1.2 சிலப்பதிகாரம்

English Audio) E


அலை கொழிக்கும் பூம்புகார்க் கடலைக் காணுங்கள்! அன்றைய
பூம்புகார் கடலால் கொள்ளப்பட்டு விட்டது. அதன் நினைவாகத்
தான் கரையில் இன்று நினைவுச் சின்னங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
கண்ணகிக்கு எழுப்பப்பட்டுள்ள கோட்டம் காணுங்கள்! 'ஒரு
முலை இழந்த திருமாவுண்ணி' என்று நற்றிணை இவள் கதையைக்
குறிக்கின்றது.


சேரன் செங்குட்டுவன் தன் மனைவி வேண்மாளோடு மலைவளம்
காணச் சென்றான். உடன் கூலவாணிகன் சீத்தலைச் சாத்தனாரும்
சென்றார்.

அப்போது குன்றக்குறவர்கள் செங்குட்டுவனைக் கண்டு மலையில்
தாங்கள் கண்ட காட்சியைக் கூறினர். "காட்டில் வேங்கை
மரத்தின் கீழே ஒரு பெண் தன் மார்பகத்தை இழந்த நிலையில்
துயரம் மிக வந்து நின்றாள். வானவர்கள் போற்றத் தன்
கணவனோடு அவள் வானகம் அடைந்தாள்" என்று குன்றக்குறவர்
கூற அங்கிருந்த சீத்தலைச் சாத்தனார் கண்ணகி பற்றிய
கதையைச் செங்குட்டுவனிடம் கூறினார். செங்குட்டுவன் மனைவி
'நம் நாடடைந்த இப்பத்தினிக் கடவுளை வழிபடல் வேண்டும்'
என்றாள். இமயத்திலிருந்து கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு
உருச்சமைத்து வழிபாடு செய்வதெனச் செங்குட்டுவன் முடிவு
செய்தான்.

செங்குட்டுவன் வடநாட்டின்மீது படையெடுத்துச்
சென்று, கண்ணகிக்குக் கல் கொண்டு வந்தான்.
தமிழ் மன்னரின் வீரத்தை இகழ்ந்துரைத்த கனக
விசயர் அக்கல்லைச் சுமந்து வந்தனர். வஞ்சி மாநகரில் பத்தினிக் கோட்டம் சமைத்துச்
செங்குட்டுவன் விழாச் செய்தான். விழாவிற்கு
இளங்கோவடிகளும் சென்றார். அப்போது
கண்ணகி தேவந்தி என்னும் பார்ப்பனத்
தோழிமீது தோன்றினாள். கண்ணகியின் ஆவி
தேவந்தியை ஆட்கொண்டது. அந்த நிலையில்

Elangoadigal

இளங்கோவடிகள்

கண்ணகி இளங்கோவின் வரலாற்றைக் கூறினாள். உள்ளம்
நெகிழ்ந்த இளங்கோ கண்ணகியின் வரலாற்றைச் சிலப்பதிகாரமாக
வடித்தார்.

1.2.1 சிலம்பின் செய்தி

சிலப்பதிகாரத்தின் கதை     உங்களுக்குத்
தெரிந்திருக்கும். என்றாலும் சுருக்கமாகக்
கேட்பது நினைவுபடுத்திக் கொள்ள உதவும்.
பதினாறு வயதுடைய     கோவலனுக்கும்
பன்னிரண்டு வயதுடைய கண்ணகிக்கும் திருமணம் நிகழ்கின்றது. மணமக்கள் தனி வீட்டில்     குடும்பம்     நடத்துகின்றனர்.

Kovalan Kannaki marriage

சிலப்பதிகாரம்
காண

Mathavi

கோவலன் கலைகளின் காதலன்; ஆடல் பாடலில்
மிகவும் விருப்பம் கொண்டவன்; யாழ் இசைப்பதில்
வல்லவன். பூம்புகாரில் ஆடல் அரசியாகத் திகழும்
அழகுப் பாவை மாதவியின் ஆடல் நிகழ்ச்சியைக்
கண்டு கோவலன் மனம் மயங்குகின்றான்.

