1.4 திருக்குறளும் பொதுமையும்

எந்த ஒரு குறிப்பிட்ட சமயத்திற்குள்ளேயும் தன்னை உட்படுத்திக்
கொள்ளாதவர் வள்ளுவர். எந்த ஓர் இனத்தின் பிரதிநிதியாகவும்
தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாதவர் வள்ளுவர். எனவே மனித
குலம் முழுமைக்கும், காலம், இடம், சூழல் என்னும் எல்லைகளைக்
கடந்த, பொதுத்தன்மை வாய்ந்த உயர்ந்த சிந்தனைகளையே
வழங்கியுள்ளார்.

இறைமைக் கருத்துகளைப் பற்றிச் சொன்னவர். குறிப்பிட்ட எந்தச்
சமயத்தையும் சுட்டவில்லை. கல்வியைப் பற்றிக் குறிப்பிடும்
பொழுதும் எத்தகைய கல்வி என்று எல்லை வகுக்கவில்லை. ‘கற்க’
என்று கூறும் பொழுதும், கற்க வேண்டுவனவற்றைக் கற்க என்று
சொல்கிறாரே தவிர, இதைத்தான் கற்க வேண்டும் என்று
குறிப்பிடவில்லை. நூலைப்பற்றிக் குறிப்பிடும் பொழுதும், இன்ன
இன்ன நூல்களைத்தான் கற்கவேண்டும் என்று வலியுறுத்தவில்லை.
அவ்வாறே, தான் பேசிய மொழியைப் பற்றியும், தான் வாழ்ந்த
நாட்டைப் பற்றியும், கால இடங்களைப் பற்றியும் எவ்விதக்
குறிப்பும் தராத பொதுமைத்தன்மை வாய்ந்தவர் வள்ளுவர்.


1.4.1 ஒழுக்கம்

உலகிலுள்ள அறநூல்கள் எல்லாம் ஒழுக்கம் பற்றிப் பேசுகின்றன.
வள்ளுவரும் ஒழுக்கம் பற்றிப் பேசுகிறார். அதற்கு என ஓர்
அதிகாரமே அமைத்துள்ளார்.

இனத்திற்கு இனம், நாட்டிற்கு நாடு ஒழுக்கத்தைப் பற்றிய
வரையறை வேறுபடுகிறது. ஒவ்வொருவரது, நம்பிக்கைக்கும்,
மரபுக்கும், சூழலுக்கும், வாய்ப்பிற்கும் ஏற்ப ஒழுக்கத்தைப் பற்றிய
கருத்துகள் மாறுபாடு உடையனவாக உள்ளன. இக்கருத்துகளும்
காலந்தோறும் மாறும். வேறுபடும். எனவே, ஒரு குறிப்பிட்ட
வரையறை அமைக்க இயலாது, இந்த நடைமுறையை நன்கு
அறிந்தவர் வள்ளுவர். எனவேதான், தீய ஒழுக்கங்கள் இவை,
நல்ல ஒழுக்கங்கள் இவை என அதில் கூறவில்லை. ஆனால்,
உலகம் எதைச் சிறந்த ஒழுக்கம் என்று ஏற்றுக் கொள்கிறதோ,
அதன் வழி செயல்படுவதுதான் ஒழுக்கம் என்று குறிப்பிடுகிறார்.
அத்தகைய ஒழுக்கம் உடையார் யாராக இருந்தாலும்,
அவர்களுடைய ஒழுக்கத்தால் அவர்கள்சிறப்புப் பெறுவார்கள்.
எனவே, ஒழுக்கத்தை ஒருவன் உயிரைவிட மலோனதாகக் கருதி
அதைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்கிறார் வள்ளுவர்.


ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்


(குறள்:131)


(விழுப்பம் = சிறப்பு, ஓம்பப்படும் = பாதுகாக்கப்படும்)

எல்லோருக்கும் பொதுவான, எல்லோரும், மனத்தாலும்,
செயலாலும், சொல்லாலும் பின்பற்றக் கூடிய நெறிமுறைகளை
ஒழுக்கம் என்று குறிப்பிடுகின்றோம். அரசர், வணிகர், காதலர்
ஆகியோர் தாம் வகிக்கும் பணிக்கு அல்லது நிலைமைக்கு
ஏற்ப சிலநெறி முறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும்
வள்ளுவர் கூறிப்பிடுகிறார். இந்த நெறிமுறைகள் முன்பு
குறிப்பிட்ட ஒழுக்கங்களுக்கு மாறானவை அல்ல. ஆகவே
அவர்களும் கூட எல்லோரும் ஏற்றுக் கொள்ளுகின்ற,
எல்லோருக்கும் பொருந்துகின்ற பொது ஒழுக்கத்தைப் பின்பற்ற
வேண்டும் என்று வள்ளுவர் வலியுறுத்துகின்றார்.

