி என்பன அந்த ஐந்து பிரிவுகளாகும்.

2.2.1 தமிழின் சொல்சிறப்பு (Diction)

(அ) குறைவான எழுத்துகளின் கூட்டு

தமிழ் மொழியிலுள்ள சிறப்புகளில் ஒன்று அதன்
சொற்சிறப்பு. உயிரும் மெய்யும் கலந்து புதிய எழுத்து வடிவங்கள்
கொள்வதால், தமிழில் எழுத்துகளின் எண்ணிக்கை அதிகம்
(ஆங்கில மொழி போல் இல்லை) ஆயினும் இது வேறு வகையில்
பயன் தருவதாக அமைகிறது. ஆங்கிலம் போன்ற மொழிகளில்
உள்ளவாறு ஒரு சொல்லில் 20, அல்லது 23 எழுத்துகளைப்
பார்க்க இயலாது. தமிழிலுள்ள எந்தச் சொல்லாக இருந்தாலும் ஏழு
எழுத்துகளுக்கு மேல் இல்லை.

(ஆ) ஓர் ஏழுத்து ஒரு சொல்

ஓர் எழுத்தே ஒரு சொல்லாக அமைவதும் தமிழ் மொழிக்கு
உரிய சிறப்புகளில் ஒன்று.

(எடுத்துக்காட்டு)

பசு

நா

நாக்கு

கை

ஒரு உறுப்பு

கோ

மன்னன்

தீ

நெருப்பு
மை கருமை

பூ

மலர்

வா

அழைத்தல்

போ

அனுப்புதல்

தா

கொடு
தை ஒரு மாதம்

மா

விலங்கு

பயில் முறைப் பயிற்சி

1. ஓர் எழுத்து ஒரு சொல்லுக்கான எடுத்துக்காட்டுகள்
சிலவற்றை மேலே படித்தீர்கள். கீழ்க்குறிப்பிட்டுள்ள
பொருள்களில் வழங்கும் ஓர் எழுத்துச் சொற்களை
நினைவு கூருங்கள்.

  • பறக்கும் வகையைச் சேர்ந்தது; உணவுப் பண்டங்களில்
    வந்து அமர்வது அருவருப்பு ஊட்டக்கூடியது

  • பொருட்களை வைத்து எடுத்துச் செல்ல உதவுவது
    அழி, அழிந்து போ என்ற பொருள் தருவது

  • மன்னன் என்பதற்கு மாற்றுச் சொல்

2. "யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர்
சொல்லிழுக்குப் பட்டு"

என்ற குறளைப் படித்திருக்கிறீர்களா? உரையுடனும்
பொருள் விளக்கத்துடனும் உங்கள் மின்னூலகத்தில்
குறள்கள் இடப்பட்டுள்ளன. இக்குறளின் பொருளைப்
படித்தறியுங்கள்.

இக்குறளில் மூன்று ஓர் எழுத்துச் சொற்கள் கையாளப்
பட்டிருக்கின்றன. அவற்றை அடையாளம் கண்டு
சொல்லுங்கள், பார்க்கலாம்!

இ) சொல்வளம் காட்டும் அறிவு நிலை
    
காணும் பொருள் ஒவ்வொன்றையும் கூர்ந்து கவனித்து,
அதன் வளர்ச்சி நிலையில் அல்லது பிற வகையில் உள்ள
வேறுபாடுகளைத் தனித்துப் பெயரிட்டு வழங்கிய அறிவு முதிர்ந்த
பக்குவம் தமிழ் மொழியில் காணும் சிறப்பு ஆகும். அவ்வகையில்
பெண்ணுக்கு வழங்கிய பல வளர்ச்சி நிலைச் சொற்களைக்
காணுங்கள்:


பேதை

5 வயதிற்கு உட்பட்ட பெண்


பெதும்மை

10 வயதிற்கு உட்பட்ட பெண்


மங்கை

16 வயதிற்கு உட்பட்ட பெண்


மடந்தை

25 வயதிற்கு உட்பட்ட பெண்


அரிவை

30 வயதிற்கு உட்பட்ட பெண்


தெரிவை

35 வயதிற்கு உட்பட்ட பெண்


பேரிளம்பெண்

45 வயதிற்கு உட்பட்ட பெண்

ஆண்களைக் குறிக்கும் சொற்களும் இவ்வாறு பருவத்திற்கும்
உருவத்திற்கும் ஏற்ற வகையில் அமைந்துள்ளன.