மாதவியின் வீட்டு வேலைக்காரி கடைத் தெருவில் இந்த மாலையை விலை கொடுத்து வாங்குபவர்
மாதவியை அடையலாம்' என     விலை
கூறுகின்றாள். கோவலன் அந்த மாலையை

Kovalan-Mathavi

வாங்கிக் கொண்டு மாதவியின் வீட்டிற்குச் சென்று
அவளுடன் வாழ்கின்றான். கோவலன் செல்வம் கரைகின்றது.
மாதவியோடு மனம் வேறுபடுகின்றான். மாதவியைப் பிரிந்து
கண்ணகியை வந்தடைகின்றான். இழந்த பொருளை மறுபடியும்
Kovalan-Kannaki-Goundiadigal-Madurai

ஈட்ட நினைக்கிறான்.     கண்ணகி தன் காற்சிலம்புகளைக் கழற்றிக் கொடுக்கிறாள்.
கோவலன் இரவில் கண்ணகியை அழைத்துக்
கொண்டு இழந்த     பொருளை ஈட்டும்

கருத்தோடு மதுரை செல்கிறான். மாதரி என்ற ஆயர்குலப்
பெண்ணிடம் கண்ணகியை அடைக்கலமாக்கிச் சிலம்பை
விற்கக் கோவலன் நகருக்குச் செல்கிறான். அங்கு அரண்மனைப்
பொற்கொல்லனிடம் சிலம்பைக் காட்டுகிறான். அப்பொற் கொல்லன் அரசியின் சிலம்பைத் திருடியவன். அக்குற்றத்தை
மறைக்க இதுதான் சமயம் என அவன் நினைக்கிறான்.

பொற்கொல்லன் அரண்மனைக்குப் போகிறான்.
அப்போது அரசவையில் ஆடல் நிகழ்ச்சி நடந்து
கொண்டு இருக்கிறது. ஆடல் மகளிர் கோலத்தில்
அரசன் தன்னை மறந்தான் என்று கருதி அரசி
மனம் வேறுபட்டு அந்தப்புரம் செல்கிறாள்.

Kovalan
Kovalan Murder

அரசியைத் தேற்றுவதற்கு அரசன் அந்தப்புரம்
செல்லும் வழியில் பொற்கொல்லன் அரசனைக்
காண்கிறான். சிலம்பைத் திருடிய குற்றத்தைக்
கோவலன் மீது சுமத்துகிறான். அரசன்
ஆணையால்     கோவலன்     கொலை
செய்யப்படுகிறான். இச்செய்தி கேட்ட கண்ணகி

குமுறி எழுந்து பாண்டியன் அவைக்குச் சென்று
வழக்கு உரைக்கிறாள். முடிவில் உண்மையுணர்ந்த
பாண்டியன் அரியணையிலிருந்து கீழே வீழ்ந்து உயிர் விடுகிறான். அரசியும் அவனைத் தொடர்ந்து

Kannaki Vazhakku

உயிர் பிரிகிறாள். கண்ணகி மதுரையைத் தீக்கு இரையாக்கச்
செய்கிறாள். பின்பு சேர நாடடைந்து குன்றின் மேல் வேங்கை
மர நிழலில் நிற்கிறாள். குன்றக் குறவர்களிடம் தான் உற்ற

துன்பம் பற்றிக் கூறுகிறாள். பின்பு வானுலகோர் அவள்
கணவனுடன் வந்து அவளை அழைத்துச் செல்கின்றனர்.
கண்ணகியின் இந்த வரலாறு செங்குட்டுவனிடம் கூறப்படுகிறது.
செங்குட்டுவன் இமயத்தில் கல்லெடுத்துக் கங்கையில் நீராட்டி
வஞ்சி நகரில் கண்ணகிக்குக் கோயில் கட்டுகிறான். இதுதான்
சிலம்பின் கதை.

சிலப்பதிகாரம் உணர்த்தும் மூன்று நீதிகள் எவை எனத் தெரியுமா அவை :

  • அரசியலில் பிழை செய்தவர்களுக்கு அறமே யமன்.