எனவே, ஒழுக்கத்தைப்பற்றி வள்ளுவர் கூறும் கருத்துகள்
எல்லோருக்கும் பொருந்துகின்ற பொதுத்தன்மையுடையது என்பது
புலப்படும்.


1.4.2 வினை செய்பவர்

சிலரால் சில பணியைத்தான் செய்யமுடியும். அவர்களுக்கு வேறு
பணியைக் கொடுத்தால் அவர்களால் அதைச் செய்ய இயலாது.
எனவே, ஒருவருக்கு ஒரு பணியைக் கொடுக்கும்பொழுது
அவரால், அந்தப் பணியைச் செய்ய இயலுமா? என்று நன்கு
ஆராய்ந்து, அதன் பின்னரே அந்தப் பணியை ஒப்படைக்க
வேண்டும். இல்லாவிட்டால், அவரிடம் இருந்து நாம்
எதிர்பார்க்கும் பலன் கிடைக்காததோடு நமக்குப் பெரும்
இழப்பையும் ஏற்படுத்தும். இந்த அறிவுரை உலகம் முழுவதும்
உள்ள அனைவருக்கும் பொருந்தும். இது ஒரு நடைமுறை
உண்மை. வள்ளுவர் இந்தப் பொதுக்கருத்தை,


இதனை இதனால் இவன்முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன்கண் விடல்


(குறள்:517)


(ஆய்ந்து = ஆராய்ந்து, கண் = இடம்)

என்ற குறள் வாயிலாக வெளிப்படுத்துகிறார்.

எந்த ஒரு செயலை மேற்கொண்டாலும், அதற்கு எந்த வகையான
சிந்தனை அல்லது அணுகுமுறை தேவை என்பதனை முதலில்
தீர்மானிக்க வேண்டும். அடுத்த நிலையில், மேற்கொள்ள
வேண்டிய வேலை அல்லது பணி எத்தகையது, அதை
முடிப்பதற்கு எத்தகைய ஆற்றல் அல்லது அனுபவம் வேண்டும்
என்பதைத் தீர்மானிக்க வேண்டும். அந்தத் தீர்மானத்தின்
அடிப்படையில், இந்த, இந்த வகைக் காரணங்களினால், இந்த
வேலையை முடிக்கக் கூடியவர் யார், யார் என்று அறிதல்
வேண்டும். அறிந்த பின்னர் அந்த வேலையை அவரிடம்
ஒப்படைக்க வேண்டும். இது மலோண்மைத் துறையின் (Field of
Management) அறிவியல் பார்வை அல்லது அணுகுமுறை
என்பார்கள். இதைத்தான் வள்ளுவர் இந்தக் குறளில் கூறுகிறார்.

‘இதனை’ என்று அவர் குறிப்பிடுவதில் எந்த வரையறையும்,
குறிப்பிடவில்லை. எந்தப் பணியை அல்லது எந்தச் செயலை
வேண்டுமானாலும் அமைத்துக் கொள்ளலாம். அதைப்போல,
‘இதனால்’ என்ற இடத்தில், எந்த ஓர் உத்தி அல்லது கருவி,
அல்லது பொருளையோ பயன்படுத்திக் கொள்ளலாம். ‘இவன்’
என்ற இடத்தில் எந்த ஒரு பணியாளரையோ, அலுவலரையோ,
வல்லுநரையோ அமர்த்திக் கொள்ளலாம். இது இன்றைக்கு
மட்டுமல்ல. எதிர்காலத்திற்கும் பொருந்தும் என்று குறளின்
இக்கருத்துக்கு விளக்கம் கொடுப்பர் அறிஞர்.

இது வள்ளுவர், ஒரு கருத்தைப் பொதுமைப்படுத்துவதற்குரிய
சிறந்த சான்று.



பயில்முறைப் பயிற்சி - I

மாணவர்களே!

பகுதி 1.4.2-இல் படித்த குறளில் அமைந்துள்ளது
போன்றே கீழ்க்காணும் குறளிலும் பொதுத்தன்மை
அமைந்துள்ளது. குறளின் பொருள் தெளிந்து, அதில்
பொதிந்து இருக்கும் பொதுமைத்தன்மையை
இனங்காணுங்கள்.


தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர்
எச்சத்தால் காணப் படும்


(குறள்:114)