4.3 நடுவு நிலைமை

‘நடுவு‘ என்றால், இரண்டு பக்கத்திற்கும் நடுவில் என்று பொருள்.
இரண்டு பக்கங்களுக்கும் பொதுவாக ஒருவன், எல்லா நிலையிலும்,
எல்லாச் சூழலிலும், வேண்டியவர், வேண்டாதவர் என்ற பாகுபாடு
இன்றி , எல்லோருக்கும் பொதுவாக இருக்கும் பொழுது, அவனை
‘நடுநிலையாளன்‘ என்று குறிப்பிடுகிறோம்.


உலகில் நெடுங்காலமாக நாடுகளிடையே சண்டைகள் நடைபெற்று
வருகின்றன . பழைய காலத்தில், முடி ஆட்சிக் காலத்தில், தம்
நாட்டின்     எல்லையை விரிவுபடுத்தவும், தம் நாட்டின்
பொருளாதாரத்தை மேம்பாடு அடையச் செய்யவும், தமது
சர்வாதிகாரத்தை நிலை நாட்டவும், மன்னர்களுக்கு இடையே
போர்கள் நிகழ்ந்தன. இன்றும் எல்லைத் தகராறிலிருந்து
இனத்தகராறு வரையிலும் பல காரணங்களுக்காகப் போர்கள்
நடைபெறுகின்றன. ஆட்சி அமைப்பில் எத்தகைய மாறுதல்
ஏற்பட்டாலும், அறிவியல் வளர்ச்சியில் எத்தகைய முன்னேற்றம்
ஏற்பட்டாலும் இன்றும் சண்டைகள் ஒயவில்லை. சண்டைகளை
நிறுத்தவும், நாடுகளுக்கு இடையே சமாதானத்தை ஏற்படுத்தவும்,
ஐக்கிய நாடுகளின் சங்கம் (United Nations Organisation) என்ற
ஓர் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது, இந்த அமைப்பு எந்தப்
பக்கமும் சாராத ஒரு நடு நிலைமையோடு இயங்குகிறது, இயங்க
வேண்டும்.

இன்றைய நிலையிலும் மட்டுமல்ல என்றைக்கும் தேவைப்படும்
நடுவுநிலைமையின் பயனை வள்ளுவர்     இரண்டாயிரம்
ஆண்டுகளுக்கு முன்பே உணர்ந்திருந்தார். அதன் வெளிப்பாடே
வள்ளுவர் நடுவுநிலமை பற்றிக்கூறும் கருத்துகள்.


நடுவுநிலைமை, அரசர்க்கும், நாடுகளுக்கும் இடையேயான
அமைப்புகளுக்கு மட்டுமன்று; ஒரு குடும்பத் தலைவனுக்கும்
தலைவிக்கும் தேவை. அதனால், அவன் குடும்பம் மட்டும் அல்ல,
அவன் சார்ந்த சமுதாயம் நல் உறவையும், அமைதியையும் பெறும்
என்று வள்ளுவர் கருதினார். வள்ளுவரின் இந்தக் கருத்து நடுவு
நிலைமை பிறழாமல் வாழ வேண்டும் என்ற தமிழர் பண்பாட்டின்
வெளிப்பாடு ஆகும்.


4.3.1 நடுவு நிலைமையும் இல்வாழ்க்கையும்

நடுவு நிலைமைக்கும், இல்வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? குடும்ப
வாழ்க்கையின் மகிழ்வுக்கும், அமைதிக்கும், வெற்றிக்கும் காரணமே
குடும்பத்தலைவனின் அல்லது தலைவியின் நடுவுநிலைமைக்
கொள்கை தானே ?

குழந்தைகளிடம் வெளிப்படுத்தும் அன்பு, செய்யும் உதவிகள்,
காட்டும்     சலுகைகள் விருப்பு வெறுப்போடு இருந்தால்,
எல்லோரிடமும் அன்பைப் பெற முடியுமா? மரியாதையைத்தான்
பெற இயலுமா? இல்லறத்தின் வெற்றியே நடுவுநிலைமையில் தான்
உளது .

இல்வாழ்க்கையில் பின்பற்றும் நடுவுநிலைமை எவ்வாறு இருக்க
வேண்டும் என்பதை வள்ளுவர், மிக எளிமையாக ஓர்
எடுத்துக்காட்டு மூலம் விளக்குகிறார்.