  • பெருமை மிக்க பத்தினியைப் பெரியோர் தொழுவார்.

  • ஊழ்வினை தொடர்ந்து வந்து பற்றியே தீரும்
    என்பன ஆகும். இவற்றை உணர்த்தவே சிலப்பதிகாரம் இயற்றப்பட்டது.

1.2.2 கலை மணம் கமழும் சிலம்பு

சிலப்பதிகாரம் ஓர் இசைக் கருவூலம் ; ஆடல் கலைக் களஞ்சியம்.
அதன் கதையில் ஒரு முக்கிய பாத்திரம் மாதவி; ஆடல், பாடல்,
அழகு மூன்றிலும் சிறந்தவள். அவளது அரங்கேற்றம் அரங்கேற்று
காதை என்ற பகுதியில் விவரிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில்
ஆடலாசிரியன், பாடல் ஆசிரியன், மத்தளம் கொட்டுவோன், யாழ்
இசைப்பவன், ஆடும் பெண் ஆகியோர்க்கு உரிய தகுதிகள்
எல்லாம் கூறப்பட்டுள்ளது. 1800 ஆண்டுகளுக்கு முன்பே ஓர்
ஆடலரங்கத்தின் நீளம், அகலம், உயரம் பற்றிக் கூறும் கலை
நூல் இதுவே.

அழகு மிக்க பெண்களுக்கு ஐந்தாவது வயது தொடங்கி
ஏழாண்டுகள் ஆடல் பாடல் பயிற்றுவிப்பர். பயின்று முடித்தபின்
மன்னர் காண அரங்கேற்றம் நிகழும். இவ்வகையில் பயின்று
அரங்கேறிய மாதவி ஆடும்     பதினொரு ஆடல்கள்
சிலப்பதிகாரத்தில் கூறப்படுகின்றன.

1.கொடுகொட்டி

இறைவன் கை கொட்டி ஆடும்
ஆடல்

2.பாண்டரங்கம்

இறைவன் வெண்ணீறு அணிந்து வெளுத்த நிறத்துடன் ஆடும்
ஆடல்

3. அல்லியம்

திருமால் கம்சனை வதைக்க ஆடிய ஆடல்

4. மல்

திருமால் மல்லனை வெல்ல ஆடிய மல்லாடல்

5. துடி

முருகன் சூரனைக் கொல்லக் கடல் நடுவில் ஆடிய துடிக்கூத்து

6. குடை

அரக்கரை வெல்ல முருகன்
ஆடிய குடைக்கூத்து

7. குடம்

திருமால் அநிருத்தனை விடுவிக்க ஆடிய குடக்கூத்து

8. பேடு

காமன் பெண்மைக் கோலத்தோடு ஆடிய பேடியாடல்

9. மரக்கால்

கொற்றவை மரக்கால் கொண்டு
ஆடிய ஆடல்

10. பாவை

திருமகள் கொல்லிப் பாவையாய் ஆடிய ஆடல்

11. கடையம்

இந்திராணி ஆடிய கடைசிக் கூத்து

பதினொரு ஆடல்வகைகளும் அவற்றின் விளக்கமும்.

என்பன அப்பதினோரு ஆடல்கள். புராணக் கருத்துகள்
இவ்வாடல்களில் கலந்து இருந்தன என்பதை ஆடல்வகையின்
விளக்கங்கள் காட்டுகின்றன. பாடுவோர் ஒவ்வொரு ஆடலுக்கும்
ஏற்பப் பண் கூட்டுவர். பண்கள் நூற்று மூன்று என்பர்
அடியார்க்கு நல்லார். பழந்தமிழகத்தில் ஒவ்வொரு நிலத்துக்கென
ஒரு யாழ்வகையும் ஒரு பண்ணுமிருந்தன. இவை காலப்போக்கில்
பெருகி வளர்ந்தன. யாழ் என்பது பண்டைய இசைக்கருவி.
பேரியாழ், மகரயாழ், சகோடயாழ், செங்கோட்டியாழ் எனப்
பிற்காலத்தே இதனை நால்வகையாக்கினர்..

