2.3 இறைமையும் வழிபாடும்

‘வள்ளுவர் சமயத்தின் புறத்தோற்றத்தில் தம்மைப் பறிகொடுத்து
விடவில்லை. சமயவாதிகளின் தாக்கம் அவரை மயக்கிவிடவில்லை.
சமயத்திலிருந்து வள்ளுவர் ஒதுங்கவும் இல்லை. வள்ளுவர்
சமயங்களை நன்கு கற்றிருக்கிறார். சமய உண்மைகளை ஊடுருவி
நோக்கியிருக்கிறார். சமய உண்மை வள்ளுவருக்குப் புரிந்திருக்கிறது.
சமய அடிப்படை வள்ளுவருக்குத் தெரிய வந்திருக்கிறது’ என்று
குறிப்பிடுகிறார்தமிழ்ப் பேரறிஞர் பேராசிரியர் ஆ.வேலுப்பிள்ளை.


2.3.1 அடி வணங்குதல்

பணிதல் என்பது எல்லாருக்கும் நல்லது. அதிலும் செல்வர்க்குப்
பணிதல் அமைந்தால் அது எல்லாவற்றையும் விடச் சிறந்தது
என்பது வள்ளுவர் கருத்து. பணிதல் அல்லது அடங்குதல் எல்லா
நிலையிலும் ஒருவனுக்கு நன்மை பயக்கும் என்பதைப் பற்றிக்
கூறுவதற்கு ஓர் அதிகாரமே அமைத்துள்ளார் வள்ளுவர்.
அதிலிருந்து பணிதலுக்கு வள்ளுவர் கொடுத்த சிறப்புப் புலப்படும்.
இறைவழிபாட்டில், அது மிக மிக இன்றியமையாதது என்பதை
உணர்ந்தவர் வள்ளுவர். எனவே, இறைவனிடம் தன்னை
முழுமையாக ஒப்படைக்கும் அடியவன், இறைவனின் தாளை,
அதாவது அடியை வணங்க வேண்டுமென்று வலியுறுத்துகிறார்
வள்ளுவர். இறைவாழ்த்தில், ‘நல்தாள் தொழாஅர் எனின்’ ‘மாண்
அடி சேர்ந்தார்’, ‘வேண்டாமை இலான்அடி’ ‘உவமை இல்லாதான்
தாள்’, ‘ஆழி அந்தணன்தாள்’ ‘எண்குணத்தான் தாள்’ ‘இறைவன்
அடி சேரார்’ என ஏழு குறள்களில் தாளை வணங்க வேண்டும்
என்பதைக் குறிப்பிடுகிறார் வள்ளுவர். இவ்வாறு இறைவனின்
தாளை வணங்க வேண்டும் என்று வலியுறுத்துவதற்குரிய
காரணம் என்ன?

பணிதல் வேறு, அடிபணிதல் வேறு. மரியாதைக்காக அல்லது
மதிப்புக்     கொடுப்பதற்காகப்     பணிந்து செயல்படுவது
பணிதலின்பாற்பட்டது. ஏற்கனவே சிலரின் இயல்பு எப்பொழுதும்
பணிவுடனே     அமைந்திருக்கும். அத்தகையோரை, ‘அவர்
மிகப்பணிவானவர். அவர் இயல்பு அப்படித்தான்’ என்று
குறிப்பிடுவர். ஆனால் அடிபணிதல் என்றால் அது தன்னை
முழுமையாக ஒப்புவித்தலாகும்.

தன்னை முழுமையாக எப்பொழுது ஒப்புவிப்போம்? ஏன்
ஒப்புவிக்க வேண்டும்? ஒருவரை முழுமையாக நம்பும்பொழுது
அவரிடம் நம்மை ஒப்புவிப்போம்.காதல் வயப்படுபவர்கள் முதல்
கடவுளை நம்புபவர் வரையிலும் நம்பிக்கையின் அடிப்படையில்
முழுமையாகத் தம்மை ஒப்புவிப்பார்கள்.