• தராசும் நடுவு நிலைமையும்
தராசு நமக்கு அறிமுகமான ஒரு கருவி. எடை போடுவதற்குப்
பயன்படுத்தும் ஒன்று, அது ஓர் இயந்திரம். அதற்கு விருப்பு
வெறுப்பு கிடையாது . தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடு
இல்லை. எடை சரியாக இருந்தால், அது தன் கடமையைச் செய்து
உண்மையான எடையைக் காட்டும்.இதுஅன்றாடம் காண்கின்ற ஒரு
காட்சி. நம் அனுபவத்திற்கு உட்பட்ட ஒன்று, ஒரு பக்கம் உள்ள
தட்டில் 100 கிராம் தங்கத்தையும், இன்னொரு பக்கம் உள்ள தட்டில்
1 கிலோ இரும்பையும் இடுங்கள். 1 கிலோ இரும்பை விட 100கிராம்
தங்கம் விலை அதிகம் உடையது. தன்மையிலும், தரத்திலும்
உயர்ந்தது. இரும்பைவிட மக்கள் தங்கத்தையே விரும்புவர்,
இருப்பினும், தராசு, தங்கத்திற்காகத்தாழ்ந்து கொடுக்குமா? சலுகை
காட்டுமா? காட்ட முடியுமா ? முடியாது. ஏன்? தராசிற்குத்
தட்டிலிருக்கும் பொருளைப் பற்றிக்கவலை இல்லை. அதன்
எடைதான் முக்கியம். அதை வைத்துத்தான் , சீர்தூக்கிப் பார்க்கும்;
முடிவை வெளிப்படுத்தும். அறிவு நிறைந்த சான்றோருக்கு உரிய
சிறப்பைப் பற்றிச் சொல்லும் பொழுது வள்ளுவர்,


சமன் செய்து சீர் தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்

கோடாமை சான்றோர்க்கு அணி.

(குறள்: 118)


(கோல் = தராசு, ஒருபால் கோடாமை = ஒரு பக்கம் சாயாமை,
அணி = அழகு)

என்று குறிப்பிடுகின்றார்.

இயல்பாகச் சமனாக நின்று, தன்னிடத்தில் வைத்த பொருளின்
எடையை வரையறுத்துக் காட்டுவது துலாக்கோல். அதைப்போல,
சமநிலையாக இருந்து ஒருபக்கமும் சாயாது உண்மையை உரைத்தல்
அறிவு நிறைந்தார்க்கு அணியாகும் என்கிறார் வள்ளுவர்.

பொருள் பொன்னா, இரும்பா அதைப் பற்றிக் கவலை இல்லை,
அதன் எடைதான் முக்கியம். நபர் முக்கியம் அல்ல, அவரது செயல்
அல்லது பண்புதான் முக்கியம். அதன் அடிப்படையில்தான் நீதி
வழங்கப்படும். இல்வாழ்க்கையிலும் இத்தகைய நடுவுநிலைமை என்ற
கொள்கை பின்பற்றப்படுமானால், குடும்பமும், குடும்பத்தோடு
தொடர்பு உடைய பிறரும் நன்மை பெறுவர் என்கிறார் வள்ளுவர்.


4.3.2 நடுவு நிலைமையும் வழித்தோன்றலும்

மேலும், நடுவு நிலைமை பிறழ்ந்து நடப்பவர்களுக்கு வள்ளுவர்
ஒரு எச்சரிக்கையும் செய்கிறார்.

• முன்னோர் செய்த புண்ணியம்
சிலரைப் பார்த்து ‘உன் தாத்தா செய்த புண்ணியம், இன்றைக்கு நீ
நன்றாக இருக்கிறாய்‘ என்று சொல்கிறார்கள், சிலரைப் பார்த்து,
‘இவன் தந்தை செய்த பாவம் சும்மா விடுமா? ஊரை அல்லவா
கொள்ளை அடித்தான்? மக்கள் வயிற்று எரிச்சல் சும்மா விடாது.
அதனால்தான் அவன் பிள்ளைகள் இப்படி நடுத்தெருவில்
நிற்கிறார்கள்‘ என்று சொல்கிறார்கள்.     கிறித்தவர்களின்
விவிலியத்திலும் ‘ஒருவன் செய்யும் பாவத்தை மூன்றாம் நான்காம்
தலைமுறை வரையிலும் விசாரிக்கிறவனாக இருக்கிறேன்‘ என்று
இயேசு கூறுகிறார். வள்ளுவரும் நீங்கள் செய்யும் பாவம்
உங்களோடு முடிந்து விடாது, உங்கள் மக்களையும் அதாவது
வழித்தோன்றல்களையும் பாதிக்கும் என்று எச்சரிக்கை செய்கிறார்.
நீங்கள் செய்யும் பாவத்திற்கு அவர்கள் தண்டனை அனுபவிக்காமல்
இருக்க     வேண்டுமானால், உங்கள் வழித்தோன்றல்களிடம்
உங்களுக்கு அன்பு இருக்குமானால், நீங்கள் எந்தப் பாவத்தையும்
செய்யாதீர்கள்; நடுவுநிலைமை பிறழ்ந்த எந்தச் செயலையும்
செய்யாதீர்கள் என்று வேண்டுகிறார் . எனவே, ஒருவன் செய்யும்
தீமைகள்,அவன் வாழ்வோடு , அவன் காலத்தோடு முடிந்து விடாது.
அவன் வழித்தோன்றுகின்றவர்களையும் அது பாதிக்கும் என்கிறார்
வள்ளுவர். இதனைத்


தக்கார் தகவு இலர் என்பது அவர் அவர்
எச்சத்தால் காணப் படும்.


