3.2 இல்வாழ்க்கையும் சமயக்கருத்தும்

பொதுவாக சமயவாதிகள், இந்த உலகத்தில் நாம் வாழும்
வாழ்க்கை, நம்மை வீட்டின்பத்திற்குக் கொண்டு செல்வதற்குரிய
ஒரு வழி என்று கூறுவார்கள். வீட்டின்பத்திற்குச் செல்வதற்கு
நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ளுகிற ஓர் இடம்,
இல்வாழ்க்கை. இது நிலையில்லாதது; நீர் மேல் குமிழி போன்றது;
தற்காலிகமானது; பொய்யானது என்பார்கள். எனவேதான், சமயச்
சார்புடைய ஞானிகளும்,


    ‘காயமே இது பொய்யடா
     காற்று அடைத்த பையடா‘

(குதம்பைச்சித்தர் பாடல்: )


(காயம் = உடல் / உலகம்)

என்று தத்துவம் பேசினார்கள்.


• பேரின்ப வாழ்வு

பெரும்பாலான சமயதத்துவவாதிகள், இந்த உலக வாழ்க்கையைப்
பழித்தனர். குறிப்பாக இல்வாழ்க்கை துன்பம் நிறைந்தது, பாவம்
மிகுந்தது, எவ்வளவுதான் சிறப்பாக வாழ்ந்தாலும், சிற்றின்பம்
தான் கிடைக்கும். பேரின்பம் கிடைக்க வேண்டுமானால்
சொர்க்கத்திற்குச் செல்ல வேண்டும். எனவே பேரின்பம்
கிடைக்கக் கூடியச் சொர்க்கத்திற்குச் செல்வதே வாழ்க்கையின்
குறிக்கோள் என்றனர்.


• நரகமும் வீடுபேறும்

நரகத்தின் பயங்கரங்களை விரிவாகச் சொல்லும் சமயவாதிகள்,
வீட்டின்பத்தின் சொகுசுகளையும், வசதிகளையும், வாய்ப்புகளையும்,
நிலையான மகிழ்ச்சியையும், கடவுளை அணுகும் பேற்றினையும்
கூறி பல ஆசைகளை ஏற்படுத்துவார்கள். துன்பமும், பாவமும்,
நிறைந்த இந்த உலகத்திலிருந்து, தப்பித்து, எப்படியாவது,
நிலையான சொர்க்கத்துக்குள் நுழைந்துவிட வேண்டும் என்ற
மனநிலையை நமக்கும் உருவாக்குவார்கள். இவையே, நம்
சமயங்களும், சமயவாதிகளும் நமக்குக் கற்பித்த அறவுரைகள்.

மேற் கூறப்பட்ட சமயவாதிகளின் கருத்துகளுக்கு முற்றிலும்
மாறுபட்டவை வள்ளுவரது சிந்தனைகள். சமயவாதிகள் குறிப்பிடும்
சிறப்புகளெல்லாம் இல்வாழ்க்கையிலேயே பெறலாம் என்கிறார்
வள்ளுவர்.


3.2.1 இன்பம் தரும் இல்வாழ்க்கை

இந்த உலக வாழ்க்கை பொய்யானது அல்ல. துன்பம் நிறைந்ததும்
அல்ல. இது பாவம் மிகுந்ததும் அல்ல. இதை வெறுத்து ஒதுக்க
வேண்டிய தேவை இல்லை. இந்த உலகில் மேற்கொள்ளும்
வாழ்க்கையை, இல்வாழ்க்கையை, ஓர் அறமாகக் கருதி வாழ்பவர்,
இங்கேயே வீட்டின்பத்தின்     பயன்களையும், எல்லாவித
இன்பங்களையும் அடையலாம். இவற்றிற்காக, இல்வாழ்க்கைக்குப்
புறம்பாக வேறு எங்கும் செல்ல வேண்டியதில்லை என்று
கூறுகிறார் வள்ளுவர்.


அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் புறத்தாற்றின்
போஓய்ப் பெறுவது எவன்?


(குறள்:46)


(ஆறு = வழி/நெறி)

- என்பது குறள்.

ஒருவன்     இல்லறவாழ்க்கையை அதற்குரிய அறநெறிப்படி
நடத்துவானாயின், அதற்குப்புறம்பாகிய துறவுநெறியில் போய்
சிறப்பாகப்     பெறும் பயன் எதுவுமில்லை. எனவே,
இல்லறவாழ்க்கையே பேரின்பத்தைத் தரக்கூடியது என்கிறார்
வள்ளுவர்.