இதே போன்று தாவர இனத்தில் ஓர் இலையின் வளர்ச்சி
நிலையில் பல்வேறு வகையான பருவத்தைச் சுட்டும் சொற்கள்
உள்ளன.

கொழுந்து, தளிர், இலை, பழுப்பு, சருகு ஆகிய சொற்கள்
இலையின் பல பருவங்களை வெளிப்படுத்துவன:

இவ்வாறே, பூவின் பல பருவ மாறுதல்களைக் குறிக்கும்
சொற்களும் உள்ளன. பூவின் உருவத்தையும் பருவத்தையும்
இணைக்கும் சொற்களைப் பாருங்கள்.

அரும்பு பூ அரும்பும் நிலை
மொட்டு பூ மொக்கு விடு நிலை

முகை

பூ முகிழ்க்கும் நிலை

மலர்

பூ மலரும் நிலை
அலர்     பூ மலர்ந்த நிலை
வீ     பூ வாடும் நிலை
செம்மல்     பூ வதங்கும் நிலை

இயற்கைப் பொருள்களின் வளர்ச்சி நிலைக்கு ஏற்றவாறு
வெவ்வேறு பெயர்களை வழங்கியமை அம்மொழி பேசிய
மக்களின்     இயற்கை     ஈடுபாட்டையும் ஆர்வத்தையும்
எடுத்துக்காட்டுகிறது. புலன் நுகர்ச்சிகளைப் பகுத்துப் பொருள்
கொள்ளும் அறிவு முதிர்ச்சி நிலையையும் அது உணர்த்தி
நிற்கிறது. இவ்வகையில் தமிழ்ப் பண்பாடு தமிழ் மொழியால்
விளக்கம் பெறுகிறது.

  • பொருள் பொதிந்த சொற்கள்
  • தொல்காப்பியர் சொல்லுக்கு இலக்கணம் கூறும் பொழுது
    எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே என்று குறிப்பிடுகிறார்
    (தொல். சொல் பெயரியல் நூ.1) தமிழ்ச்சொற்கள் ஒவ்வொன்றையும்
    அதன் வேர்ச்சொல்லைக் கண்டு ஆராயும் பொழுது அதில்
    பொதிந்திருக்கும் பொருள் புலப்படும்.


    தமிழறிஞர் தேவநேயப் பாவாணர்

    இத்தகைய வேர்ச்சொல் ஆய்வினை அறிஞர்
    பலர் மேற்கொண்டுள்ளனர். 'இறப்பு' என்ற
    சொல்லுக்குத்     தமிழறிஞர் தேவநேயப்
    பாவாணர் தரும் விளக்கத்தைப் பாருங்கள்.
    'இறப்பு' என்பது ஓர் உயிரின் முடிவு
    அல்லது அழிவைச் சுட்டும். இது ‘இறு’ -
    முடிவு என்னும் வேர்ச்சொல்லின் அடியாய்,
    ஒர் உயிரின் முடிவைச் சுட்டும் ‘இறப்பு’ எனச்
    சொல்லாக்கம் பெற்றது என்பார் பாவாணர்.

  • அடைமொழிகளும் காட்சிப்படிமங்களும்

    பகல் வேளையில் கதிரவன் ஒளியின் மரநிழலை நீங்கள்
    பார்த்திருப்பீர்கள். நிழல்களில் தான் எத்தனை வகை?
    "கொழுநிழுல்","புள்ளி நிழல்","வலை நிழல்", "வரி நிழல்" என
    வகைப்படுத்திக்காட்டுகிறது. சங்க காலத் தமிழ் இலக்கியம்.

    i) "இருள் திணிந்தன்ன ஈர்ந்தண் கொழு நிழல்"
    (குறுந்தொகை: 123)


    இருள் திணிக்கப்பட்டது போல் தோற்றமும், குளிர்ச்சியான
    தன்மையும் அமைந்து இருக்கும் நிழலைக் "கொழு நிழல்" என்று
    சுட்டியுள்ளனர்.