Makarayazh

மகரயாழ்

Sakodayazh

சகோடயாழ்

periyazh

பேரியாழ்

1.2.3 சிலம்பு : ஒரு பண்பாட்டுக் கருவூலம்

பெண் வழிபாடு :சிலப்பதிகாரம் தமிழ்ப் பண்பாட்டின் கருவூலம்
என்றேகூறலாம். அது காட்டும்     பண்பாட்டில் மிகவும்
குறிப்பிடத்தக்கது பத்தினி வழிபாடாகும். சங்க காலத்தில் இறந்த
வீரனுக்குக் கல்லெடுத்து     வழிபடுவதற்குக் கூறப்பட்ட
செயல்களெல்லாம் சிலம்பில் கண்ணகிக்குக் கூறப்படுகின்றன.

கல்லைக் காணுதல், அதனைத் தேர்ந்து கொள்ளுதல், நீரில்
ஆட்டுதல், கோட்டத்தில் நிலை நிறுத்துதல், வாழ்த்துதல் ஆகியன
வீரர்க்கே என்றிருந்தன. இவற்றைக் கண்ணகிக்குரியனவாக
ஆக்கிப்     பத்தினி     வழிபாட்டை     அக்காலத்தவர்
போற்றியிருக்கின்றனர். பத்தினி மழையைத்தரக் கூடியவள் என்ற
கருத்து மேலும் வளர்ச்சி பெற்ற நிலையில் கடவுளாக
உயர்த்தப்பட்டதைக் காணுகிறோம்.

பத்தினிக் கோட்பாடு: இளங்கோவடிகள் சமயம் பற்றிய
கருத்துகளைக் கூறியிருப்பினும் பத்தினிக் கோட்பாடு என்னும்
பெண்மையின் உயர்நெறியையே இக்காப்பியத்தில் சிறப்புறப்
போற்றியுள்ளார். கண்ணகி கணவனைப் பிரிந்து வருந்தும்போது
அவளுடைய பார்ப்பனத் தோழி தேவந்தி "சோமகுண்டம் சூரிய
குண்டம் என்னும் பொய்கைகளில் மூழ்கிக் காமவேளைத்
தொழுதால் கணவனைப் பெறலாம்" என்கிறாள். கண்ணகி அதற்கு
அது, "பெருமை தருவதன்று" என்கிறாள். இதுவே தமிழர்
பண்பாட்டு நெறியென அடிகளால் காட்டப் பெறுகின்றது.

அறம் பிறழ உயிர் பிரியும் அரச மாண்பு : அறநெறி
தவரியதை அறியும் அரசன், அது தன் மானத்துக்கு ஊறு என
உணர்கிறான்; உடனே தன் உயிர் துறந்து அறத்தை
நிலைநிறுத்துகிறான். 'உயிர் நீப்பர் மானம் வரின்' என்ற
பழந்தமிழரின் பண்பாடு இங்குப் போற்றப்படுகிறது.

ததமிழரசரின் உணர்வு ஒருமை : தமிழரசர்கள் மூவரும் தனித்
தனியே தம் பகுதியை ஆண்டிருந்தாலும் அவர்களிடையே
உணர்வு ஒருமை இருந்தது. தமிழரசரைப் பழித்தமை கேட்டு நான்
அமைதியாக இருக்க இயலாது என ஆர்த்தெழுகிறான்
செங்குட்டுவன். தன் உயிரை விட்டு நீதி காத்த நெடுஞ்
செழியனுக்காகச்     செங்குட்டுவன்     பரிவு கொள்கிறான்.
அரசர்களிடம் இத்தகைய பண்பாடு அக்காலத்தில் நிலவியது.