• குகனின் பணிதல்

கம்பராமாயணத்தில், காட்டுக்குச் சென்ற இராமனைக் குகன்
வரவேற்கும் காட்சியைக் கம்பன் சிறப்பாக எடுத்துரைப்பார். தசரத
சக்கரவர்த்தியின் மகன் இராமன் மீது அன்பு கொண்டிருந்தவன்
வேட்டுவனாகிய குகன், அவன் இராமன் காட்டிற்கு வந்ததைக்
கேள்விப்பட்டு இராமனைப் போய்ப் பார்க்கவேண்டும், தான்
அவன்மீது கொண்ட முழுமையான அன்பை வெளிப்படுத்த
வேண்டும் என்று மிகவும் விரும்புகிறான். தான் விரும்பும்
தேனையும் மீனையும கொண்டு இராமனைச் சந்திக்கச் செல்கிறான்.
உள்ளமெல்லாம் அன்பில் நிறைந்த நிலையில் இராமனின்
முன்னால் குகன் நிற்கும் காட்சியைக் கம்பன் மிக அழகாக
எடுத்துரைப்பார்.


    அற்றம் நீத்த மனத்தினன், அன்பினன்
    நல்தவப் பள்ளி வாயிலை நண்ணினான்

(கம்ப. அயோத்திய காண்டம்: 37)


(நண்ணினான் = அடைந்தான்)


     கண்ணனைக் கண்ணின் நோக்கிக் கனிந்தனன்,
                 இருண்டகுஞ்சி
     மண் உறப்பணிந்து, மேனி வளைந்து, வாய்புதைத்து
                 நின்றான்

(கம்ப. அயோத்தியாகாண்டம்: 40)


(மேனி = உடல்,     குஞ்சி = குடுமி, வாய் புதைத்தது =
இருகையாலும் வாயைப் பொத்திக் கொண்டு)

என்று குறிப்பிடுகிறார் கம்பன்.


• உடலும் உள்ளமும்

குகன், தன்னை முழுமையாக இராமனிடம் ஒப்படைக்கிறான்.
அதற்கு அடையாளமாக, இராமனின் முன் அடிபணிந்து
நிற்கிறான். கம்பர் அதனை ‘மண்ணுறப்பணிந்து’ என்று
வருணிக்கிறார்.


• பணிதலின் விளைவுகள்

வள்ளுவரும் இறைவனிடம்     தன்னை     முழுமையாக
ஒப்படைத்தலின் அடையாளமாக, அவனது தாள்களை
அடிபணிந்து வணங்கவேண்டும். அவ்வாறு வணங்கினால்
அதன் வாயிலாக என்ன என்ன நன்மைகள் வரும் என்று
குறிப்பிடுகிறார்.

வள்ளுவர் சமயத் தொடர்பான புறத்தோற்றங்கள், சடங்குகள்,
நேர்த்திக் கடன்கள் ஆகியவற்றிற்கும் மலோக அகத்திற்கு
அதாவது உள்ளத்திற்கு உள்ளப் பக்குவத்திற்குச் சிறப்புக்
கொடுத்துள்ளார். எனவே, தாளை வணங்குதல் என்பது
உடலளவிலே, மண்ணுறப் பணிந்து விழுதல் என்று கொள்ள
இயலாது. மனத்தளவில் முழுமையாக ஏற்றுக் கொண்ட
பின்னரே தாள் பணிய விருப்பம் வரும். எனவே தாள்பணிதல்
எனும்பொழுது இறைவனுக்குத் தன்னை முழுமையாக
ஒப்படைத்தல்     என்ற     பொருளிலேயே வள்ளுவர்
கையாண்டுள்ளார் என்பது புலப்படும்.



பயில்முறைப் பயிற்சி- II

மாணவர்களே,

‘கடவுள் வாழ்த்து’ என்ற அதிகாரத்தின் பத்துக்
குறள்களையும் கூர்ந்து படியுங்கள். ‘தாள் தொழுதல்’,
‘அடிசேர்தல்’ என்ற பொருள்படும்படியான தொடர்கள்
எத்தனை குறள்களில் இடம்பெற்றுள்ளன என்பதைப்
பட்டியிலிடுங்கள்.