    (ii) புள்ளி புள்ளியாகக் காட்சியளிக்கும் நிழல் "புள்ளி
    நிழல்"
    (அகநானூறு:379)


    (iii) வலை பின்னப்பட்டிருப்பதைப்போல் மெல்லியதாக
    அமைந்திருக்கும் நிழல் "வலை வலந்தன்ன மென்னிழல்"
    (பொருநராற்றுப்படை : 50).


    (iv) கோடு கோடாக இருக்கும் நிழல்"வரி நிழல்"
    (சிறுபாணாற்றுப்படை : 12).

    மர நிழல்களில் தங்கியும் மகிழ்ச்சியாகப் பொழுதுபோக்கியும்,
    விழா எடுத்தும் நிறைவாக வாழ்ந்த தமிழர், இயற்கை நிகழ்வுகளில்
    முழுமையாகத் துய்த்து ஒன்றிய வாழ்க்கை முறையையும்
    பண்பாட்டையும் அல்லவா     இந்த அடை மொழிகள்
    காட்டுகின்றன!.

  • 2.2.2 பழமொழியும் பண்பாடும்

    அன்றாட வாழ்விலும், பலரது வாய்மொழியிலும் இடம் பெற்று
    உயிர்ப்புடன் விளங்குவது பழமொழி. ஒரு நாட்டின் உண்மையான
    வாழ்க்கைநெறி, நாகரிகம், பழக்க வழக்கங்கள், நம்பிக்கைகள்,
    சிந்தனை வளம், ஆகிய பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்துவது
    பழமொழி (proverb).

    • பழமொழி

    "பழம்" என்றால் பழமை என்ற பொருள் உண்டு. அதைப்
    பழைய என்றும் குறிப்பிடுவர். பழமை வாய்ந்த பொழியைப்
    பழமொழி (பழம் + மொழி) என்பர். இதை முதுமொழி என்றும்
    அழைப்பர். முதுமை என்றாலும் பழமையைச் சுட்டும்.

    பழமொழி என்றால் என்ன என்பதற்குத் தொல்காப்பியர்
    இலக்கணம் வகுத்துள்ளார். தாம் நினைத்த கருத்தைப் பிறருக்கு
    எளிமையாகப் புரியும்படி, நுண்மையாகவும், தெளிவாகவும்,
    இனிமையாகவும், சுருக்கமாகச் சொல்வது முதுமொழி (பழமொழி)
    என்று குறிப்பிடுகிறார் தொல்காப்பியர்.

    நுண்மையும் சுருக்கமும் ஒளியும் உடைமையும்
    மென்மையும் என்றிவை விளங்கத்தோன்றிக்
    குறித்த பொருளை முடித்தற்கு வரூஉம்
    ஏது நுதலிய முதுமொழி என்ப”

    (தொல் பொருள்:478)

    c03110ad.gif (1294 bytes)

    (நுண்மை = நுட்பம், வரூஉம் = வரும், ஏது = காரணம்,
    நுதலிய
    = சொல்லிய)

    தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே, தமிழ் மக்களிடம்
    பழமொழிகள் வழங்கப்பட்டு வந்துள்ளன என்பது இதனால்
    புலனாகும்.

    • பழமொழியின் பயன்

    தம் வாழ்வில் பழமொழியைக் கேட்டிராத மக்கள் இல்லை
    எனலாம். பிறர் சொல்ல நாம் கேட்கிறோம் என்ற உணர்வு எழாத
    வகையில் நமது உரையாடலில் (conversation) முழுமையாகக்
    கலந்து நிற்கும் வலிமை உடையது பழமொழி. இளையவர்,
    முதியவர் என்ற வேறுபாடு இல்லாமல், அனைவரையும் சமுதாய
    விழுமியங்களுக்கு உட்படுத்தும் தன்மை உடையது பழமொழி.