அறத்தின் வலிமை: சிலப்பதிகாரம் அறம் வலிமை மிக்கது
என்று காட்டும் நூல். கோவலன் ஏன் கொலை செய்யப்பட்டான்?
அவன் போன பிறவியில் ஒருவன் கொலை செய்யப்படக்
காரணமாக இருந்தான். அதனால் இந்தப் பிறவியில் கோவலன்
கொலை செய்யப்பட்டான்.     கோவலனை     ஆராயாமல்
கொன்றதனால் அரசன் உயிரைவிட நேர்ந்தது. அதிகாரம் மிக்க
அரசனையே வீழும்படியாகச் செய்தது எது? அதுதான் அறம்.
அறத்திலிருந்து தவறியவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள்
தப்பிக்கமுடியாது என்று காட்டுகிறது சிலப்பதிகாரம்.

அறத்தின் சிறப்பைச் சிலப்பதிகாரம் உரைப்பதை இன்னொரு
நிகழ்ச்சியாலும் அறியுங்கள்! தேவன் ஒருவன், அழகும் ஒளியும்
உடையவன்; ஆயினும் கருங்குரங்கின் கையை உடையவனாக
இருந்தான். இவ்வளவு அழகுடைய இவனுக்குக் குரங்குக்கை ஏன்
வந்தது என்று பலரும் கேட்டனர். ஒருவன் அதற்கு விடை
கூறினான். சாயலன் என்ற வணிகனுடைய மனைவி துறவிகள்
பலருக்கு நாள்தோறும் உணவிடும் வழக்கம் மேற்கொண்டு
இருந்தாள். அவ்வாறு உணவிடும் போது ஒரு கருங்குரங்குக்கும்
உணவிட்டுக் காப்பாற்றினாள். அக்குரங்கு இறந்த பின்னர் அதன்
நினைவாகத் தானம் செய்தாள் அதனால் அக்குரங்கு காசி
அரசனுக்கு மகனாகப் பிறந்தது. அவ்வாறு தோன்றிய இளவரசன்
பின் பல நல்ல அறங்களைச் செய்து தேவகுமாரன் ஆயினான்.
தனக்காக ஒருத்தி தானம் செய்ததால் குரங்குப் பிறவி நீங்கிற்று
என்பதைக் காட்ட இத்தேவகுமாரன் குரங்குக் கையைக்
கொண்டிருக்கிறான். என்று ஒரு கதை சொல்லப்பட்டுள்ளது.
அறத்தின் வலிமையை இப்படிப் பல நிகழ்ச்சிகளால்
எடுத்துரைக்கின்றது சிலப்பதிகாரம்.

ஊழ்வினையில் நம்பிக்கை :ஒரு பிறவியில் செய்த நன்மைகளும்
தீமைகளும் அடுத்த பிறவியில் செய்தவனை வந்து அடைந்தே
தீரும் என்ற கருத்து 'ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும்' என்று
சிலப்பதிகாரத்தால் வற்புறுத்தப்படுகிறது. சிலப்பதிகாரக் கதைப்படி
முற்பிறவியில் கோவலன் செய்த தீவினையால் இப்பிறவியில்
வெட்டுப்பட நேர்ந்தது என அறிகிறோம். இது பாண்டியனின்
தவறு அன்று ; ஊழ்வினையின் முடிவு என்பது சிலம்பு கூறும்
கருத்தாகும். தெய்வமாகிய கண்ணகியும் பாண்டியன் தீதற்றவன்
எனக் கூறக் கேட்கிறான். நெடுங்காலமாகவே இந்தியச் சமயங்கள்
பலவும் ஊழ்வினை என்பதை அழுத்தமாகப் பரப்பி
வந்திருக்கின்றன. கோவலன் பல துன்பங்கள் அடைந்து
வருந்துவதைப் பார்த்த மாடலன் என்பான.

இம்மைச் செய்தன யானறி நல்வினை
உம்மைப் பயன்கொல்

(சிலப், மர்ரே பதிப்பு: 15-91)

Tamil Audio

என்று கூறுகிறான். இதன் பொருள் என்ன எனத் தெரியுமா?
இந்தப்பிறவியில் நீ செய்ததெல்லாம் யானறிந்த வரையில் நல்ல
வினைகளே. ஆனால் இப்போது நீ வருந்துவதற்கு முற்பிறவிச்
செயல்களே காரணம் போலும் என்பதாகும். (இம்மை - இப்பிறவி;
உம்மை - முன்பிறவி).