1.2 திருக்குறள்

முதியோர் சொல், அல்லது காலத்தால் முதுமை பெற்ற சொல்
மூதுரை என்று அழைக்கப்பட்டது. வழி வழியாக வருகின்ற
பழக்கத்தைச் சுருங்கிய வடிவத்தில் தருவது மூதுரை. இதை
விரிவாக்கி ஒரு வரையறைக்கு உட்படுத்திக் கூறுவது அற நூல்
எனலாம். எடுத்துக்காட்டாக வீட்டில் அல்லது சமூகத்தில் உள்ள
பெரியவர்களின் பேச்சைக் கேட்டு, அதன்படி நடக்க வேண்டும்
என்பது நம்மிடையே உள்ள ஒரு பழக்கம். இதைப் “பெரியோர்
சொல் தட்டாதே” என முதுமொழி கூறும், இதே கருத்தை,
‘மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்’ என்பது அற நூல்.

அறநூலில் இவற்றைச் செய்ய வேண்டும், இவற்றைச் செய்யக் கூடாது
என்று வலியுறுத்தும் போக்கு அமைந்திருக்கும். அறநூல்களில்
கருத்திற்கே முதலிடம் கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றை இயற்றிய
புலவர்கள், கற்பனை, அழகியல் (aesthetics) ஆகியவற்றில் கவனம்
செலுத்தியதாகத்
தெரியவில்லை. அவர்கள், வழக்காற்று ஒழுக்க
நெறியை அடிப்படையாகக் கொண்டே, தம் கருத்துகளைக் கூறினர்.
அவற்றில் மனித இனம் முழுமைக்கும் பயன்படக்கூடிய அறக்
கருத்துகள் அருகியே காணப்படுகின்றன. ஆனால் இவற்றிலிருந்து
முற்றிலும் மாறுபட்ட நிலையில் திருக்குறள் காணப்படுகிறது.


1.2.1 திருக்குறள் : ஒரு ‘வாழ்வு நூல்’

‘திருக்குறள் ஒரு வாழ்வு நூல். அற நூல் என்பதற்கும் வாழ்வு நூல்
என்பதற்கும் நிரம்ப வேறுபாடு உண்டு. அற நூல்கள் பல சமயச்
சார்பும் அறநெறியை விதிகளாக வகுத்துக் கூறும் போக்கும் மிக்கன.
ஆனால் வாழ்வு நூல் என்பது வள்ளுவர் புதுமையாகக் கண்டது.
இது அற நூலுடன் ஒற்றுமை உடையது என்பதைத் தவிர
தனக்கெனப் பல தனித் தன்மைகளை உடையது. இங்ஙனம்
திருவள்ளுவர் வாழ்வு நூலாக எழுதுவதற்குத் தமிழ்ப்பண்பாடே
அடித்தளமாகும். தொல்காப்பியத்தில் இதற்கான அடிப்படையைக்
காண்கிறோம்’ என்கிறார் பேராசிரியர் தமிழண்ணல் அவர்கள்.
(திருக்குறள் சிறப்பியல் களஞ்சியம் பக்: 125)

எனவே, வாழ்வு நூலாகக் கருதப்படும் திருக்குறள், ஒரு குறிப்பிட்ட
இனத்தவர், சமயத்தினர், மொழியினர், நாட்டவர் என்ற
எல்லைகளைக் கடந்து மனித குலத்தின் வாழ்வு நூலாகக்
காணப்படுகிறது. இந்த உண்மை திருக்குறளை நடுவு நிலைமையுடன்
கற்போருக்கு நன்கு புரியும்.


1.2.2 பெயர்க்காரணம்

தமிழ் மொழியில் உள்ள மிகச் சுருங்கிய வெண்பா யாப்பிற்குக்
‘குறள் வெண்பா’ என்பது பெயர். இதற்குக் குறுகிய வடிவினை
உடைய வெண்பா என்று பொருள். இத்தகைய பாடல்களால்
இயற்றப்பட்டதால் ‘குறள்’ என்று அழைக்கப்படுகிறது.