    ஒரு செயலைச் செய்யும் வகை அறியாது திகைத்து நிற்கும்
    போது, செய்ய வேண்டியதைத் சுட்டிக்காட்டி அறிவுரை
    கூறுவதுபோல் அமைந்திருப்பது பழமொழி. துன்பம் மிகுந்த
    சூழலில் மன அமைதி நல்குவது பழமொழி. பாமரர்க்கு வாழ்வியல்
    வழிகாட்டியாகத் திகழ்வது பழமொழி.

    காலந்தோறும் அழியாமல் வழங்கப்படும் தமிழ்ப் பழமொழிகள்
    முன்னோர்களின்     பட்டறிவையும்,     அறிவுரைகளையும்,
    எச்சரிக்கைகளையும் தாங்கிவரும் பண்பாட்டுக் கருவூலங்களாகவும்
    காட்சியளிக்கின்றன.

    • முயற்சியின் சிறப்பு

    உலகிலுள்ள பல சாதனைகளுக்கு அடிப்படைக் காரணம்
    முயற்சியே. மனிதரின் விடா முயற்சியின் காரணமாகவே
    அறிவியல் கண்டுபிடிப்புகள் பல நிகழ்ந்துள்ளன. நிகழ்ந்து
    கொண்டிருக்கின்றன. தனி மனித முன்னேற்றத்திற்கும், சமுதாய
    முன்னேற்றத்திற்கும், நாட்டு முன்னேற்றத்திற்கும் அடிப்படையாக
    அமைவது முயற்சி. இந்த உண்மையை உணர்ந்த தமிழர்கள் தமது
    பட்டறிவைப் (Experience) பழமொழியாக வழங்கினர்.

    ‘முயற்சி திருவினையாக்கும்’

    (திரு = செல்வம்)

    என்னும் பழமொழி முயற்சியின் முக்கியத்துவத்தையும் அதனால்
    பெறும் பலனையும் சுட்டிக்காட்டுகிறது.

    ஒருவன் முயற்சி செய்வானானால் அவனுக்கு அவனது
    முயற்சிக்கு ஏற்றவகையில் பலன் கிடைக்கும். அதாவது
    செல்வத்தை வழங்கும். தமிழில் "திரு" என்பதற்குப்
    பலபொருள்கள் உண்டு. செல்வம், அழகு, பெருமை, உயர்வு,
    அறிவு; அனைத்தையும் அது குறிக்கும். முயற்சியினால் ஏற்படும்
    அறிவியல் சாதனைகளால், பெருமையும் புகழும் வரும். சிலருக்குச்
    செல்வம் கிடைக்கும். சிலருக்குப் பணி உயர்வு, பொருளாதார
    மேம்பாடு கிட்டும். முயற்சித்து மேலும் மேலும் கற்கக் கற்க அறிவு
    பெருகும். எனவே முயற்சித்தால் கிட்டாதது எதுவும் இல்லை
    என்பதே இப்பழமொழியின் பொருள்.

    தம் முயற்சியில் நம்பிக்கை கொண்ட, முயற்சியினால்
    கிடைக்கும் பயனை உணர்ந்த ஒரு பண்பாட்டுப் பெருமை
    உடையவர்கள் தமிழர்கள் என்பதை இத்தகைய பழமொழிகள்
    புலப்படுத்துகின்றன.

    • ஐந்தும் ஐம்பதும்

    ஒருவனை இளமைப் பருவத்தில் எவ்வாறு வளர்க்கிறோமோ,
    பழக்குகிறோமோ, பக்குவப்படுத்துகிறோமோ, அதற்கேற்பவே,
    அவனது வருங்கால நடவடிக்கைகள், பண்பு நலன்கள் ஆகியவை
    அமையும். இந்த வளர்ப்புமுறை எப்பொழுது தொடங்கும்?
    அறியாப்பருவத்திலிருந்து அறியும் அல்லது பிறவற்றைப் பார்த்துத்
    தெரிந்து கொள்ளும் நிலையைப் பெறும் பொழுது தொடங்கும்.
    இது பொதுவாக ஐந்து வயதில் தொடங்கும். அதாவது இந்தப்
    பருவம்தான் ஒரு குழந்தையை உருவாக்குவதற்குரிய தொடக்க
    நிலை என்பர். இந்தப் பருவத்தில் கொடுக்கும் பயிற்சி, அறிவுரை,
    கல்வி போன்றவை இறுதிக்காலம் வரையிலும் நிலைத்து நிற்கும்.
    இந்த உண்மையை உணர்ந்த தமிழ் மக்கள், இவ்வுண்மை
    வருங்காலச் சமுதாயத்திற்கும் பயன்படும் என்ற வகையில்
    பழமொழியாக வழங்கியுள்ளனர்.

