3.5 விருந்து ஓம்பல்

‘ஒம்புதல்‘ என்றால் பாதுகாத்தல் என்று பொருள். விருந்து
ஓம்புதல் தமிழர்களின் முதன்மையான பண்பாட்டுக் கூறு.
சத்திரம், சாவடி, உணவு விடுதி என எதுவும் இல்லாத அந்தக்
காலத்தில், ஊருக்குப் புதிதாக வந்தவர்களைப் பார்த்து,
அழைத்துச் சென்று, உணவும், தங்குமிடமும் கொடுத்து உதவுவது,
தமிழர்களின் பண்பாடாகக் கருதப்பட்டது.


இல்லறம் நடத்தும் கணவனும் மனைவியும் அன்புடையராயிருந்து,
தம் இல்லத்திற்கேனும், ஊருக்கேனும் புதிதாக வந்தோரை
உறையுளும், உணவும்     கொடுத்துப் பேணுவர். இது,
இல்லறத்தாரின் தலையாய கடமையாகக் கருதப்பட்டது. தமிழரின்
பண்பாட்டுக் கூறில் ஒன்றான விருந்தோம்பலைப்பற்றி வள்ளுவர்
ஓர் அதிகாரமே இயற்றியுள்ளார்.


3.5.1 விருந்தும் மனநிறைவும்

விருந்து ஓம்பல் இல்வாழ்வார்களின் கடமைகளில் ஒன்றுதான்;
இருந்தாலும் எத்தனை பேருக்கு விருந்து கொடுப்பது? எத்தனை
நாளுக்குக் கொடுப்பது? இப்படியே செய்தால் நம் பொருளாதாரம்
என்னவாகும்? என்ற வினாக்கள் எழும்.

இதற்கு வள்ளுவர் விடை கூறுகிறார். எவன் ஒருவன் முக
மலர்ச்சியுடன் விருந்தினரை ஓம்புகிறானோ, அவனுக்கு வறுமையே
வராது. செல்வத்தின் தெய்வமாகிய திருமகள், உள்ள மகிழ்ச்சியுடன்
அவன் இல்லில் உறைந்திருப்பாள். எனவே அவனுக்கு வறுமையே
வராது. இதனை,


அகன் அமர்ந்து செய்யாள் உறையும் முகன் அமர்ந்து

நல்விருந்து ஓம்புவான் இல்

(குறள்:84)


(அகன் அமர்ந்து = மனம் மகிழ்ந்து, செய்யாள் = திருமகள்
(செல்வத்தின் கடவுள்) இல் (இல்லம்) = வீடு)

என்ற குறளில் குறிப்பிடுகிறார் வள்ளுவர். பிறர் மகிழ்ந்து
உண்ணுகிற காட்சியைப் பார்த்து விருந்து ஓம்புகிறவன் மகிழ்வான்,
அந்த மகிழ்வு அவனுக்கு மனநிறைவைக் கொடுக்கும். தன்
குழந்தைக்கு உணவு ஊட்டி மகிழும் தாய் அடையும்
மனநிறைவை, விருந்து ஓம்புபவன் அடைவான். தாயின் உள்ளம்,
மகிழ்ச்சியில் செழிக்கும். இதைப்போல்தான், விருந்தை ஓம்புபவனும்
மனமகிழ்ச்சியும் நிறைவும் அடைவான் என்கிறார் வள்ளுவர்.


3.5.2 விருந்தும் முகமலர்ச்சியும்

வரும் விருந்தினர்களை அழைத்து அவர்களுக்கு உணவு
கொடுப்பது மட்டும் முக்கியமல்ல. அவர்களை வரவேற்பதில்,
அவர்களிடம் நடந்து கொள்ளுகிற முறையில் (Treatment) தான்
விருந்தின் சிறப்பே அமைந்திருக்கிறது.

‘மதியாதான் வாசல் மிதியாமை நன்று‘ என்பது தமிழ்ப் பழமொழி,
தன்னை மதித்து வரவேற்காதவன் வீட்டிற்குச் செல்லாது இருப்பது
நல்லது என்பது இதன் பொருள். நீங்கள் எந்த அளவுக்கு
அவர்களிடம் அன்புடையவர்களாய் இருக்கிறீர்கள்; எந்த அளவுக்கு
மனமகிழ்ச்சியுடன் விரும்பி விருந்தைக்     கொடுக்கிறீர்கள்
என்பனவற்றை உங்கள் முகத்தைப் பார்த்த உடனேயே
விருந்தினர்கள் தெரிந்து கொள்வார்கள். முகம் கோணாமல்
கொடுக்கும் விருந்தே, உண்மையான விருந்து. இது ஓர் உவமையின்
மூலம் சிறப்பாக விளக்கப்பட்டுள்ளது.


அனிச்சம் என்ற ஒரு பூ மலர்களிலே மிகவும் மென்மையானது.
இயல்பாக மென்மையாக உள்ள பூக்களிலும் மென்மை வாய்ந்தது
அனிச்சம்பூ. அதனை மோந்தாலே வாடிவிடுமாம். மூச்சுக்காற்றின்
வெப்பம் கூடத் தாங்காத மலர். ஆனால் விருந்தினரோ,
அதனினும் மென்மையானவர்கள். அவர்கள் வீட்டாரின் முகம்
வேறுபட்டு காணப்பட்டாலே மனம் வருந்தித் திரும்பி விடுவர்.
இப்பொருள் அமைந்த வள்ளுவரின் குறள் இதோ:


மோப்பக் குழையும் அனிச்சம் முகம் திரிந்து
நோக்கக் குழையும் விருந்து


(குறள் : 90)


(மோப்ப = மோந்தால், அனிச்சம் = அனிச்சம்பூ, திரிந்து = மாறி,
நோக்க = பார்க்க, குழையும் = வாடிவிடுவர்)

- என்பது குறள்.

அனிச்சம்பூ, தொட்டு முகந்தால் வாடும் தன்மை உடையது.
ஆனால் தொலைவிலிருந்து நோக்கும் பொழுதே வீட்டார்
முகம்வேறுபட்டால், விருந்தினர் முகம் வாடிவிடும். எனவே,
விருந்தோம்புவோர் விருந்தினரை இன்முகம் காட்டி வரவேற்க
வேண்டும் என்கிறார் வள்ளுவர்.