மேலும், அன்பும் அறனும் உடைய இல்வாழ்க்கையிலேயே,
தேவையான நல்ல பண்புகளும், வாழ்க்கையின் எல்லாப்
பயன்களும் கிட்டும் என்பது தமிழர்களின் வாழ்வியல் கோட்பாடு.
வள்ளுவரின் இல்வாழ்க்கையைப் பற்றிய இந்தக்கருத்து
தமிழர்களின் வாழ்வியல் பண்பாட்டின் வெளிப்பாடு.


3.2.2 துறவிலும் சிறந்தது இல்வாழ்க்கை

‘பற்று‘ இல்லாதவர் இந்த உலகத்தில் ஒருவரும் இல்லை
என்பார்கள் சமயவாதிகள். அந்தப் பற்றைத் துறப்பது
மிகவும் கடினம். இவ்வுலகப்பற்றை, குறிப்பாக இல்வாழ்க்கைப்
பற்றைத் துறத்தல் அரியசெயல். எனவே, வாழ்க்கைப்பற்றை -
இல்வாழ்க்கைப் பற்றைத் துறந்துவாழும் துறவிகளைப் பெரிதும்
போற்றி ஒழுகுவர் சமயச் சார்புடையவர்கள். அதனால்
சமயத்துறவிகள் சமுதாயத்தில் பெரும் செல்வாக்குடன்
இருப்பதுடன் அறவுரை கூறும் ஆசான்களாகவும் திகழ்கின்றனர்.

‘துறவு‘ என்ற தலைப்பில் ஓர் அதிகாரத்தையே அமைத்து, துறவு
பற்றிப் பல கருத்துகளை வழங்கிய வள்ளுவர், இல்லறத்திற்குக்
கொடுக்கும் தலைமை, அவரது சமயம் கடந்த மாட்சிமையைக்
காட்டும். எனவே, இல்லறத்தினைப் பற்றிக்குறிப்பிடும் பொழுது
எல்லாம், துறவறத்தைவிட, அது சிறப்பு வாய்ந்தது, உயர்ந்தது
என்றே சொல்லுகிறார். இதற்கு முன்னர் இல்லறத்தினால்
கிடைக்கும் இன்பம் பற்றிக் குறிப்பிடும்போது (குறள் :46),
“இல்வாழ்க்கையில் பின்பற்ற வேண்டிய நல்லொழுக்கத்தின்படி
ஒருவன் வாழ்ந்தால் போதும்; அவன் இல் வாழ்க்கைக்குப்
புறம்பான துறவறத்திற்குச் செல்லவேண்டாம். அங்கு இதைவிட
சிறந்த பயன் எதுவும் இல்லை” என்று கூறினார். அடுத்த
நிலையில், நல்ல முறையில், இல்வாழ்க்கைக்கு உரிய அறத்துடன்
இல்வாழ்க்கை வாழ்பவன், வேறு பல திறத்தாலும் முயற்சி
செய்பவர்கள் அனைவரையும் விட மிகவும் உயர்வானவன்,
தலைமையானவன் என்று குறிப்பிடுகிறார் வள்ளுவர்.


இயல்பினான் இல்வாழ்க்கை வாழ்பவன் என்பான்
முயல்வாருள் எல்லாம் தலை


(குறள்:47)


(இயல்பினான் - அறத்தின் இயல்போடு வாழ்பவன்,
தலை - தலைமையானவன்)

இதில் ‘முயல்வார்‘ என்பதற்குப் பலரும் பலவிதமான
கருத்துரைகளை வழங்கினாலும், அவர்களும் மறைமுகமாக,
இல்லறத்திற்குப் புறம்பான முயற்சியாகிய துறவு நிலையையே
சுட்டுகின்றனர். பரிமேலழகர் முதல் பாவாணர் வரையிலும்
‘முயல்வார்‘ என்பது துறவு நெறியாரையே குறிக்கும் என்று
குறிப்பிட்டுள்ளனர். எனவே, இல்வாழ்க்கையில் அறத்துடன்
வாழ்பவன், சமயத்தாரால் போற்றப்படும் துறவிகளை விடவும்
உயர்வானவன், தலைமையானவன் என்பது வள்ளுவர் கருத்து.
மேலும் நல்லறத்துடன் நடத்தப்படும் இல்லறம், இவ்வுலக
வாழ்க்கையில் தலைமையானது, என்று வள்ளுவர் கருதுகிறார்.