    "ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?" என்பதுதான்
    அந்தப் பழமொழி. ஐந்து வயதில் அல்லது அந்தப் பருவ
    நிலையில் பக்குவப்படாதது பிறகு ஐம்பது வயது ஆனாலும்
    பக்குவம் அடையாது என்ற செய்தியையே அந்தப் பழமொழி
    வழங்குகிறது.

    இதில் வளையாதது என்ற சொல்லை மிகவும் சிறப்பாகப்
    பயன்படுத்தியுள்ளனர். மூங்கில் அல்லது பிரம்பு போன்றவற்றின்
    கொம்புகளை வில்லாகவும், வளையமாகவும் வளைப்பர். அதை
    எப்போழுது வளைப்பார்கள்? அது முதிர்ச்சியடைந்த பிறகா?
    இல்லை. அது இளமையாக இருக்கும்போது ஒவ்வொரு நாளும்
    கொஞ்சம் கொஞ்சமாக வளைத்து, பிறகு வில்லாகவோ, வட்ட
    வடிவமாகவோ ஆக்கிவிடுவர். அது பிறகு கடைசி வரையிலும்
    வளைத்த அதே வடிவத்தில் இருக்கும். அதைப்போலவே மிகவும்
    இளமைப்பருவத்தில்     பக்குவப்படுத்தப்பட்ட     ஒருவன்,
    பிற்காலத்திலும் பக்குவப்பட்டவனாக இருப்பான். இளமையில்
    பக்குவப்படுத்தப்படாவிட்டால், பின்னர் ஒன்று செய்ய முடியாது
    என்பதே இதன் பொருள்.

    இது போன்ற பழமொழிகள் பழந்தமிழர் நம்பிக்கைகளையும்
    அவற்றின் அடிப்படையிலான     பண்பாட்டுக் கூறுகளையும்
    வெளிப்படுத்துகின்றன.

    2.2.3 விடுகதையும் (Riddles) பண்பாடும்

    பழமொழியைப் போல, பாமரர்களிடம் வாய்மொழியாக
    வழங்கி வரும் இன்னொரு பண்பாட்டுக் கூறு விடுகதை. இது
    இன்றைய நொடி வினா (Quiz) முறைக்கு முன்னோடி எனலாம்.
    இதுவும் எந்த மொழியில் வழங்கப்படுகிறதோ அந்த மொழி
    பேசுவோரின் மதி நுட்பத்தையும், புலமையையும் ஆற்றலையும்
    வெளிப்படுத்துவனவாக உள்ளன. இன்று வரையிலும் இதைக்
    காப்பாற்றி வருபவர்கள் பாமரர்களே.

    விடுகதை என்பது 'அது என்ன?' 'அது யார்?' என்பது
    போன்ற கேள்விகளுடன் அமைந்திருக்கும். விடையைத் தானே
    ஊகித்துத் தெரிந்து கொள்ளும் வகையில் உள்ளடக்கம்
    அமைந்திருக்கும். இதுவே விடுகதை. வினாவுக்கு உரிய விடை
    மூலம் விடுவிக்கப்பட வேண்டிய கற்பனைக் கதை என்பதினால்
    விடுகதை என அழைக்கப்பட்டது என்பர்.

    இது குறுகிய வடிவ அமைப்பைக் கொண்டது. மிக
    எளிமையாக அமைந்திருக்கும்.

    முதலில் பாட்டாக இருந்தது. பின்னர் உரைநடையிலும்
    அமைந்துள்ளது.