‘திரு’ என்பதற்கு உயர்வு, அழகு, சிறப்பு, செல்வம் எனப் பல
பொருள் உண்டு. தமிழில் உள்ள சிறந்த படைப்புகளையும்,
சிறப்புடையோர்களையும், ‘திரு’ எனும் அடைமொழி சேர்த்து
அழைப்பது மரபு. திருவாசகம், திருமந்திரம், திருநாவுக்கரசர்,
திருஞானசம்பந்தர்     முதலியன இதற்குரிய எடுத்துக்காட்டுகள்.
எனவே, சிறப்புக்கருதி, குறுகிய வெண்பாக்களால் ஆகிய குறள்
‘திருக்குறள்’ என அழைக்கப்படுகிறது.


1.2.3 அமைப்பு

இது அறம், பொருள், இன்பம் என்னும் மூன்று உள் பிரிவுகளை
உடையது. அவை, அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால்
என்று அழைக்கப்படுகின்றன.


• அறத்துப்பால்

அறத்தின் பெருமையையும், பயனையும் விளக்குவது அறத்துப்பால்.


• பொருட்பால்

பொருளின் சிறப்பையும், அதைச் சேகரித்து, காத்து, வகுத்து
வழங்கும் முறைகளையும் கூறுவது பொருட்பால். இதில், சமுதாயம்
பற்றிய கருத்துகளும், அரசியல் நெறிமுறைகளும் கூறப்பட்டுள்ளன.


• காமத்துப்பால்

காமத்துப்பாலில் காதலர்களின் அன்பின் வெளிப்பாடும், ஈடுபாடும்,
மனப்போக்கும், விழுமியங்களும் சுவையாக விளக்கப்படுகின்றன.


• அதிகாரங்களும் பாடல்களும்

திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளன.
அதிகாரத்திற்கு 10 பாடல்கள் வீதம் 1330 பாடல்கள் இடம்
பெற்றுள்ளன. ஒவ்வொரு பாடலும், இரண்டு அடிகளை
(வரிகளை) மட்டுமே உடையதாக இருக்கிறது.


• இயல்கள்

பால் வகைகளாக அறம், பொருள், இன்பம் என மூன்று
பால்களாகத் திருக்குறள் பகுக்கப்பட்டிருப்பதாகக் கூறினோம்.
இவை ஒவ்வொன்றும் இயல் என்ற     உட்பிரிவுகளைக்
கொண்டுள்ளன. அவ்வகையில் அறத்துப்பாலில் பாயிர இயல்,
இல்லற இயல், துறவற இயல் என்ற மூன்று உட்பிரிவுகள் உள்ளன.
பொருட்பால், அரசு இயல், அங்க இயல், ஒழிபு இயல் என்ற
பிரிவுகளைக் கொண்டுள்ளது. இன்பத்துப் பாலில், களவு இயல்,
கற்பு இயல் என்ற இரண்டு பிரிவுகள் உள்ளன. இவ்வமைப்பைக்
கீழே உள்ள படத்தின் மூலம் எளிதில் நினைவு கொள்ளலாம்.


திருக்குறள் - நூல் அமைப்பு

நிலைகள்
கூறுகள்
எண்ணிக்கை
பால்
அறம்
பொருள்
இன்பம்
3
இயல்
பாயிரம்
இல்லறம்
துறவறம்
அரசு
அங்கம்
ஒழிபு
களவு
கற்பு
8
அதிகாரம்
4
20
14
25
32
13
7
18
133
குறள்
40
200
140
250
320
130
70
80
1330


1.2.4 தனித்தன்மை


இது சுமார்2000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டது.

மனிதன், மனிதனாக வாழ்வதற்குத் தேவையான வாழ்வியல்
கருத்துகளைக் கூறும் நூல் திருக்குறள். இது மனித
சமுதாயத்தின் வழிகாட்டி. மனிதர் அனைவருக்கும் பொருந்தும்
சமூக நீதிகளை எடுத்துரைக்கிறது. தமிழில் எழுதப்பட்ட
திருக்குறளில் ஒரு செய்யுளில் கூடத் தமிழ்நாடு, தமிழர்,
தமிழ் என்பது பற்றி ஒரு சொல் கூட இடம் பெறவில்லை.
எனவே, திருக்குறளை உலகிலுள்ள எந்த மொழியில் மொழி
பெயர்த்தாலும், அந்த மொழிக்கும், மொழி பேசும் மக்களுக்கும் சொந்தமாகும் பொதுத்தன்மை அதில் அமைந்துள்ளது.
இதனைப்பற்றி,

‘குறள் தமிழ்மறை அன்று; அது தமிழ் தரணிக்குத் தந்த மறை’

என்று அறிஞர், பேராசிரியர் வா.செ. குழந்தைசாமி அவர்கள்
குறிப்பிடுகிறார்கள்.


