3.1
இல்லறம்
|
தமிழில்
‘இல்‘, ‘இல்லம்‘ என்பவை வீட்டைக் குறிக்கும்.
இல்லமாகிய
வீட்டை அன்பாலும், அருளாலும், தொண்டாலும்,
தியாகத்தாலும் ஆளுபவள் இல்லாள் என்று அழைக்கப்பட்டாள்.
|
இல்லாளாகிய மனைவியுடன் (மனை என்றாலும் இடம் அல்லது
வீடு என்று பொருள்) கூடி வாழும் இல் வாழ்க்கையில் பின்பற்றும்
ஒழுக்க நெறியை ‘இல்லறம்‘ என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.
|
3.1.1 இல்வாழ்க்கை பற்றிய
விளக்கம்
|
இல்லத்திலிருந்து,
இல்லாளோடு கூடி வாழும் வாழ்வின் சிறப்பைக்
கூறுவது இல்வாழ்க்கை என்று பொதுவாக இல்வாழ்க்கைக்கு
விளக்கம் கொடுக்கப்படுகிறது. ‘கற்புடையாளோடு இருந்து, இன்பம்
துய்த்துவரும் அற வாழ்க்கையின் இன்றியமையாமையையும்,
சிறப்பையும் எடுத்துக்கூறுவதுதான் இல்வாழ்க்கை’
என்கிறார்
பாவாணர். (திருக்குறள் உரைக் களஞ்சியம் , ப:7)
|
‘இல்வாழ்க்கை என்பது குடும்பத்திற்காக வாழும் வாழ்க்கை
எனவும், உலகுக்காக வாழும் வாழ்க்கை எனவும் இருதிறப்படும்
(வகைப்படும்). முதலது பின்னதின் வளர்ச்சிக்கு வழிகாட்டி‘
|
என திரு.வி.கலியாணசுந்தரனார் குறிப்பிடுகின்றார்.
இல்வாழ்க்கை
இயல்பானது; பெரும்பான்மையானது; உலகம்
நடக்க இன்றியமையாதது; துறந்தார்க்குத் துணையானது.
இல்லறம்,
துறவறம் எனும் இருவகை அறத்தினுள்ளும், பொதுவாக
‘அறன்‘ என்று சொன்னால், அது இல்லறத்தையே சிறப்பித்துக்
கூறும் என்பது வள்ளுவரது கருத்து. எனவே, இல்லறத்திற்கு
விளக்கம் கொடுக்கும் வள்ளுவர்.
|
அறன்
எனப்பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்பது இல்ஆயின் நன்று.
|

(குறள் : 49)
|
|
(இல்ஆயின் = இல்லாவிட்டால்)
என்று
குறிப்பிடுகிறார்.
பிறர்
பழித்துச் சொல்லாத வகையில் அறவழியில்
வாழும்
வாழ்க்கையே இல்வாழ்க்கை எனப்படும் என்பது
வள்ளுவர்
இல்வாழ்க்கைக்குக் கொடுக்கும் விளக்கம் ஆகும். ஒளவையாரும்
‘இல்லறமல்லது நல்லறமன்று‘ என்று குறிப்பிடுகின்றார்.
|
3.1.2 இல்வாழ்க்கையின்
சிறப்பு
|
திருக்குறளில்
இடம்பெற்றுள்ள இல்வாழ்க்கை பற்றிய செய்திகள்
முழுமையும் நோக்கும் பொழுது, இல்வாழ்க்கைக்குத் திருவள்ளுவர்
கொடுத்துள்ள சிறப்பு புலப்படும். ஆணும் பெண்ணும் குடும்பமாக
வாழும் இல்வாழ்க்கை சிறப்புடையதாக அமையுமானால்,
இல்வாழ்க்கையிலேயே இந்த உலகிலும், வீடுபேற்றிலும் கிடைக்கக்
கூடிய எல்லா இன்பங்களும் சிறப்புகளும் கிடைக்கும் என்பது
குறள் தரும் இன்றியமையாத கருத்து.
|
எனவேதான், பிறரையும் நல்ல நெறியில் செயல்படச்
செய்து,
தானும், அறவழியிலேயே இல்வாழ்க்கை வாழ்தல், காட்டிற்குச்
சென்று தவம் செய்வதைவிடவும் வலுவானது என்கிறார் வள்ளுவர்.
இதனை,
|
ஆற்றின்
ஒழுக்கி, அறன் இழுக்கா இல்வாழ்க்கை
நோற்பாரின் நோன்மை உடைத்து.
|

(குறள்:48)
|
|
(ஒழுக்கி = ஒழுகச்செய்து, இழுக்கா = தவறாத,
நோற்பார் = தவம்செய்வார், நோன்மை = வலிமை)
எனும்
குறள் மூலம் வெளிப்படுத்துகிறார்.
குடும்ப
வாழ்க்கையைத் துறந்து வாழ்வதையும், அதன் சிறப்பையும்
வேறொரு தலைப்பில் கூறினாலும்,
இல்வாழ்க்கையே
சிறப்புடையதாக வள்ளுவர் குறிப்பிடுகிறார்.
|