(குறள்: 114)


(தக்கார் = நடுவுநிலைமை உடையவர் (நேர்மையானவர்),
தகவுஇலர் = நடுவு நிலைமை இல்லாதவர், எச்சம் = பிள்ளைகள், எஞ்சி நிற்பது)

என்ற குறளில் குறிப்பிடுகிறார் வள்ளுவர்.

ஒருவர் நேர்மை (நடுவுநிலைமை) உடையவர், நேர்மை இல்லாதவர்
என்னும் உண்மை, ஒருவரது வழித்தோன்றல்களால் அதாவது
மக்களால் அறியப்படும். இது     பெரும்பான்மையான
உரையாசிரியர்களின் கருத்து. வழித்தோன்றல்களைப் பார்த்தாலே
தெரியும்; ஒருவரது நேர்மைக்கு வேறு சான்று தேவையில்லை என்று
கூறுகின்றனர்.

ஆனால், பேராசிரியர்.மு.வரதராசனார் போன்றோர், ‘ஒருவர்க்குப்பின்
எஞ்சிநிற்கும் புகழாலும் பழியாலும் காணப்படும்‘ என்கின்றனர்.

வள்ளுவர் எந்த ஒரு கருத்தைச் சொன்னாலும், அதை ஒரு குறுகிய
கண்ணோட்டத்தோடோ, குறுகிய எல்லைக்குள் அடக்கியோ
கூறுவதில்லை. பொதுவாகவே கூறுவார். அது அவரது தனிச்சிறப்பு.

எனவே, இங்கு, ‘எச்சம்‘ என்பது தன்பின் எஞ்சி வாழும்
வழித்தோன்றல்களுக்கும் பொருந்தும்; எஞ்சி நிற்கும் புகழுக்கும்
பழிக்கும் பொருந்தும், மேலும் விளக்கம் தேடினால் இன்னும் பல
கருத்துகளுக்கும் பொருந்தும்.

இல்வாழ்வான் நேர்மையாகச் செயல்படவேண்டும், அதனால் அவன்
குடும்பம் மட்டுமல்ல, அவன் சார்ந்த சமுதாயமும் பயன்பெறும்
என்பது வள்ளுவர் எண்ணம்.



பயில்முறைப் பயிற்சி

‘எச்சம்’ என்ற சொல்லை இருவகையில் பொருள்
கொண்டு ‘தக்கார்’. என்ற சொற்களுக்கு விளக்கம்
தருவதைப்     படித்தீர்கள். ‘நடுவுநிலைமை’ என்ற
அதிகாரத்தின் கீழ் வருவதால் ‘தக்கார்’ ‘தகவிலர்’
என்ற சொற்களை நடுவு நிலை பேணுபவர், நடுவு நிலை
தவறியவர் என்று பொருள் கொள்ள வேண்டும். நடுவு
நிலை பேணுவதும் தவறுவதும் எப்போது தெரியவரும்.
குறிப்பிட்ட சூழலின் எல்லாத் தகவல்களையும் ஒருவர்
உள்வாங்கி, அவற்றின் தன்மைகளை ஆய்ந்து, அதன்
முடிவாக உண்மை நிலை அறிந்து, அறிந்த முடிவைப்
பிறழாது வெளிப்படுத்தும் நிலையில் தான் ஒருவர் நடுவு
நிலையாளர் ஆகிறார். உள்வாங்குதல், ஆய்தல் போன்ற
மனத்தளவு நிகழ்வுகளின் ‘எச்சமாக’ வெளிவரும் தீர்ப்பு
தான் ஒருவர் நடுவு நிலையாளர் / நடுவு நிலையற்றவர்
என்ற முடிவுக்கு அடிகோலுகிறது என்றும் பொருள்
கொள்ளலாமா? சிந்தியுங்கள். அல்லது ‘எச்சம்’ என்ற
சொல்லுக்கு வேறு வகையிலும் பொருள் கொள்ள
முடியுமா?

மேற்சொன்ன மூவகைப் பொருள்களில் எது மிகவும் ஏற்ற
பொருள் என்று நீங்கள் கருதுகிறீர்கள்?