1.2.5 மொழிபெயர்ப்புகள்


திருக்குறளின்     பொதுத்     தன்மையையும்,     சிறப்புத்
தன்மையையும், அறிந்த இத்தாலி நாட்டுக் கிறித்துவப் பாதிரியார்,
ஜோசப் பெஸ்கி எனும் வீரமாமுனிவர். திருக்குறளை முதன்
முதலில் கி.பி.1730 - ஆம் ஆண்டிலேயே இலத்தீன் மொழியில்
மொழி பெயர்த்தார். அவரைத் தொடர்ந்து பலரும் ஐரோப்பிய
மொழிகளிலும், பிற இந்திய மொழிகளிலும், திருக்குறளை மொழி
பெயர்த்தனர் கிறித்தவர்களின் விவிலியத்திற்கு அடுத்த நிலையில்,
உலகின் பல மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட நீதி நூல் என்ற
பெருமை திருக்குறளுக்கு உண்டு.


திருக்குறள் மொழி பெயர்ப்புகள் (1986 - வரை)


மொழி

எண்ணிக்கை

இந்திய மொழிகள்

(வங்காளம், இந்தி, குஜராத்தி,
கன்னடம், மலையாளம், மராத்தி,
ஒரியா, பஞ்சாபி, இராஜஸ்தானி,
சமஸ்கிருதம், சௌராஸ்டிரா,
தெலுங்கு, உருது)

44

(மலையாளம் = 8

இந்தி = 7)

ஆசிய மொழிகள்

அரபுமொழி, பர்மியமொழி,
சீனமொழி, சப்பானிய மொழி,
மலாய் மொழி, சிங்கள மொழி
பிஜியன் மொழி

9

ஐரோப்பிய மொழிகள்

அர்மேனிய     மொழி,
செக்கோஸ்லோ வாக்கியமொழி,
டச்சுமொழி,     ஆங்கிலம்,
பின்னிஸ் மொழி, பிரஞ்சு
மொழி, செர்மன் மொழி,
இலத்தீன் மொழி, போலந்து
மொழி உருசியன் மொழி,
ஸ்வீடிஸ் மொழி, இத்தாலியன்
மொழி

64

(ஆங்கிலம் = 38

செர்மன் = 6)


தகவல்:
TRIBUTES AND TRANSLATONS OF TIRUKKURAL
- BY K.D. Thirunavukkarasu, Edn: 1986. (இதன் பின்னர்
மேலும் பல மொழி பெயர்ப்புகள் வெளிவந்துள்ளன)


1.2.6 பெருமைகள்

‘குறள் ஒரு சீர்மை உடையது. தெளிவாக உணர்ந்து அறியத்தக்கது.
ஒருமைப்பாட்டினைக் கொண்டிருந்த ஒரு நாகரிகத்தைச் சித்தரித்துக்
காட்டும் ஓர் ஒருங்கு இணைந்த ஓவியம்’ என்று திருக்குறளை
ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டாக்டர் ஜி.யு.போப் குறிப்பிடுகிறார்.

மேலும் திருக்குறளின் பெருமையை உணர்ந்த பிரெஞ்சு நாட்டு
அறிஞர் ஏரியல் (Ariel). ‘திருக்குறளில் மிக அற்புதமான அம்சமாக
விளங்குவது அதன் ஆசிரியர், அதனைச் சாதி, மக்கள்,
நம்பிக்கைகள் என்று வேற்றுமை பாராட்டாமல், மனித குலம்
முழுவதற்கும்     பொதுமையாகக் கூறியிருப்பதாகும். எனவே
திருக்குறள் மனித இனத்தின் சிந்தனையில் முகிழ்த்த சிறப்பும்
தூய்மையும் வாய்ந்த இலக்கியப் பெட்டகம்’ எனப் பாராட்டுகிறார்.