    • விடுகதையும் சொற்புதிரும் (Puzzle)

    சொற்களுக்குள் புதிர் அமைத்துச் சொல்லும் விடுகதைகள்
    மக்களிடம் மிகவும் செல்வாக்குப் பெற்றவை. பெரும்பாலும்
    நகைச்சுவை மிகுந்திருக்கும் அவை மக்களைச் சிந்திக்க
    வைப்பதோடு, விடை கண்டுபிடித்த பின் வியப்பும் மகிழ்ச்சியும்
    ஊட்டுவதாக அமைந்திருக்கும். விடை தெரிந்த பின் மீண்டும்
    மீண்டும் அந்த விடுகதையை நினைவுபடுத்தும் ஆர்வத்தை
    ஊட்டும்.

    கீழ்க்குறிப்பிடும் விடுகதை அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.

    கால் இல்லாத கள்வன்
    கால் உள்ளவனைப் பிடித்தான்
    தலையில்லாதவன் அதைப் பார்த்துக்
    கலகலவென்று சிரித்தான் - அவர்கள் யார்?

    இது படிப்பதற்குச் சுவையாக உள்ளது. இதில் நகைச்சுவைத்
    தன்மையும் அமைந்துள்ளது.

    கால் இல்லாமல் நடக்க இயலாதவன் எப்படிக் கால்
    உள்ளவனைப் பிடிக்க முடியும்? தலையில்லாதவனுக்கு முகமும்
    கிடையாதே, அவன் எப்படி முகமில்லாமல் சிரிக்க முடியும்?
    இவ்வாறு விடுகதையைக் கற்போர் பல வினாக்களை வினவும்
    வாய்ப்பை இந்த விடுகதை ஏற்படுத்துகிறது.

    பாம்பு தவளையை வாயால் கவ்வியது இதைப்பார்த்து நண்டு
    சிரித்தது. இதுதான் இவ்விடுகதைக்குரிய விடை.

    (பாம்புக்கு கால் கிடையாது. நண்டுக்குத் தலை கிடையாது)

    இந்த விடுகதையை உற்று போக்கினால். உங்களுக்கு மேலும்
    ஒரு கருத்துப்புலப்படும். பாம்பைக் 'கள்வன்' என்றும்
    தவளையைக் 'கால் உள்ளவன்' என்றும், நண்டைச் 'சிரித்தான்'
    என்றும் உயர்திணையில் கூறும் நயத்தை அறிந்து கொள்ள
    இயலும். உயிரினங்களில் மனிதனைத் தவிர பிற உயிரினங்கள்
    எதுவும் சிரிப்பதில்லை. ஆனால் இந்த விடுகதையில், நண்டு
    சிரிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    இத்தகைய விடுகதைகள் கேட்போரைச்
    சிந்திக்க வைக்கின்றன; விடையைக்
    கண்டு பிடிப்பதற்கு முன் ஒருவித
    ஆர்வநிலையை     (suspense),
    ஏற்படுத்துகின்றன; விடை தெரிந்த பின்
    மகிழ்ச்சியையும், ஒரு சாதனை புரிந்த

    நிறைவையும் ஏற்படுத்துகின்றன. இத்தகைய விடுகதையை
    உருவாக்குவது எளிதான செயல் அல்ல. அறிவாற்றலும், கற்பனைத்
    திறனும், இயற்கைப் பொருள்களைக் கூர்ந்து கவனிக்கும்
    மனநிலையும் இருக்க வேண்டும். எனவே தமிழில் வழங்கும்
    விடுகதைகள் பண்பட்ட ஒரு சமுதாயத்தின் வெளிப்பாடுகளாக
    அமைந்துள்ளன.

    தன் மதிப்பீடு : வினாக்கள் - I

    1. மொழிக்குப் பாவாணர் கூறும் விளக்கம் யாது?

    2. பேச்சு மொழிக்கும் எழுத்து மொழிக்கும் உள்ள வேறுபாடுகள் எவற்றிற்கு உவமையாகக் கூறப்படுகின்றன?

    3. இலையின் பல பருவங்களைச் சுட்டும் சொற்களைக் குறிப்பிடுக

    4. பழமொழி எத்தகைய பண்பாட்டுக் கூறுகளை வெளிப்படுத்தும்?

    5. விடுகதை என்றால் என்ன?